full screen background image

நடிகர் தனுஷ் மீது நடிகர் சங்கத்தில் கேபிள் டிவி உரிமையாளர்கள் புகார்..!

நடிகர் தனுஷ் மீது நடிகர் சங்கத்தில் கேபிள் டிவி உரிமையாளர்கள் புகார்..!

நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்து கொண்டே வருவதாக அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் மாறி, மாறி திட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த சகிப்புத்தன்மையில்லாத வியாதி அனைத்து பிரிவினரையும் தொற்றிவிட்டதாகவே தெரிகிறது.

சமீபத்தில் நடிகர் தனுஷ், டாடா ஸ்கை டி.டி.ஹெச். விளம்பரத்தில் நடித்தார். அதில் “சில புரியாத மொழி பேசும் சேனல்களை லோக்கல் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மக்களின் தலையில் சுமத்தி அவர்களை முட்டாளாக்கியிருப்பதாக” குற்றம் சுமத்துவதுபோல வசனம் பேசியிருக்கிறார்.

“எனக்கு அந்தப் பிரச்சனையில்லை. ஏன்னா என்கிட்ட டாடா ஸ்கை இருக்கே.. நமக்கு வேணும்கிற சேனலை நாமளே செலக்ட் செஞ்சுக்கலாமே..? நீங்க புரியாத மொழி சேனல்களைத்தான் பார்ப்பேன்னு சொன்னா பாருங்க. உங்க தலையெழுத்து..” என்று கிண்டலடித்து முடித்திருக்கிறார்.

வழக்கம்போல இந்த விளம்பரத்தைப் பார்த்தவுடன் சூடாகிவிட்டார்கள் கேபிள் டிவி ஆபரேட்டர்கள். அவர்கள் தங்களுடைய சங்கத்தின் கூட்டத்தைக் கூட்டி தனுஷை கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார்கள்.

நேற்று மதியம் இது சம்பந்தமாக நடிகர் தனுஷ் மீது, நடிகர் சங்கத்திலும் புகார் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் காயல் ஆர்.எஸ்.இளவரசு பேசும்போது, “நடிகர் தனுஷ் நடித்த விளம்பர படம் ஒன்று சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. அதில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை இழிவுபடுத்துவதுபோல் தனுஷ் பேசியிருக்கிறார். இதனால் தமிழகம் முழுவதிலும் உள்ள 40 ஆயிரம் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மனம் புண்பட்டு உள்ளனர்.

இது குறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தஞ்சை ஜெ.ஜீவா, இணைச் செயலாளர் ஜீ.ஆர்.கதிரவன் ஆகியோருடன் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசரை சந்தித்து புகார் அளித்தோம்.  தனுஷ் மீது நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தி உள்ளோம். இனிமேலும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு இழுக்கு நேரும் வகையில் பேசாமல் இருக்கும்படி, நடிகர்-நடிகைகளை அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டோம். எங்கள் கோரிக்கைகளை பொறுமையாக கேட்டுக் கொண்ட நாசர், இது குறித்து சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் விவாதிப்பதாக வாக்குறுதி அளித்தார்.

பல்லாயிரக்கணக்கான கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் மனதை பாதித்துள்ள நடிகர் தனுஷின் கருத்து ‘வாபஸ்’ பெறப்பட வேண்டும். இந்த வசனத்தை பேசியதற்காக தனுஷ் வருத்தம் தெரிவிக்கவேண்டும்..” என்றார்.

நடிகர் சங்கத்தின் செயற்குழுவில் விவாதிக்கப்படும் அளவுக்கு முக்கியமான விஷயமா பாஸ் இது..?

Our Score