full screen background image

இயக்குநர் ஏ.எஸ்.அமீர்ஜான் காலமானார்..!

இயக்குநர் ஏ.எஸ்.அமீர்ஜான் காலமானார்..!

மூத்த திரைப்பட இயக்குநரான திரு.ஏ.எஸ்.அமீர்ஜான் இன்று அதிகாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 70.

தமிழ், தெலுங்கு மொழிகளில் இதுவரையிலும் 20-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கும் அமீர்ஜான் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் முதல் இயக்குந சீடராவார். கே.பாலசந்தரிடம் ‘மேஜர் சந்திரகாந்த்’ படத்தில் துவங்கி பல ஆண்டுகள் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.

அடிப்படையில் ஒரு எடிட்டரான அமீர்ஜான் புகழ் பெற்ற எடிட்டரான என்.ஆர்.கிட்டுவிடம் உதவியாளாராகப் பணியாற்றி வந்தார். கே.பாலசந்தரின் படங்களுக்கு கிட்டு எடிட்டிங் செய்து வந்தபோது, அமீர்ஜான் கே.பி.யிடம் பழக ஆரம்பித்து பின்பு எடிட்டிங் வேலையைவிட்டுவிட்டு உதவி இயக்குநராகப் பணியாற்றச் சென்றார்.

பல ஆண்டு கால உதவி இயக்குநர் பணிக்குப் பிறகு 1984-ம் ஆண்டு கவிதாலயா நிறுவனம் தயாரித்த ‘பூவிலங்கு’ படத்தை முதன்முதலாக இயக்கினார். இந்தப் படம் சூப்பர்ஹிட் வரிசையில் இடம் பிடிக்க.. இதன் பின்பு கொஞ்சம் இடைவெளிவிட்டுவிட்டு தமிழில் மட்டும் 18 படங்களை இயக்கியிருக்கிறார்.

‘பூவிலங்கு’(1984), ‘புதியவன்’(1984), ‘நெஞ்சத்தை அள்ளித் தா’(1984), ‘இளங்கன்று’(1985), ‘ஓடங்கள்’(1986), ‘நட்பு’(1986), ‘தர்மபத்தினி’(1986), ‘வண்ணக்கனவுகள்’(1987), ‘துளசி’(1987), ‘உழைத்து வாழ வேண்டும்’(1988), ‘சிவா’(1989), ‘எதிர்காற்று’(1990), ‘உன்னைச் சொல்லிக் குற்றமில்லை’(1990), ‘தை மாசம் பூவாசம்’(1990), ‘வணக்கம் வாத்யாரே’(1991), ‘குறும்புக்காரன்’(1991), ‘சின்னச் சின்னக் கண்ணிலே’(2000), ‘காதல் சரிகமப’(2010) என்று இவரது படங்களின் பட்டியல் நீள்கிறது. இவருடைய 5 படங்களுக்கு ‘கவிப்பேரரசு’ வைரமுத்து வசனம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றில் ‘பூவிலங்கு’, ‘புதியவன்’, ‘ஓடங்கள்’, ‘நட்பு’, ‘தர்மபத்தினி’, ‘வண்ணக்கனவுகள்’, ‘துளசி’, ‘சிவா’, ‘உன்னைச் சொல்லிக் குற்றமில்லை’ ஆகிய படங்கள் ஹிட்டடித்த படங்களாகும்.

‘பூவிலங்கு’ படத்தில் முரளியையும், குயிலையும் அறிமுகப்படுத்தினார். ‘நட்பு’ படம் இன்றைக்கும் சிறந்த திரைக்கதைக்காக பாராட்டப்படுகிறது.

‘வண்ணக்கனவுகள்’ மலையாளப் படத்தின் ரீமேக் என்றாலும் அதுவொரு யதார்த்தவாத திரைப்படம் என்று இன்றைக்கும் சினிமா ஆய்வாளர்களால் பாராட்டப்படுகிறது.

‘துளசி’ திரைப்படம் மூட நம்பிக்கைகளை கடுமையாக சாடியிருக்கும் திரைப்படம் என்று பலரின் பாராட்டைப் பெற்றது. குறிப்பாக திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கி.வீரமணி அப்போதே அமீர்ஜானை பெரியார் திடலுக்கு வரவழைத்து அவருக்கு ஒரு பாராட்டு விழாவே நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.  

