பத்திரிகையாளர்களை முட்டாளாக்கிய இயக்குநர் களஞ்சியம்..!

பத்திரிகையாளர்களை முட்டாளாக்கிய இயக்குநர் களஞ்சியம்..!

இயக்குநர் மு.களஞ்சியம் ஆந்திராவிற்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தால் உயிருக்குப் போராடி வருவதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், கிட்டத்தட்ட கோமாவில் உள்ளதாகவும் நேற்றைக்கு களஞ்சியத்தின் நண்பர்களிடத்தில் இருந்து பத்திரிகைகளுக்கு செய்திகள் அனுப்பப்பட்டன.

அதே செய்தியில் திருச்சி அப்பலோ மருத்துவமனையில் களஞ்சியம் சேர்க்கப்பட்டுள்ளதால் செலவுக்கு பணம் தேவைப்படுகிறது.. இதற்காக அஞ்சலி தான் நடிக்க வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்தால் அது இந்த நேரத்தில் பெரும் உதவியாக இருக்கும் என்றெல்லாம் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது..

வழக்கமாக வரும் செய்தியென்று நம்பியும்.. இது போன்ற செய்திகளில் யாரும் பொய் சொல்ல மாட்டார்களே என்று நம்பியும் நேற்றைக்கே அனைத்து இணைய இதழ்கள், பத்திரிகைகளிலும் இந்தச் செய்தி வெளியிடப்பட்டது. அதோடு “களஞ்சியத்தின் உயிர் அஞ்சலியின் கைகளில்…” என்று தலைப்பு வைக்கப்ப்பட்டே பல இடங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

kalanjiyam-hospital

ஆனால் இன்றைக்கு பார்த்தால் அந்தச் செய்தி அப்படியே உல்டாவாகி களஞ்சியம் சீரியஸ் கண்டிஷனில் இல்லை. நலமாகவே இருக்கிறார். பொதுவார்டில் இருக்கிறார். கைகளிலும், முதுகிலும் மட்டுமே லேசான காயம் உள்ளது. மற்றபடி அவர் நலமே என்று சொல்லி அவருடைய இப்போதைய புகைப்படமும் நிருபர்களிடத்தில் சிக்கி அவையும் இணையத்தில் வெளியாகிவிட்டன.

இப்படியொரு பொய்யான செய்தியை பரப்பியதில் களஞ்சியத்திற்கு பங்குண்டா இல்லையா என்பதெல்லாம் தேவையில்லாத கேள்வி. அவருக்குத் தெரியாமல் இப்படியொரு நியூஸ் வெளியாக வாய்ப்பே இல்லை என்றே இப்போது தோன்றுகிறது. களஞ்சியம் சொல்லி அவரது நண்பர்கள் இதனை முன்னெடுத்திருக்கிறார்கள் என்றே நம்புகிறோம்.

ஒரு உயிர் சம்பந்தப்பட்ட மேட்டரில் தேவையில்லாமல் பொய் சொன்னதோடு இல்லாமல் அதற்கு மீடியாவையும் உடந்தையாக்க முயன்றிருக்கிறார்கள்.  அஞ்சலிக்கும், களஞ்சியத்துக்குமான பிரச்சினையில் மீடியாக்களை எதற்கு பொய் சொல்ல வைக்க வேண்டும்..? இவங்க சண்டைக்கு நாங்கள்தான் ஊறுகாயா..?

இயக்குநர் மு.களஞ்சியத்தின் உடல்நிலை சம்பந்தமாக நேற்று வெளியான பொய்யான செய்திக்காக வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்..!

Our Score