“தர்பார் விநியோகஸ்தர்கள் கைதானால் போராட்டம் வெடிக்கும்…” – டி.ராஜேந்தர் எச்சரிக்கை..!

“தர்பார் விநியோகஸ்தர்கள் கைதானால் போராட்டம் வெடிக்கும்…” – டி.ராஜேந்தர் எச்சரிக்கை..!

‘தர்பார்’ படத்தினால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் அதற்கான இழப்பீட்டை வழங்கும்படி அந்தப் படத்தை விநியோகம் செய்த விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது பற்றி அவர்கள் தங்களது விநியோகஸ்தர்கள் சங்கத்தில் புகார் செய்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான டி.ராஜேந்தர் நேற்றைக்கு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது கோரிக்கை மனு கொடுக்க வந்த விநியோகஸ்தர்களுக்கு எதிராக போலீஸில் புகார் கொடுத்து எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வைத்திருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை மிகக் கடுமையாக விமர்சித்தார்.

நேற்றைய சந்திப்பில் டி.ராஜேந்தர் பேசும்போது, “இன்று ஒரு அவசரமான சூழலில் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம். எங்களது சங்கத்தின் சார்பில் விளக்கம் கொடுக்கத்தான் இச்சந்திப்பு. தர்மசங்கங்கடமான சூழலுக்குரிய கேள்விகளை இன்று கேட்க வேண்டாம்.

என் இனிய நண்பர் ரஜினிகாந்த்தின் நடிப்பில்.. இனிய நண்பர் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில்… லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‘தர்பார்’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் எங்களிடம் ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

‘தர்பார்’ படத்தினால் மிகப் பெரிய அளவுக்கு நஷ்டம் அடைந்துள்ளதால்.. அதனை ஈடு கட்டும் அளவுக்கு நஷ்ட ஈட்டினை பெற்றுத் தரும்படி எங்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். எங்கள் பகுதியை சார்ந்தவர் எங்களிடம் புகார் அளித்துள்ளார். அதுபோல் தமிழகம் முழுவதும் உள்ள விநியோகஸ்தர்கள் அந்தந்த பகுதியை சார்ந்த விநியோகஸ்தர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்கள்.

ஒரு விநியோகஸ்தர், ஒரு படத்தினை குறைந்தபட்ச உத்திரவாதத்தில் வாங்கியிருந்தால் சங்கங்கள் அந்த விஷயத்தில் தலையிடாது என்பது உண்மைதான். இருந்தாலும் ஒரு மனிதாபிமான அடிப்படையில், மரபு அடிப்படையில்.. தார்மீக அடிப்படையில்.. சம்பந்தப்பட்டவர்களிடம் நஷ்ட ஈடு கேட்டுள்ளனர்.

விளக்கில் விட்டில் பூச்சி விழுவதைப்போல் இந்த விநியோகஸ்தர்கள் ‘தர்பார்’ வலையில் விழுந்துவிட்டார்கள். இந்தப் படத்தினை இவ்வளவு விலைக்கு வாங்கியிருக்கக் கூடாது.

‘பேட்ட’ படம் அளவிற்கு இந்தப் படத்தை விற்றிருந்தால்கூட பரவாயில்லை. அதைவிட மூன்று மடங்கு அதிகமாக விலை கொடுத்து வாங்கிவிட்டார்கள். படம் ‘தமிழ் படம்’  என்றார்கள். ஆனால், படத்தில் இந்திதான் அதிகம் பேசப்பட்டிருக்கிறது. இந்தி நடிகர்கள்தான் அதிகமாக நடித்திருக்கிறார்கள்.  தமிழ் டப்பிங் படம் போல இருக்கிறது.

பட வெளியீட்டிலும் சிக்கல். பண்டிகை தினமான பொங்கலுக்குள் இது பழைய படமாகிவிட்டது. அதற்குள்ளாக புதிய படம் ஒன்றும் வெளியாகி அதுவும் ஹிட்டாகிவிட்டது. பின்பு இந்தப் படத்துக்கு எப்படி கூட்டம் வரும்..? நட்டம் ஏற்பட்டுவிட்டது.

‘பேட்ட’ படத்தை வெளியிடும்போது அப்படத்தை வெளியிட்ட நிறுவனம் விநியோக முறையில் படத்தை விற்றார்கள். அதேபோல் இதையும் செய்திருக்கலாமே. யாருக்குமே பிரச்சினை வந்திருக்காதே..?

நஷ்ட ஈட்டினை கேட்க வேண்டும் என்றால் யாரிடம் கேட்க வேண்டும்..? தயாரிப்பாளரிடம்தான் கேட்க வேண்டும். அதுதான் நியாயம். இவர்களும் அவர்களிடம்தான் முதலில் கேட்டிருக்கிறார்கள்.

ஆனால் அவர்களோ.. ‘நாங்கள் அதிகப்படியான சம்பளத்தை இயக்குநருக்கும், ஹீரோவுக்கும் கொடுத்துள்ளோம். இதனால்தான் பட்ஜெட்  எகிறிவிட்டது. இதனால் நீங்கள் இயக்குநரிடமும், ஹீரோவிடமும் நியாயம் கேளுங்கள்’ என லைகா நிறுவனத்தின் நிர்வாகத்தினரே சொன்னதாக விநியோகஸ்தர்கள் எங்களிடம் சொன்னார்கள்.

