full screen background image

ஃபைட் கிளப் – சினிமா விமர்சனம்:

ஃபைட் கிளப் – சினிமா விமர்சனம்:

வட கிழக்கு கடலோர சென்னைப் பகுதி கடல் வளங்களை தன்னகத்தே பொதிந்து வைத்திருக்கும் பகுதி என்பது நாம் அனைவருமே அறிந்ததுதான்.

கடலின் வளங்களும், கடல் பரப்புகளும் எந்தளவிற்கு கடலோர மக்களின் வாழ்வாதரங்களாக இருக்கிறதோ, அதே அளவிற்கு இன்னும் சில நபர்களின் சட்ட விரோதமான தொழில்களுக்கும், செயல்பாடுகளுக்கும் பயன்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது என்பதும் கண்கூடான உண்மை.

ஆக, நேர்மறையான தொழில் செய்து பிழைக்கும் பெருவாரியான மக்கள், எதிர்மறையான தொழில், செய்து பிழைக்கும் சிறுவாரியான நபர்கள்… இவர்கள் அனைவரும் சேர்ந்து வாழும் நிலப்பரப்பாகவே வட சென்னை என்பது என்றும் இருந்து வருகிறது.

ஆக, இந்த இருவாரியான பிரிவுக்குமான இடைவெளி என்பது வெளியில் இருந்து பார்க்கும் நமக்கு கண்ணுக்குப் புலப்படாத ஒரு இடைவெளியாகத்தான் இருக்கும்.

ஆனால், அங்கேயே பிறந்து வாழும் மக்கள் இந்த இருவிதமான பிரிவுகளுக்கு இடையில்தான் வாழ வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறார்கள்.

அவர்களின் கால் தடங்களினால் அவர்களின் வழித் தடங்கள் மாறி வாழ்த்தை தடமே மாறக் கூடிய அபாயங்களும், அற்புதங்களும் நிறைந்ததாகவே அவர்களின் வாழ்க்கை எல்லா காலக்கட்டங்களிலும் எல்லா ஆட்சிகளிலும் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொண்டால், வட சென்னை என்பதற்கு கொடுக்கப்பட்டிருக்கும், கொடுக்கப்பட்டு வரும் மாறாத அடையாளத்தை நாம் இன்னும் கொஞ்சம் ஆழமாக புரிந்து கொள்ளமுடியும்.

ஒரு திரைப்பட விமர்சனத்திற்கு ஏன் வட சென்னை மக்களின் வாழ்க்கையைப் பற்றிய இவ்வளவு பெரிய முன்னுரை என்று கேட்டால், நடிகரும் இயக்குநருமான விஜயகுமாரும், இப்படத்தின் இயக்குநரான அபாஸ் அ.ரஹமத்தும் “ஃபைட் க்ளப்” திரைப்படத்தின் மூலம் பேச முயலுவது வட சென்னை மக்களின் இந்த வாழ்க்கை துயரத்தைத்தான்.

எப்போதும் வழி தவறிப் போவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளையும் தன்னகத்தே வைத்திருக்கும் வாழ்க்கைச் சூழல், அதற்கு இடையே அன்பையும், அறத்தையும், ஒழுக்கத்தையும், நேர்மை போன்ற விழுமியங்களையும் கடைப்பிடித்து வாழ வேண்டிய நெருக்கடி, அந்த நேர்மை போன்ற விழுமியங்களைக் கடைபிடிப்பதாலாயே ஏற்படும் எதிர்ப்புகள், விரோதங்கள் அதனாலேயே மீண்டும் வழிமாறிப் போகும் வாழ்க்கை அவலங்கள் இதுதான் “ஃபைட் க்ளப்” திரைப்படத்தின் கதை.

திரைப்படத்தின் கதை மட்டுமல்ல; வட சென்னை மனிதர்கள் பெரும்பாலோனோரின் கதையும் இதுதான்.

