பொறுப்புக்கு வருவதற்கு முன்பாகவே பொறுப்பான வேலையைச் செய்திருக்கிறார்கள் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி.
பிரபலமான எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவரான பாரிவேந்தரை சந்தித்து தங்களது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களின் நலனுக்காக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர் பாண்டவர் அணியைச் சேர்ந்த நடிகர்கள்.
இதையடுத்து தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் நலிந்த நடிகர்களுக்கு S.R.M. மருத்துவமனைகளில் இலவச மருத்துவ சேவை அளிக்க முடிவாகியுள்ளதாம். மேலும், சங்கத்தின் நலிந்த நடிகர்களின் தகுதியான வாரிசுகளுக்கு S.R.M. பல்கலைக் கழகத்தில் இலவச சீட்டுக்களை வழங்கவும் பாரிவேந்தர் ஒப்புதல் அளித்துள்ளாராம்.
இதற்காக, பாண்டவர் அணியினர் இன்று பாரிவேந்தரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.
இத்தனை ஆண்டு காலமாக ராதாரவியும், சரத்குமாரும் சங்கத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்தும் அவர்கள் செய்யாததை, தங்களது தேர்தல் அறிக்கைகளை முன் வைத்த 24 மணி நேரத்தில், அதிலும் பதவிக்கு வரும் முன்பேயே செய்து காட்டிய பாண்டவர் அணிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் இலவச கல்வித் திட்டத்தில் சினிமா துறையில் பல்வேறு சங்கங்கள் ஏற்கெனவே சேர்ந்துள்ளன. அதேபோல் எஸ்.ஆர்.எம். மருத்துவமனையின் இலவச மருத்துவ சேவையை பல சினிமா சங்கங்களும், சின்னத்திரை சங்கங்களும் பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.