full screen background image

எதற்கும் துணிந்தவன் – சினிமா விமர்சனம்

எதற்கும் துணிந்தவன் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.

படத்தில் சூர்யா நாயகனாகவும், பிரியங்கா மோகன் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய், சூரி, இளவரசு, வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, திவ்யா, புகழ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து & இயக்கம் – பாண்டிராஜ், தயாரிப்பாளர் – கலாநிதி மாறன், தயாரிப்பு நிறுவனம்  – சன் பிக்சர்ஸ், ஒளிப்பதிவு – ரத்னவேலு, இசை –  டி இமான், பாடல்கள் – சிவகார்த்திகேயன், யுகபாரதி, விக்னேஷ் சிவன், படத் தொகுப்பு – ரூபன், கலை இயக்கம் – ஜாக்கி, சண்டை பயிற்சி – ராம் லட்சுமண்  & அன்பறிவு, VFX – நாக் ஸ்டுடியோஸ், லோர்வன், மக்கள் தொடர்பு – யுவராஜ், விளம்பர வடிவமைப்பு – கபிலன், ஒலி வடிவமைப்பு – சுரேன்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்குதான் இந்தப் படத்தின்  மையக் கரு.

இது போன்று எத்தனை, எத்தனை சம்பவங்கள் நடந்து… குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டாலும் மீண்டும், மீண்டும் இந்தக் கொடூரங்கள் தொடர் கதையாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்தத் தொடர் கதைகளுக்கு வரும் காலத்தில் ஒரு முற்றுப் புள்ளி வைக்க புதுவிதமான ஒரு தீர்ப்பினை இந்தப் படத்தின் மூலமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். அதுதான் படத்தின் உயிர் நாடி..!

தமிழகத்தின் ஒரு பகுதியில் இருப்பவை வட நாடு, தென் நாடு என்ற இரண்டு கிராமங்கள். இந்த இரண்டு கிராமத்து மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து பெண் குடுத்து, பெண் எடுத்து சம்பந்திங்களாவும் வாழ்ந்து வந்த காலமும் உண்டு. ஆனால், இப்போது அந்த சுமூக உறவு இல்லை. அற்றுப் போய்விட்டது.

ஒரு பெண் விவகாரத்தில் இரண்டு கிராம மக்களிடையேயும் பகையுணர்ச்சி வளர.. இப்போது இரண்டு கிராமத்தினரும் ஒருவருக்கொருவர் முறைத்துக் கொண்டிருக்கிறார்கள். நட்புறவில்லை.

இப்படியான சூழலில் தென் நாடு கிராமத்தில் வழக்கறிஞராக தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார் ‘கண்ணபிரான்’ என்னும் சூர்யா.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் நாயகன் சூர்யா பெண்களுக்கு எதிரான பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பவராகவும் இருந்து வருகிறார்.

இவருக்கு நேர் எதிராக வட நாட்டில் ஒரு அமைச்சரின் மகனாக இருக்கும் வில்லன் வினய், பெண்கள் விஷயத்தில் மோசமானவனாக இருக்கிறார். தன்னுடைய மனைவியையே கொலை செய்துவிட்டு அவள் டிரைவருடன் ஓடிப் போய்விட்டதாகப் பொய் சொல்லும் அளவுக்குக் கொடூரமானவர்.

வில்லன் வினய், சூர்யாவின் ஊரான தென் நாட்டில் உள்ள இளம் பெண்களை காதல் வலையில் விழ வைத்து அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டுகிறார். இதனால் தென் நாடு கிராமத்தில் சில இளம் பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் வினய்யின் இந்த பெண் மோகம் சூர்யா வீடு வரையிலும் வந்துவிட.. சூர்யா கொதித்துப் போகிறார். வினய் உள்ளிட்ட  கோஷ்டியினரை சட்டத்தின் முன் நிறுத்த போராடுகிறார். ஆனால் அரசியல். பணம், அதிகாரச் செல்வாக்கால் அது முடியாமல் போக.. வேறு வழியில்லாமல் சாம, தான, தண்ட வழிகளைப் பயன்படுத்தி வில்லன்கள் கூட்டத்தை அழிக்கப் பார்க்கிறார்.

அது அவரால் முடிந்ததா.. இல்லையா.. என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

கடைசியாக தான் நடித்திருந்த படங்களில் சீரியஸான ரோல்களில் நடித்திருந்த சூர்யாவிற்கு இப்படத்தில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என படம் முழுவதும் வித்தியாசமான கதாப்பாத்திரம். வழக்கம் போல இதிலும் கலக்கி உள்ளார் சூர்யா. 

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகப் போராடும் ஒரு போராளியாக திரையில் தோன்றியிருக்கிறார் சூர்யா. படத்தில் மிரட்டலாக அறிமுகமாகும் சூர்யா, பல்வேறு காட்சிகளின்போது காதல், பாசம், கோபம் என அனைத்து உணர்ச்சிகளையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

தன் வித்தியாசமான நடிப்பில் கதைக் கருவையும், கரு சொல்லும் செய்தியையும், தனது ரசிகர்களுக்கு ஒரு மெஸேஜையும் வெளிப்படுத்தியிருக்கிறார் சூர்யா.