அறத்தையும், நேர்மையின் விழுமியங்களையும் பிடித்து, அதே பாதையில் தன் மக்களின் இளம் பிள்ளைகளையும் நடை போட வைத்துவிட வேண்டும் என்று துடிப்போடு செயல்பட்டு வரும் பெஞ்சமின் (கார்த்திகேயன் சந்தானம்), பெஞ்சமினைப் பின் தொடர்ந்து தன் வாழ்க்கையை ஒளி நிறைந்ததாக மாற்றிக் கொள்ள முனையும் இளம் வயது செல்வா (விஜயகுமார்)…

வழி தவறிப் போய் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள முனையும் பெஞ்சமினின் தம்பி ஜோசப்(அவினாஷ் ரகுதேவன்) மற்றும் கிருபா(சங்கர் தாஸ்). இவர்களின் இருவேறு காலகட்ட வாழ்க்கையை ரத்தமும், சதையுமாக கொஞ்சம் ராவாகவே பேசியிருக்கிறது “ஃபைட் க்ளப்”.

கதையின் மாந்தர்களாக நம்மை பெரிதும் ஈர்ப்பவர் நாயகனாக வரும் விஜயகுமார் இல்லை. ஜோசப்பாக வரும் அவினாஷ் ரகுதேவனும், கிருபாவாக வரும் சங்கர் தாஸ் இருவரும்தான்.

இவர்களின் கதாபாத்திர வடிவமைப்புதான் படத்தின் ஆகப் பெரும் பலம். தங்கள் பாதையில் இடையூறாக வரும் பெஞ்சமினை தகர்த்து எறிந்து மேலெறிச் செல்ல முயல இருவரின் கதாபாத்திரமும் சிறப்பாக வார்க்கப்பட்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக ஜோசஃப் அமைதியாக இருந்து கொண்டு ஆடும் அந்த ஆடு புலி ஆட்டம் அசரடிக்கிறது.

தனக்கான வன்மத்தை தனக்குள்ளேயே அடக்கி வைத்துக் கொண்டு அதை அடுத்தவன் மூலமாக நிறைவேற்றிக் கொள்ள முனையும் கேரக்டரை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.

கிருபாவாக வரும் சங்கர் தாஸும், பொட்டலம் மாற்றுபவராக வரும்போது காட்டும் உடல் மொழிக்கும், கவுன்சிலராக உயர்ந்த பின்னர் காட்டும் உடல் மொழிக்கும் அத்தனை வித்தியாசங்கள் காட்டி இருக்கிறார்.

அதிகாரமும், பதவியும் கிருபாவின் கைகளுக்கு வந்த பின்னர் அவர் ஆடும் ஆட்டம் திரைக்கதையில் நிதானம் நிறைந்ததாக இருக்கிறது.

ஆனால், ஜோசப் ஆடும் ஆட்டமோ கொரில்லா தாக்குதல் முறையில் இருக்கிறது.

நாயகனாக நடித்திருக்கும் விஜயகுமார் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே வசீகரித்து வைத்திருக்கிறார் என்பது ஆச்சரியமும், சந்தோஷமும் கொடுக்கும் விடயமாக இருக்கிறது.

பெஞ்சமினைப் பின் தொடர்ந்து தன்னை ஒரு சிறந்த கால்பந்தாட்டக்காரனாக மாற்றிக் கொள்ள நினைக்கும் செல்வா(விஜயகுமார்)வின் வாழ்க்கை, பெஞ்சமினின் மரணத்தை தொடர்ந்து பல்வேறு விதமாக திசை மாறுகிறது.

காதலும், அடிதடியும் என்று போக்கிடம் தெரியாமல் திரியும் விஜயகுமாரின் வாழ்க்கையை அவர் போதைக்கும் தவறான போதனைகளுக்கும் ஒப்புக் கொடுக்கும்போது ஒட்டு மொத்தமாக தடம் மாறி அவரையும் அறியாமல் ஒரு பெரும் புதைக்குழிக்குள் விழத் துவங்குகிறார்.

அதை உணர்ந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றாலும், அந்த புதைக் குழி அவரை விடுவதாக இல்லை.

ஏமாற்றங்களையும், விரக்திகளையும் எதிர்கொள்வது வழக்கமாகிப் போனதால் ஏற்படும் கோபத்தையும் வன்மத்தையும் மனதிற்குள் ஒளித்துக் கொண்டு எங்கு செல்கிறோம் என்பதே தெரியாமல் திக்கற்றுப் போகும் வாழ்க்கையை வாழும் கதாபாத்திரத்தை அச்சு அசலாக பிரதிபலித்து இருக்கிறார்.

