தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளரான டி.சிவா அம்மா கிரியேஷன்ஸ் என்கிற தனது நிறுவனத்தின் சார்பில் இதுவரையிலும் பல படங்களைத் தயாரித்திருக்கிறார்.
‘தெய்வ வாக்கு’, ‘சின்ன மாப்ளே’, ‘ராசையா’, ‘அரவிந்தன்’, ‘மாணிக்கம்’, ’மரியாதை’, ‘சரோஜா’, ‘அரவான்’ ஆகிய குறிப்பிடத்தக்க படங்களை தயாரித்தவர் இவரே. ‘அரவானு’க்கு பிறகு கொஞ்சம் இடைவெளிவிட்டிருந்த டி.சிவா தற்போது, மீண்டும் தயாரிப்புப் பணியில் இறங்கியிருக்கிறார்.
இந்தப் புதிய படத்திற்கு ‘ஜெமினி கணேசனும், சுருளிராஜனும்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். காதலுக்கு பெயர் போன ஜெமினி கணேசனும், காமெடிக்கு பெயரெடுத்த சுருளிராஜனும் இணைந்து நடத்தும் அட்டகாசங்களே படத்தின் கதை, திரைக்கதையாம்.
இதில் ஜெமினி கணேசனாக ‘மெட்ராஸ்’ புகழ் கலையரசன் நடிக்கிறார். இவர் இப்போது ‘கபாலி’ படத்தில் ரஜினியுடன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சுருளிராஜனாக சூரி நடிக்கவிருக்கிறார். ஹீரோக்கள் இந்த இருவரும்தான் என்றாலும் நான்கு கதாநாயகிகள் நடிக்கவிருக்கிறார்கள். மேலும் இளவரசு, மயில்சாமி இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கவிருக்கிறார்கள்.
பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். அம்மா கிரியேஷன் சார்பில் டி.சிவாவும், 2 எம்.பி. அண்ட் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தினரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். பல இயக்குநர்களிடத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ‘ஓடம்’ இளவரசு இப்படத்தை இயக்கவுள்ளார். படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளது.
படம் 2016 கோடை விடுமுறையில் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.









