‘இரண்டாம் உலகம்’ தந்த தோல்வியோடு செல்வராகவன் என்ன ஆனார் என்பதை தமிழ்த் திரையுலகம் திரும்பிப் பார்க்காமல் இருக்கிறது.
ஆனால் அவரோ வீட்டில் ஹாயாக குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்கிறாராம். அவருடைய மனைவி கீதாஞ்சலியோ செல்வராகவன் எழுதிய ‘மாலை நேரத்து மயக்கம்’ கதையை சப்தமில்லாமல் படமாக்கிக் கொண்டிருக்கிறாராம்.
இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் யார் என்பது பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரையிலும் தெரியவி்லலை. கீதாஞ்சலிக்கு இது முதல் படம். இவர் செல்வராகவனிடன் உதவி இயக்குநராக பணியாற்றியவர். அப்போதுதான் செல்வாவுடன் காதல் கொண்டு அது கல்யாணத்தில் முடிந்தது.
இந்த ‘மாலை நேரத்து மயக்கம்’ கதையை தனுஷ் நடிப்பில் தான் இயக்கப் போவதாக முன்பே சொல்லியிருந்தார் செல்வராகவன். அதன் பின்னர் தனுஷ் மற்ற படங்களில் பிஸியாகவே தானும் ‘இரண்டாம் உலகத்தில்’ பிஸியாகிவிட்டார். இப்போது பார்த்தால் கணவர்விட்டதை மனைவி கையில் எடுத்திருக்கிறார்.
இந்தத் தகவலையே செல்வராகவன் தனது ட்விட்டரில் எழுதித்தான் வெளியுலகத்துக்கே தெரிந்திருக்கிறது.
கீதாஞ்சலியும் டிவிட்டரில் இது பற்றி சொல்லியிருக்கிறார். “செல்வராகவன் கொடுத்த அழகான கதைக்கு இச்சமயத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது வாழ்த்துகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இயக்குநர் செல்வராகவனின் அடுத்த படத்திற்காக காத்திருக்கிறேன். ஆனால், அவர் சிறிது காலத்திற்கு குழந்தைகளோடு நேரத்தை செலவிட முடிவு செய்திருக்கிறார். ஒரு ரசிகனாக, செல்வராகவன் தனது மனநிலையை மாற்றி விரைவில் அதிரடியாக படம் இயக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்…” என்று தனது ட்விட்டர் செய்தியில் சொல்லியிருக்கிறார் கீதாஞ்சலி.
இப்படி புருஷன், பொஞ்சாதி ரெண்டு பேருமே டிவிட்டர்ல பேசிக்கிட்டால் எப்படி..? உலகம் ரொம்ப முன்னேறிருச்சு..!!!