‘சிவா’ திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து அமீர்ஜான் இயக்கிய ஒரே படம். மிகக் குறுகிய காலத்தில், குறைவான முதலீட்டில் எடுக்கப்பட்டு கவிதாலயாவிற்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்த படம்.

‘உன்னைச் சொல்லிக் குற்றமில்லை’ திரைப்படம் இளைஞர்கள் போதை பொருளுக்கு அடிமையாகும் சம்பவங்களைத் தொகுத்து அதற்கொரு விழிப்புணர்வு படமாக வெளிவந்திருந்தது.

‘தர்மபத்தினி’ படத்தில் இடம் பெற்ற ‘நான் தேடும் செவ்வந்தி பூவிது’ பாடல் இன்றைக்கும் இசைஞானியின் ரசிகர்களுக்கும், தமிழ்ச் சினிமாவின் இசை ரசிகர்களுக்கும் ஒருசேர பிடித்தமான திரைப்பாடல். இந்த ஒரு பாடலுக்காகவே இந்தப் படம் இன்றைக்கும் பேசப்படுகிறது.

பிற்காலத்தில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் டிவி சீரியல்களை இயக்கியபோது, இவரும் அவருடன் இணைந்து பணியாற்றினார்.

தமிழின் முதல் நெடுந்தொடரான ‘ரகுவம்சம்’ தொடரை இயக்கியவர் இவரே. பின்பு ‘கையளவு மனசு’ தொடரையும் இயக்கினார். இதே சீரியலை ஹிந்தியில் சோனி டிவிக்காக ‘சோட்டி ஷி ஆஷா’ என்கிற பெயரில் ரீமேக்கினார். இந்தியா முழுவதும் டிவி சீரியல்களின் துவக்கத்தில் பிரபலமானது இந்தத் தொடர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மின் பிம்பங்கள் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய ‘காதல் பகடை’, ‘பிரேமி’ உள்ளிட்ட பல டிவி சீரியல்களிலும் அமீர்ஜான் இணை இயக்குநராகப் பணியாற்றினார். ‘அண்ணி’ சீரியலை தெலுங்கில் இயக்கினார். ராஜ் டிவிக்காக வாரம் ஒரு தொடர்கதையையும் இயக்கினார். இடையில் ‘வீட்டுக்கு வீடு லூட்டி’ நகைச்சுவை தொடரையும் இயக்கினார். விஜய் டிவி, பாலிமர் டிவியிலும் சீரியல்களை இயக்கியிருந்தார். கடைசியாக கவிதாலயா தயாரிப்பில் கலைஞர் டிவிக்காக ‘அமுதா ஓர் ஆச்சரியக்குறி’ சீரியலை இரு வருடங்களுக்கு முன்பு இயக்கியிருந்தார்.

படைப்பாளிகள் அமைப்பு துவங்கியபோது அதில் இணைந்து கே.பி.க்கு பக்க பலமாக பணியாற்றினார். படைப்பாளிகள் அமைப்பின் சார்பாக உருவாக்கப்பட்ட முதல் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு இவரே தலைவராகவும் இருந்தார். பின்னாளில் படைப்பாளிகள் அமைப்பு கலைக்கப்பட்டு இரண்டு இயக்குநர்கள் சங்கமும் ஒன்றாக இணைந்தபோது ஒருங்கிணைந்த இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளராகப் பணியாற்றியவர் அமீர்ஜான்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காலில் ஆபரேஷன் செய்து வீட்டிலேயே இருந்தார். இந்த நேரத்தில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் காலமானபோது நடக்கக்கூட முடியாத நிலையிலும்  ஊன்றுகோல் உதவியுடன் வந்து தனது குருவுக்கு அஞ்சலி செலுத்திவிட்டுப் போனார்.

இலைகள் உதிர்வது காலத்தின் இயல்புதான் என்றாலும், குருவும், சீடர்களுமாக மிகக் குறுகியக் காலத்தில் விடைபெற்றுச் சென்றது அந்தக் குருகுலத்தைச் சேர்ந்தவர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும் மிகப் பெரும் துயரத்தைக் கொடுத்திருக்கிறது.

இவருக்கு மக்பூல் ஜான் என்ற மனைவியும் தவுலத் பாட்சா என்ற மகனும், ஆயிஷா பானு என்ற மகளும் இருக்கிறார்கள். 

அன்னாரது மறைவுக்கு எமது அஞ்சலிகள்..! 

Our Score