2014 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இரண்டாம் நாளான இன்று 3 போ்ட்டிகள் நடந்தன.
முதல் போட்டியில் மெக்சிகோ அணியும் கேம்ரூன் அணியும் மோதின. இதில் மெக்சிகோ அணி 1 கோல் போட்டு ஜெயித்தது. ஆட்டத்தின் 61-வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் Oribe Peralta அந்த வெற்றி கோலை அடித்தார்.
இந்தப் போட்டியில் மொத்தம் 3 ஆஃப் சைடு கோல்கள் போடப்பட்டன. இதில் 2 கோல்களை கேம்ரூன் அணியும், 1 கோலை மெக்சிகோ அணியும் போட்டிருந்தன. இவைகள் முறையான கோலாக அமைந்திருந்திருந்தால் கேம்ரூன் அணிதான் வெற்றி பெற்றிருக்கும். ஆனால் அதிர்ஷ்டம் மெக்சிகோவுக்கே..!
இரண்டாவது போட்டியில் பரம எதிரிகளான ஸ்பெயினும், நெதர்லாந்தும் மோதின. எதிர்பார்க்காத அளவுக்கு நெதர்லாந்து அணி, ஸ்பெயினை பந்தாடிவிட்டது. 5-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் தோற்றது.
ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் முதல் கோலை ஸ்பெயின் வீரர் Xabi Alonso அடித்தார். இதற்குப் பின்பு வெறி கொண்ட வேங்கையாக மாறிய நெதர்லாந்து அணி வீரர்கள் வரிசையாக கோல்களை தள்ளி ஸ்பெயி்ன் அணி வீரர்களை திக்குமுக்காட வைத்துவிட்டார்கள். 44-வது நிமிடத்தில் Robin van Persie, 53-வது நிமிடத்தில் Arjen Robben, 65-வது நிமிடத்தில் Stefan de Vrij, 72-வது நிமிடத்தில் Robin van Persie, 80-வது நிமிடத்தில் Arjen Robben-ம் வரிசையாக கோல்களைச் சாத்திவிட்டார்கள்.
தற்போதைய உலகச் சாம்பியனான ஸ்பெயினின் இந்த எதிர்பாராத படுதோல்வியினால், இன்றைய இரவில் ஸ்பெயின் ரசிகர்கள் தூங்க மாட்டார்கள் என்பது நிச்சயம்..!
மூன்றாவது போட்டியில் சிலியும், ஆஸ்திரேலியாவும் மோதின. இந்தப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் சிலி வென்றது. ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் Alexis Sánchez, 14-வது நிமிடத்தில் Jorge Valdívia, எக்ஸ்ட்ரா டைமில் Jean Beausejour-வும் சிலி தரப்பில் கோல்களை அடித்தனர். ஆஸ்திரேலிய அணியில் 35-வது நிமிடத்தில் Tim Cahill ஒரு கோல் அடித்தார்.
ஆஸ்திரேலியா வெட்டியாக 2 ஆஃப் சைடு கோல்களை போட்டு திருப்திபட்டுக் கொண்டது. கடைசிவரையிலும் எவ்வளவோ போராடியும் வீரர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் ஆஸ்திரேலிய அணியினரால் வெற்றி பெற முடியவில்லை..!