சென்னை சிட்டி கால்பந்து அணியினருக்காக ‘கோல் போடு’ பாடல்..!

சென்னை சிட்டி கால்பந்து அணியினருக்காக ‘கோல் போடு’ பாடல்..!

விளையாட்டுக்கும், இசைக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியின் மகனான ஏ.எச்.காஸிப் இசையமைப்பில் உருவாகியுள்ள  'கோல் போடு' என்ற பாடல் இசைக்கும், விளையாட்டுக்கும் உள்ள உறவை தெள்ளத் தெளிவாக  விளக்குகிறது.

இது பற்றி பேசிய இசையமைப்பாளர் ஏ.எச்.காஸிப், “இசைக்கும், விளையாட்டு துறைக்கும் மனித குலம் தோன்றிய காலத்தில் இருந்தே உறவு நீடித்துக் கொண்டே வருகிறது. பாரம்பரியம்மிக்க நமது சென்னை மாநகர் மக்களுக்கும், நம்மோடு வாழ்ந்த கால்பந்து  விளையாட்டுக்கும்  காலத்தையும்   தாண்டிய உறவு இருந்து கொண்டேயிருக்கிறது. 

இதை சுட்டிக் காட்டி இப்பொழுது 'கோல் போடு'  என்ற பாடலை பதிவு செய்து இருக்கிறோம். சென்னை நகருக்கும், கால்பந்துக்கும் உள்ள காதலை இந்த வீடியோ பாடலின் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறோம்.

ஐ.பி.எல். போலவே சென்னையில்  கால்பந்து அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் விளையாடவிருக்கும் ரோஹித் ரமேஷின்  சென்னை சிட்டி கால்பந்து அணிக்காக உருவாக்கிய பாடல் இது. சென்னை மக்களுக்கு கால்பந்து மேல் உள்ள பிரியத்தை அடையாளம் காட்டும்  பாடலாக இந்த 'கோல் போடு' பாடல் இருக்கும்.

இதை இயக்கியிருப்பவர் இளம் இயக்குநர் அஷ்வின் ரவீந்தரன். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவில், ஸ்ரீதரன் ஜி.கே. எடிட்டிங் செய்ய, சுரேஷ்-சத்யா நடனம் அமைக்க, பிரபல ஆடை அலங்கார நிபுணர் சத்யா, ஏ.எச்.காசிப் மற்றும் விஷால் தட்லாணி ஆகியோருக்கு உடை அலங்காரம் செய்திருக்கிறார்.

பிரபல ஹிந்தி பாடகரும் இசை அமைப்பாளருமான விஷால் தட்லாணி இந்தப் பாடலை பாடி இருக்கிறார். மோகன்ராஜ் பாடலை எழுதியிருக்கிறார். லண்டன் பி.பி.சி. நடத்தும் ‘அஷாந்தி ஒம்காரின் ஷோ’வில் இந்த  வாரத்துக்கான பாடலாக,  'கோல் போடு'  தேர்வு செய்யப்பட்டு உள்ளது...” என்றார் பெருமையாக.