தன் வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகளால் துவண்டு போய், தன்னைப் பற்றியோ, தன்னைச் சுற்றி உள்ளவர்களின் வாழ்க்கையைப் பற்றியோ யோசிக்க முடியாமல் வாழும் வட சென்னை இளைஞனை கண் முன் நிறுத்தியிருக்கிறார். பாராட்டுகள்.

படத்தின் பெரிய பலம் ஒளிப்பதிவும் இசையும் எடிட்டிங்கும்தான்.

கதாபாத்திரங்களின் உடல் அசைவுக்கு ஏற்ப இழைந்தோடும் இசையும், அதற்கு ஏற்ற முறையில் கொடுக்கப்பட்டிருக்கும் வெட்டுகளும் படத்தின் காண்பனுபவத்தை வித்தியாசமாக்குகின்றன.

லியோன் பிரிட்டோவின் ஒளிப்பதிவு வட சென்னையில் நம் கண்கள் காணாத இடங்களையும், வட சென்னை மக்களின் வாழ்க்கையோடு இயைந்த இடங்களையும் வேறொரு கோணத்தில் அற்புதமாகக் காட்டியிருக்கிறது.

கோவிந்த் வசந்தாவின் இசை வன்முறையினையும் வசந்தமாக மாற்றுகிறது. அடிதடி காட்சிகளில் அவர் கொடுத்திருக்கும் பின்னணி இசை ஒருவிதமான துள்ளும் மன நிலைக்கு பார்வையாளர்களை இட்டுச் செல்கிறது.

படத் தொகுப்பாளர் கிருபாகரனின் எடிட்டிங் படத்திற்கு வேறொரு கலரைக் கொடுக்கிறது. வழக்கமான பாணியில் இல்லாமல் கதை சொல்லலில் புதுவிதமான அனுபவத்தைக் கொடுப்பதிலும் கிருபாகரனின் கத்தரிகள் கச்சிதமான பங்களிப்பைக் கொடுத்திருக்கின்றன.

இசை, எடிட்டிங் இரண்டும் ஒரே புள்ளியில் கை கோர்த்து பயணிக்கும் அதிஅற்புதமான காட்சிக் கோர்வை இப்படத்தில் அமைந்திருக்கிறது.

இயக்குநர் அபாஸ் அ.ரஹமத் எடுத்துக் கொண்ட கதையில் புதுமை சேர்க்காவிட்டாலும்கூட கதை சொன்ன விதத்திலும், அதை திரையில் கொண்டு வந்த விதத்திலும் பெருமையை தேடிக் கொண்டிருக்கிறார்.

ஜோசப், கிருபா மற்றும் செல்வாவின் கதாபாத்திர வடிவமைப்பு மிகச் சிறப்பாக இருக்கிறது.

வட சென்னை மக்களின் வாழ்க்கையோடு இயைந்த கிறிஸ்துவ வழிபாடுகளையும், கொண்டாட்டங்களையும் கதையோடு உறுத்தலில்லாமல் புனைந்தது பாராட்டுக்குரியது.

அதே நேரம் யதார்த்த மொழியிலும், வன்முறையின் அழகியலை பேச முடியும் என்கின்ற முயற்சிக்கும் பாராட்டுக்கள்.

ரீல் குட் ஃப்லிம்ஸ் ஆதித்யா இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறார்.

லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் இப்படத்தை வெளியிட்டிருக்கிறது.

‘வட சென்னை’, ‘பொல்லாதவன்’ போன்ற திரைப்படங்களின் தாக்கம் கதையிலும் கதாபாத்திர வடிவமைப்பிலும் அப்பட்டமாக தெரிகிறது.

அதுபோல் கதாபாத்திர வார்ப்புக்கு இருந்த மெனக்கெடல் இன்னும் கொஞ்சம் கதை மற்றும் திரைக்கதைக்கும் இருந்திருந்தால் திரைப்படம் இன்னும் பெரிதாகப் பேசப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது.

‘ஃபைட் க்ளப்’ – வட சென்னை மக்களின் காட்டப்பட்ட முகங்களை இன்னும் கொஞ்சம் கலை நேர்த்தியுடனும், மேம்பட்ட புரிதலுடனும் காட்டியிருக்கிறது.

அற்புதமான இசை, புதுமையான எடிட்டிங், சிறந்த இயக்கம் போன்ற தொழில் நுட்பக் கூறுகளும் இணைந்து இருப்பதால் கண்டிப்பாகப் பார்க்கலாம்.

RATING : 3.5 / 5

Our Score