குரு கவுண்டமணியுடன் இணைந்து நடிக்கிறார் சிஷ்யர் சிவகார்த்திகேயன்..!

குரு கவுண்டமணியுடன் இணைந்து நடிக்கிறார் சிஷ்யர் சிவகார்த்திகேயன்..!

தமிழ்த் திரையுலகத்தின் நகைச்சுவையில் மன்னனாகத் திகழும் கவுண்டமணியுடன் இணைந்து நடிக்கப் போகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன் கவுண்டமணியின் தீவிர ரசிகர். விஜய் டிவியில் சிவகார்த்திகேயன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தபோதுகூட இடையிடையே கவுண்டமணி போலவே பேசியும் காட்டுவார். “மகான் கவுண்டமணி சொல்லியிருக்கிறார்…” என்று பல முறை, பல நிகழ்ச்சிகளில் உச்சரித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இதனாலேயே கவுண்டமணி நாயகனாக நடித்திருந்த ’49-ஓ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்குக்கூட சிவகார்த்திகேயனை சிறப்பு அழைப்பாளராக அழைத்து கவுரவப்படுத்தினார் கவுண்டமணி.

தற்போது ஓய்வில் இருந்து வரும் கவுண்டமணி மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனும் நடிக்கவிருக்கிறார். இதற்காக இருவரும் நேற்று சந்தித்துப் பேசியுள்ளனர்.

யார் தயாரிப்பாளர், யார் இயக்குநர் என்பது மட்டும் இன்னமும் முடிவாகவில்லை. ஆனால் இந்தத் திட்டத்திற்கு சிவகார்த்திகேயனே விருப்பப்பட்டிருக்கிறார். இதனாலேயே முதல் சந்திப்பிலேயே கவுண்டர் இதற்கு ஒத்துக் கொண்டாராம்.

மிக விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கூட்டணியை எந்தத் தயாரிப்பாளர் ஏற்றுக் கொண்டாலும் அவர் லாபத்தை அள்ளுவார் என்பதில் சந்தேகமில்லை.

Our Score