மலையாளத்தின் பிரபலமான நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது ஒரு நடிகை பாலியல் புகார் கொடுத்துள்ளார்.
மலையாளத் திரையுலகத்தில் பிரபல நடிகர், தயாரிப்பாளராக இருப்பவர் விஜய் பாபு. இவருடைய Friday Film House என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளார்.
‘பிரைடே’, மோகன்லால் நடித்த ‘பெருச்சாழி’, ‘பிலிப்ஸ் அண்ட் தி மன்க்கி பென்’, ‘அடி கப்பியரே கூட்டாமணி’, ‘ஆடு’, ‘மதுகவ்’, ‘அங்கமாலி டைரீஸ்’, ‘ஆடு-2’, ‘ஜூன்’, ‘ஜன்மைத்ரி’, ‘ஜல்லிக்கட்டு’, ‘திருச்சூர் பூரம்’, ‘சுபியும் சுஜாதாவும்’, ‘ஹோம்’ என்று புகழ் பெற்ற படங்களைத் தயாரித்திருக்கிறார்.
இவர் மீது நேற்றைக்கு ஒரு இளம் நடிகை விஜய் பாபு தனக்கு படவுலகில் வாய்ப்பு தருவதாகக் கூறி கடந்த இரண்டு மாதங்களாக பல முறை தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக காவல்துறையில் புகார் செய்துள்ளார்.
எர்ணாகுளம் போலீஸார் விஜய்பாபு மீது இந்திய அரசியலமைப்பு சட்டம் 376, 506, 323 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் செய்தியறிந்த தயாரிப்பாளர் விஜய்பாபு தற்போது தலைமறைவாகிவிட்டாராம். போலீஸார் அவரைத் தேடி வருகிறார்கள்.
அந்தப் பெண் போலீஸில் கொடுத்துள்ள புகாரில், “நான் திரையுலகத்தில் நுழைய வந்தபோது அறிமுகம் என்பதாலும் எனக்குப் பல விஷயங்கள் தெரியாது என்பதாலும் எனக்கு உதவி செய்வதுபோலவும், அட்வைஸ் செய்வதுபோலவும்தான் விஜய்பாபு என்னிடம் நெருங்கினார். ஆனால் அதன் பின்புதான் அவர் என்னை பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டார்.
கடந்த ஒன்றரை மாதங்களாக அவர் என்னை பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். நான் மயக்கத்தில் இருந்தபோதும் அவருடன் செக்ஸ் வைத்துக் கொள்ள மறுத்தேன். ஆனால் அவர் என்னை பலவந்தப்படுத்தி பல முறை என்னுடன் வலுக்கட்டாயமாக உறவு கொண்டார்.
அவர் என்னை மது அருந்த கட்டாயப்படுத்தினார். அதேபோல் கர்ப்பத் தடை மாத்திரைகளை பயன்படுத்தவும் சொன்னார். என்னிடம் மிருகம் மாதிரி நடந்து கொண்டார். பல முறை என்னை அடித்துத் துன்புறுத்தினார்.
என்னைத் திருமணம் செய்து கொள்வதாகவும், அவர் தயாரிக்கும் படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்க வைப்பதாகவும் வாக்குறுதியளித்தார். இது குறித்து முதலிலேயே நான் வெளியில் சொல்வதற்கு பயந்தேன். காரணம் அவர் கேரள திரையுலகத்தில் செல்வாக்கு படைத்தவராக இருந்தததால் நான் தயங்கினேன்.
என்னுடைய தனிப்பட்ட வீடியோக்களை வெளியிட்டுவிடுவதாக என்னை மிரட்டினார். இது என் வாழ்க்கையே அழித்துவிடும் என்று பயந்தேன். இதற்கு மேலும் நான் மெளனமாக இருக்கக் கூடாது என்று நினைத்தேன். என்னால் இதற்கு மேலும் இந்த வலியைத் தாங்க முடியாது.
விஜய் பாபு எனக்கிழைத்த தீமைகளுக்கு நிச்சயமாக எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். நான் சந்தித்த கொடூரங்களை வேறு யாரும் அவர்களது வாழ்க்கையில் சந்திக்கவே கூடாது என்றே நினைக்கிறேன். அதிலும் விஜய் பாபு மூலமாகவும் அவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே இதை நான் இப்போது வெளியில் சொல்கிறேன்..” என்று கூறியுள்ளார்.
மேலும், “என் பெயரை சட்ட விரோதமாக பொது வெளியில் வெளியிட்டு என் மீது பழி சுமத்தியதற்காக விஜய் பாபு மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்..” என்றும் குறிப்பிட்டுள்ளார் அந்தப் பெண்.
அந்தப் பெண் கொடுத்த புகாரைத் தொடர்ந்து பேஸ்புக்கில் நேரலையில் வந்து பேசிய தயாரிப்பாளர் விஜய்பாபு, சட்டத்தை மீறி அந்த நடிகையின் பெயரை பகிரங்கமாக வெளியிட்டார்.
அதோடு, “நான் இந்த மண்ணின் சட்டத்தை மதிக்கிறேன். நானும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளேன். என் பெயர் பாதிக்கப்படும்போது, எதிர் தரப்பு நபரின் பெயரையும் வெளியிடுவதில் என்ன தவறு..” என்று கேள்வியெழுப்பியுள்ளார் விஜய் பாபு.
மேலும் “குறிப்பிட்ட அந்தப் பெண் தான் தயாரித்த ஒரு படத்தில் ஆடிஷன் மூலமாகத் தேர்வாகி நடித்தார். நான் அவருடன் பேசியதில்லை. இது நான் சொல்ல வேண்டிய மீ டூ குற்றச்சாட்டு.
அந்தப் பெண்தான் கடந்த வருட இறுதியில் இருந்து தனக்குத் தொடர்ந்து மெஸேஜ் செய்து வந்தார். நாங்கள் இருவரும் கடந்த மாதம்தான் சந்தித்துப் பேசினோம். அந்தப் பெண் எனக்கு அனுப்பிய 400-க்கும் மேலான மெஸேஜ்களை நான் வெளியிடத் தயார். நான் அந்தப் பெண் மீது மான நஷ்ட வழக்கு போடப் போகிறேன்…” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் காவல் துறையோ அந்தப் பெண் பாலியல் துன்புறுத்துலுக்கு ஆளானது இந்த ஏப்ரல் மாதம்தான் என்று தெரிவிக்கிறது. மேலும் இது தொடர்பாக அந்தப் பெண்ணிடம் மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படவிருக்கிறது.
இதே தயாரிப்பாளர் விஜய் பாபு மீது கடந்த 2017-ம் ஆண்டு மலையாள நடிகையும், விஜய்பாபுவின் பிஸினஸ் பார்ட்னருமான சாண்ட்ரா தாமஸ் தன்னை அலுவலகத்தில் வைத்துத் தாக்கியதாக புகார் கொடுத்தார். ஆனால் பின்பு அந்தப் புகாரை இருவரும் சமரசமாக செல்வதாகக் கூறி வாபஸ் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவரது தயாரிப்பில் உருவான ‘அடி கப்பியரே கூட்டாமணி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான ‘ஹாஸ்டல்’ தமிழ்த் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.









