‘எதற்கும் துணிந்தவன்’ படம் பொங்கல் போட்டியில் இருந்து விலகியது..!

‘எதற்கும் துணிந்தவன்’ படம் பொங்கல் போட்டியில் இருந்து விலகியது..!

இயக்குநர் பாண்டிராஜின் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக ரத்னவேலுவும், இசையமைப்பாளராக இமானும் பணி புரிந்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் 2022 பொங்கல் தினத்தன்று வெளியாவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அதில் திருத்தம் செய்யப்பட்டு இந்தப் படம் வரும் 2022  பிப்ரவரி 4-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, சூர்யா ரசிகர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

பொங்கலுக்கு இந்தப் படம் வராததற்குக் காரணம் ரெட் ஜெயன்ட் நிறுவனம்தான் என்கிறார்கள் திரையுலகத்தினர்.

பொதுவாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்களின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனமே கைப்பற்றி வருகிறது. அந்த வகையில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் வெளியீட்டு உரிமையையும் ரெட் ஜெயன்ட் நிறுவனமே வாங்கியுள்ளது.

அதே சமயம் அதே பொங்கல் தினத்தன்று வெளியாகவிருக்கும் அஜித்தின் ‘வலிமை’ படத்தைத் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் ரெட் ஜெயன்ட் நிறுவனமே வெளியிடவுள்ளதால் தியேட்டர்கள் ஒதுக்கீட்டில் குழப்பம் ஏற்படும் என்பதால்தான் எதற்கும் துணிந்தவன்’ படத்தின் வெளியீடு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம்.

மேலும், தெலுங்கில் சூர்யாவின் படங்களுக்கென்று தனி மார்க்கெட் உள்ளது. தற்போது பொங்கலுக்கு ‘ஆர்ஆர்ஆர்’, ‘பீம்லா நாயக்’ உள்ளிட்ட பெரிய பட்ஜெட் தெலுங்கு படங்கள் வெளியாக இருப்பதால் அந்த சமயத்தில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சூர்யாவின் படத்திற்குத் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனாலும் எதற்கும் துணிந்தவன்’ பட வெளியீடூ ஒரு மாதம் தள்ளிப் போயிருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Our Score