Sri Saravana Films நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பில் B.சதீஷ் குமார் தயாரித்துள்ள திரைப்படம் ‘தீர்க்கதரிசி’.
இந்தப் படத்தில் சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இரட்டை இயக்குநர்களான P.G.மோகன் – L.R.சுந்தரபாண்டி இருவரும் இணைந்து இந்தப் படத்தை இயக்கியுள்ளனர்.
கமர்ஷியல் க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த ‘தீர்க்கதரிசி’ படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதையொட்டி இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக் குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இவ்விழாவினில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “இந்தப் படத்தின் இயக்குநர்கள் தொழில் நுட்பத்தில் சிறந்த வல்லுநர்கள். இந்தப் படத்தின் காட்சிகளைப் பார்க்கும்போது மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்டது தெரிகிறது. சத்யராஜ் சாரின் அருமையான நடிப்பு இந்தப் படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. இந்தப் படம் பெரும் வெற்றியடைய அனைவருக்கும் வாழ்த்துகள்…” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசும்போது, “இந்தப் படத்தின் இயக்குநர்கள் மிகச் சிறந்த இயக்குநர்களிடம் இருந்து வந்தவர்கள். அது இந்த படத்தில் நன்றாகத் தெரிகிறது. ஒரு நேர்த்தியான காவல்துறை படமாக இருக்குமென்பது பார்க்கும்போதே தெரிகிறது. அதோடு சத்யராஜ் சாரின் நடிப்பு, ‘தீர்க்கதரிசி’ என்ற தலைப்புக்கு ஏற்றவாறு அற்புதமாக இருக்கிறது. ‘அஞ்சாதே’ படத்தில் சிறப்பாக நடித்த அஜ்மல் இந்த படத்தில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்.“ என்றார்.
இயக்குநர் ஹரி பேசும்போது, “இந்தப் படத்தில் டிரெய்லர், பாடல்கள் என்று அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. போலீஸ் திரைப்படம் பார்ப்பதே ஒரு கர்வம்தான். இந்தப் படத்தில் அஜ்மல் காவல் துறைக்கே உண்டான மிடுக்குடன் அழகாக இருக்கிறார். கதவுகள் மூடப்படாத ஒரே துறை காவல் துறைதான். அதைக் கருவாக வைத்து படம் எடுத்திருக்கும் படக் குழுவிற்கு எனது வாழ்த்துகள்.“ என்றார்.
நடிகர் ராம்குமார் பேசும்போது, “இந்தப் படத்தின் ஒட்டு மொத்தக் குழுவிற்கும் எனது வாழ்த்துகள். இந்தப் படத்தின் காட்சிகள் மிகச் சிறப்பாக இருக்கிறது. படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்.” என்றார்.
நடிகர், இயக்குநர் தம்பி ராமையா பேசும்போது, “காவல்துறை கதாபாத்திரங்கள்தான் எனது வாழ்கையில் திருப்புமுனையாக இருந்தது. இந்த படமும் காவல் துறை பற்றிய கதையாக இருக்கிறது. இந்தப் படத்தின் இயக்குநர்கள் நிறைய அனுபவங்களுடன் களமிறங்கியிருக்கிறார்கள். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்.” என்றார்.
நடிகர் அஜ்மல் பேசும்போது, “சத்யராஜ் சாருடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அது எனக்கு இந்தப் படத்தின் மூலமாக நிறைவேறி இருக்கிறது. ஜெய்வந்த், துஷ்வந்த் மற்றும் நான் இணைந்து ஒரு குழுவாக நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது.
இந்தப் படத்தின் இயக்குநர் கதை சொல்லும்போதே இப்படத்தில் நாம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது. இந்தப் படத்தில் 15 முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. அது உங்களைக் கண்டிப்பாக ஈர்க்கும். நீங்கள் இந்த படத்திற்கு பெரும் ஆதரவு தர வேண்டும்.“ என்றார்.
நடிகர் துஷ்யந்த் பேசும்போது, “இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. என்னுடன் இணைந்து நடித்த சக நடிகர்களுக்கு இந்நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன்.“ என்றார்.
இயக்குநர் P.G.மோகன் பேசும்போது, “இது எனது முதல் படம், மிகவும் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறோம். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் படமாக இருக்கும், இதற்கு உங்கள் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன். இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.“ என்றார்.
இயக்குநர் L.R.சுந்தரபாண்டி பேசும்போது, “பல ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தில் மீண்டும் இயக்குநராக வந்திருக்கிறேன். இந்த படத்தைக் குறைந்த நாட்களில் நாங்கள் முடிக்கக் காரணம், ஹரி சார் உடன் நாங்கள் பயணித்தபோது கிடைத்த அனுபவம்தான். அவர் மிக வேகமாக வேலை பார்த்தாலும் சிறப்பாக வேலையை முடிப்பார். இந்தப் படம் பரபரப்பாகப் பல திருப்பங்களுடன் உங்களை மகிழ்விக்கும் படத்திற்கு உங்களது ஆதரவைத் தாருங்கள்.” என்றார்.
நடிகர் சத்யராஜ் பேசும்போது, “இது போன்ற சிறிய படங்கள் செய்ய தயாரிப்பாளருக்கு நல்ல அனுபவம் தேவை. தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற இரட்டை இயக்குநர்கள் வரிசையில் இந்த இயக்குநர்களும் இணைய வேண்டும். ஒரு படத்தின் ஹீரோ ஸ்க்ரிப்ட்தான்.
இந்தப் படத்தின் கதையும் அந்த வகையில் சிறப்பாக உள்ளது. அஜ்மல் மிகச் சிறந்த நடிகர் என்பது இந்த படத்தின் மூலம் தெரிந்தது. கண்டெண்ட் சிறப்பாக இருந்தால், வெற்றி பெற்றுவிடலாம். இந்தப் படத்திலும் அது போல் நல்ல கண்டெண்ட் இருக்கிறது. இந்த படம் வெற்றி பெற உங்களது ஆதரவைத் தாருங்கள்.” என்றார்.












