இயக்குநர் கவுதம் மேனன் ஒரு இயக்குநராக இருந்தாலும் தயாரிப்பாளராக மாறி தனது போட்டோபோன் நிறுவனத்திற்காக இயக்குநர் ராம் இயக்கத்தில் ‘தங்கமீன்கள்’ படத்தினைத் தயாரித்தார். இப்போது பட விநியோகஸ்தராகவும் மாறியிருக்கிறார்.
புதுமுக நடிகர், நடிகைகளை வைத்து குறைந்த பட்ஜெட்டில் மிக அழகான கதையுடன், நம்பிக்கையுடன் எடுக்கப்பட்டிருக்கும் ‘பூவரசம் பீப்பீ’ என்ற படத்தை வாங்கி வெளியிடவிருக்கிறார்.
இயக்குநர் கெளதம் மேனனின் நண்பரும் பிரபல ஒளிப்பதிவாளருமான மனோஜ் பரமஹம்ஸாதான் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் சிறார்களே ஹீரோக்களாகவும், ஹீரோயின்களாகவும் நடித்திருக்கிறார்கள், வசந்த், கிஷோஷ், வர்ஷினி, வாணி ஆகிய நால்வரே முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்ஸா. அருள்தேவ் இசையமைத்திருக்கிறார். எழுதி, இயக்கியிருக்கிறார் ஹலிதா ஷமீம் என்னும் இளம் பெண் இயக்குநர். இவர் சமுத்திரக்கனி, மிஷ்கின், புஷ்கர் காயத்ரி ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
சிறு பிள்ளைகள் வளர்ந்துவரும்போதே வன்முறை எதிர்ப்புடனேயே வளர வேண்டும் என்பதை போதிக்கிறதாம் இப்படம். சிறு குழந்தை பிராயத்தில் அனைவருமே கடந்து வந்திருப்போமே பூவரசம் இலையில் பீப்பீ செய்து ஊதுவது.. இதைத்தான் தலைப்பாக வைத்திருக்கிறார். இந்தப் படத்தைப் பார்க்கும் அனைவரையும் அந்த பால்ய பருவத்தை ஒரு கணம் நிச்சயமாகத் திரும்பிப் பார்க்க வைக்கும் என்கிறார் இயக்குநர்..!
இப்போதுதான் ‘கோலிசோடா’ இந்த வருட தமிழ்ச் சினிமாவை தூக்கிப் பிடித்து நிறுத்தியிருக்கிறது. அடுத்து வரும் இந்தப் படமும் நிச்சயம் அதைத் தொடரும் என்கிறார்கள் இந்தப் படத்தை பார்த்துவிட்ட சினிமா பிரமுகர்கள்.