லைகா நிறுவனத்தில் அறிவுறுத்தியதுபோல அந்தப் படத்தின் இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸை சந்தித்து அவரிடத்தில் கோரிக்கை மனு ஒன்றைக் கொடுக்கத்தான் விநியோகஸ்தர்கள் முருகதாஸின் வீட்டிற்குச் சென்றார்கள்.

அவர் வீட்டுக்குள் இருந்தாரா.. இல்லையா.. என்பது எங்களுக்குத் தெரியாது. வந்தவர்கள் யாரோ ஒரு சிலர் இல்லை. அவர் முப்பது கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இயக்கிய படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள். நியாயப்படி பார்த்தால் அவர் இவர்களை வரவேற்று அமர வைத்து என்ன பிரச்சினை என்று கேட்டு ஒரு தீர்வைச் சொல்லியிருக்க வேண்டும்.

ஆனால் அப்படிச் செய்யாமல் காவல்துறையிடம் புகார் செய்து இவர்களை வெளியே தள்ளியிருக்கிறார். யாரை..? இந்த இயக்குநரின் படத்தை தமிழகத்து மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்த விநியோகஸ்தர்களை. அதோடும் விடவில்லை.

தன்னைக் கொலை செய்ய முயற்சித்தாக ஒரு கொலை முயற்சி புகார் ஒன்றையும் எங்களது விநியோகஸ்தர்கள் மீது சுமத்தி அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வைத்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

விநியோகஸ்தர்கள் என்ற முறையில் எங்களின் உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் எங்களது ஆட்கள் அவரைச் சந்திக்கச் சென்றார்கள்.  விநியோகஸ்தர்கள் மீது புகார் அளித்துள்ள முருகதாஸிடம் மூத்த இயக்குநர் என்ற முறையில் கேட்கிறேன். உங்களுக்கான சங்கம் உள்ளது. தயாரிப்பாளர் சங்கம் உள்ளது. பெப்சி அமைப்பு உள்ளது. இத்தனை சங்கங்கள் இருக்கையில் காவல் துறையில் புகார் அளிக்கலாமா..?  பின்பு எதற்கு இந்தச் சங்கங்கள் இருக்கின்றன..!?

படம் எடுப்பதைவிட அந்தப் படத்தை வெளியிடுவது.. மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது யார்? விநியோகஸ்தர்கள்தானே..? முருகதாஸை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன். இதற்கு முன் நீங்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு..? இந்தப் படத்துக்கு ஏன் இத்தனை சம்பளம்..? விநியோகஸ்தர்கள் உங்களைச் சந்திக்க முகமூடி அணிந்து வந்தார்களா? கூட்டமாக வந்தார்களா..? அல்லது கத்தியோடு வந்தார்களா..? அவர்கள் மீது இப்படியொரு பொய்யான புகார் அளித்ததை நினைத்து தமிழ்த் திரையுலகத்தின் மூத்த இயக்குநர் என்ற முறையில் நான் மிகுந்த வருத்தமடைகிறேன்.

இது ஒரு குடும்ப சண்டை.. இதில் காவல் துறையில் புகார் எதற்கு..?  ஒரு வேளை ‘தர்பார்’ படத்தை வாங்கிய குற்றத்திற்காக அவர்களுக்கான பரிசு கைதுதான் என்றால்  ‘வாங்கியது தர்பார் எண்ணுவது பார்(கம்பி)’ என்றால் இவர்களுடைய படத்தை வாங்கியவர்களை காப்பாற்ற முடியாதவர்களா… தமிழகத்தைக் காப்பாற்றப் போகிறார்கள்..?

ஒரு வேளை அவர்கள் கைது செய்யப்பட்டால் எங்கள் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள விநியோகஸ்தர்களையும் எங்களுக்கு ஆதரவான தயாரிப்பாளர்களை திரட்டி நாங்கள் குரல் கொடுப்போம்.

சம்பந்தப்பட்ட நடிகரைப் பற்றி நாங்கள் எதுவும் பேசவில்லை. அதே நேரம் எங்களது விநியோகஸ்தர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்ட லைகா நிறுவனம் இந்த நிமிடம்வரையிலும் அவர்களுக்கான அக்ரிமண்ட் காப்பியை கொடுக்கவில்லை.

விநியோகஸ்தர்கள் பொய் கணக்கு கொடுக்கிறார்கள் என்றால் நாங்கள் கணக்கு காட்டுகிறோம். நீங்கள் பேச்சுவார்த்தைக்கு வரத் தயாரா..? வாங்க கணக்கு பார்ப்போம்.

முருகதாஸ் என்ன ஆங்கில பட இயக்குநரா? அல்லது வெளிநாட்டிலிருந்து வந்தவரா..? முருகதாஸ் அவர்களே… அடுத்தப் படங்களில் கரண்டில்  இல்லாதவர்கள் கரண்டில்(மின்சாரத்தில்)கூட கை வைக்க சொல்வார்கள். பார்த்து கவனமாக இருங்கள். அடுத்தப் படத்தில் நீங்கள் இவ்வளவு சம்பளம் வாங்க முடியுமா. முடியாது என்றே சவால் விடுகிறேன்.

தம்பி முருகதாஸ் அவர்களே… நீங்களே முன் வந்து அந்தப் பொய்யான வழக்கினை வாபஸ் வாங்குங்கள். இதுதான் எங்களது கோரிக்கை..” என்று சொல்லி முடித்தார்.

Our Score