full screen background image

‘லிங்கா’வினால் நஷ்டம். ஜனவரி 10-ல் விநியோகஸ்தர்கள் உண்ணாவிரதப் போராட்டம்..!

‘லிங்கா’வினால் நஷ்டம். ஜனவரி 10-ல் விநியோகஸ்தர்கள் உண்ணாவிரதப் போராட்டம்..!

“சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘லிங்கா’ சூப்பர் டூப்பர் ஹிட். மூன்று வாரங்களை கடந்தும் இன்னமும் படத்திற்கு கூட்டம் வந்து கொண்டேயிருக்கிறது. தியேட்டர்கள் கூடுதலாக கிடைத்திருக்கின்றன. படத்தின் ஒட்டு மொத்த வசூல் 200 கோடியை தாண்டிவிட்டது என்றெல்லாம் தினத்துக்கு ஒரு செய்தி வந்து கொண்டேதான் இருக்கிறது.

ஆனால் இன்னொரு பக்கம், ‘லிங்கா’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தாங்கள் பெரிதும் நஷ்டப்பட்டுவிட்டதாக புலம்பியபடியே இருக்கிறார்கள்.

சென்ற வாரமே போர்க்கொடி தூக்கிய இவர்கள், ‘கூடிய சீக்கிரம் நிவாரணம் வழங்கப்படும். காத்திருங்கள்’ என்று சொல்லி சமாதானப்படுத்தப்பட்டார்கள். அதற்கு பிறகு ‘பள்ளி விடுமுறை காலம் வந்தவுடன் கூட்டம் தானா ஓடி வரும். நீங்க ஏன் கவலைப்படுறீங்க..?’ என்றும் தேறுதல் வார்த்தைகள் சொல்லி அனுப்பப்பட்டார்கள்.

ஆனாலும், இதற்கு பின்பும் எதுவும் நடக்கவில்லையாம். ‘லிங்கா’ படத்தை சில இடங்களில் தூக்கிவிட்டதால் வசூல் பற்றிய பேச்சே எழவில்லை. புதிய படங்களின் வரவால் ‘லிங்கா’வின் வசூல் பல இடங்களில் பாதிக்கப்பட ஏற்கெனவே வந்து கொண்டிருந்த வசூலே குறையத் தொடங்கியவுடன், திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக விநியோகஸ்தர்கள் தெருவுக்குக் கிளம்பிவிட்டார்கள்.

வரும் ஜனவரி 10-ம் தேதி சென்னையில் ‘லிங்கா’ படத்தை வாங்கிய அனைத்து விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் நஷ்டஈட்டிற்கு பதில் சொல்லுமாறு கோரி வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

இந்தப் போராட்டத்திற்கு காவல்துறை இதுவரையில் அனுமதி வழங்கவில்லையென்றாலும், நாங்கள் போராட்டத்தை நடத்தியே தீருவோம் என்று உறுதியுடன் இருக்கிறார்களாம் விநியோகஸ்தர்கள்.

இந்த விஷயத்தை ’லிங்கா’ படத்தின் திருச்சி, தஞ்சாவூர்  ஏரியாக்களில் வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர் சிங்காரவேலன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட ஆடியோ பதிவில் அவர் சொல்லியிருப்பது இதுதான் :

‘லிங்கா’ திரைப்படத்தில் நஷ்டம் ஏற்பட்டது என்று ஏற்கெனவே சொல்லியிருந்தோம். அப்போது ‘லிங்கா’ இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும், வேந்தர் மூவீஸ் சார்பாக அம்மா கிரியேஷன்ஸ் சிவாவும் அறிக்கையொன்றை வெளியிட்டனர்.

‘இந்த படம் நிச்சயம் நல்லா ஓடும். மக்கள் கூட்டம் கூட்டமா வர ஆரம்பிச்சிட்டாங்க. விநியோகஸ்தர்கள் கொஞ்சம் அமைதி காக்கணும்’ என்று பேட்டியும் கொடுத்தனர்.

ஆனால், விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் எல்லாம் துவக்கப்பட்ட நிலையில் ‘லிங்கா’வின் வசூலில் எந்த முன்னேற்றமும் இல்லை.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல முதல் வார கலெக்‌ஷனில் நாங்க கொடுத்த பெரிய தொகையை இந்த படத்தின் வசூல் கவர் பண்ணாது என சொல்லியிருந்தோம். ‘லிங்கா’ ரிலீஸ் ஆன 22 நாளில் நாங்கள் கொடுத்த தொகையில், 30 சதவிகிதத்தை மட்டுமே திரும்பப் பெற்றிருக்கிறோம்.

மக்களிடம் இருந்து பாசிடிவ் ரெஸ்பான்ஸ் கிடைக்காததால், ரஜினியை சந்தித்து உண்மை நிலவரத்தை சொல்ல வேண்டும் என்று நினைத்தோம். டிசம்பர் 22-ல் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் அகில உலக ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சத்யநாராயணாவிடம் ரஜினியை சந்திக்க வேண்டும் என்று அனைத்து விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் இணைந்து மனு கொடுத்தோம். வேந்தர் மூவிஸ், ஈராஸ் நிறுவனங்களுக்கும் மனு கொடுத்தோம். அவர்களிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை.

வேந்தர் மூவிஸ் நிறுவனம், ‘ஈராஸ் நிறுவனத்தைக் கேளுங்கள்’ என்கிறார்கள். ஈராஸ் நிறுவனத்தினர், ‘தயாரிப்பாளரைக் கேளுங்கள்’ என சொல்கின்றனர்.

45 கோடியில் தயாரிக்கப்பட்ட ‘லிங்கா’ படத்தை 220 கோடிக்கு வியாபாரம் செய்திருக்கிறார்கள். ஆனால், விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லை. இதைக் கண்டித்தும், எங்கள் நஷ்டத்தை சரிசெய்ய ஒரு பதில் சொல்லுங்கள் என்ற கோரிக்கையை முன்னிறுத்தியும் ஜனவரி 10-ல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவெடுத்துள்ளோம்.

‘லிங்கா’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், திரையிட்ட திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் இந்த உண்ணாவிரத்ததில் நிச்சயம் கலந்து கொள்கிறார்கள்..” என சொல்லியிருக்கிறார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடக்குமா..? அல்லது அதற்குள்ளாக ஏதாவது நாடகம் நடந்து இவர்களது கண்ணீர் துடைக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!

Our Score