பாடல் காட்சிகளில் காதல் பீலிங்கை ஏற்படுத்தும் அளவுக்கான சேட்டைகள், அனல் தெறிக்கும் அளவுக்கான சண்டைக் காட்சிகள், ஆக்ரோசமான வசன உச்சரிப்பு என்று படத்தின் பெரும் சுமையை தன் முதுகில் சுமந்திருக்கிறார் சூர்யா.

படத்தின் முதல் பாதியில் சூர்யா வீட்டில் நடக்கும் குறும்பு காட்சிகள், சூர்யாவுக்கும் அவரது அம்மாவான சரண்யா பொன்வண்ணன் இடையே நடக்கும் பேச்சுக்கள், “பொண்ணை தூக்கப் போறோம்” என்று பெண் வீட்டாரிடமே சொல்லிவிட்டு நடத்தும் காட்சிகளிலெல்லாம் சூர்யாவின்  நடிப்பு ரசனைக்குரியது.  

அதேபோல் மணி ஹெய்ஸ்ட் ஓடிடி சீரிஸின் நாயகனான புரொபஸர் போல, சூர்யா தன் குடும்பத்துடன் திட்டம் போடும் சீனில் சிரிப்பலை எழும்புகிறது. 

’நான் கோட்டு போட்டா ஜட்ஜ் வேற… வேட்டிய கட்டுனா, நான்தான்டா ஜட்ஜ்’ என்று சூர்யா பேசும் வசனம் மாஸானது.

பிரியங்கா மோகனின் அழகையும், நடிப்பையும் ரசிக்கும்வகையில் அவரை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். அவருடைய கதாப்பாத்திரம் துவக்கத்தில் கொஞ்சம் போர் அடித்தாலும், காட்சிகள் செல்ல, செல்ல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துவிட்டார்.

காதல் காட்சிகளிலும் உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் நன்றாகவே நடித்துள்ளார் பிரியங்கா. இடைவேளைக்கு பின்னான ஒரு காட்சியில் உணர்ச்சிமயமாக அவர் காட்டியிருக்கும் நடிப்பு பாராட்டுக்குரியது. பெண்களை காம கண்களோடு பார்ப்பவர்களையும், ஆபாச வீடியோக்களை ரசிப்பவர்களைப் பற்றி பேசும்போதும் நடிப்பில் மின்னுகிறார் பிரியங்கா.

வினயின் வில்லத்தனம் கொடூரமாக இருந்தாலும், அந்த கதாப்பாத்திரத்தின் மீதும் பார்வையாளர்களுக்கு உச்சபட்ச கோபம் ஏற்படும் வகையில் நடித்திருக்கிறார். படம் முழுவதும் சிரித்த முகத்தோடு அவர் வலம் வந்தாலும் அவரைக் கொலை செய்வது போன்ற ஒரு வெறியை ரசிகர்களுக்குக் கொடுத்துள்ளார். அப்படி நடிப்பில் காட்சிக்கு காட்சி மிரட்டியுள்ளார் வினய். இதற்குத் துணையாய் இருப்பது அவரது கனமான குரல்.  

மேலும் சத்யராஜ், சரண்யா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, தேவதர்ஷினி, சூரி, புகழ், சரண், சிபி சந்திரன், திவ்யா துரைசாமி என்று அனைவருமே அவர்களுக்கான கேரக்டர்களுக்கு ஏற்ற நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

சூரி, புகழ், விஜய் டிவி ராமர், தங்கதுரை மூவரும் சில நிமிட காட்சிகளில் கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறார்கள். ஆனாலும் இதுக்குத்தான் ஆடியோ நிகழ்ச்சில 25 நிமிஷம் சூரி பேசுனாரா..? ஆத்தாடி..!

ரத்னவேலுவின் ஒளிப்பதிவு படம் போலவே பிரம்மாண்டமாகத்தான் இருக்கிறது. பாடல் காட்சிகளில் டிரெஸ்ஸிங் சென்ஸ், இசை.. நடனம்.. இதையும் தாண்டி கேமிராவின் பதிவுதான் முக்கியமாகத் தெரிகிறது. அதிலும் சுர்ருன்னு’ பாடல் காட்சி படு ஜோர்..!

டி.இமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்தான்.  பின்னணி இசை அளவாகவும், கதையுடன் ஒன்ற வைப்பது போலத்தான் இருக்கிறது. ஆனால், பொருத்தமில்லாத இடங்களில் பாடல் காட்சிகளை வைத்திருப்பதுபோல தோன்றுகிறது.

சண்டை இயக்குநர் ராம் லட்சுமணனின் இயக்கம் அருமை. குறிப்பாக இடைவேளைக்கு முந்தய சண்டைக் காட்சியை படமாக்கியவிதம் சூப்பரப்பு. கமர்ஷியல் படங்களில் இனிமேல் சண்டை காட்சிகளும் அதிகமாகக் கவனிக்கப்படும் போல தெரிகிறது..!

படத்தின் துவக்கத்திலேயே காவல் துறை கண்காணிப்பாளர், கல்லூரி பேராசிரியர் உள்ளிட்ட 5 பேரை சூர்யா கொலை செய்கிறார். ஏன் அவர்களை கொலை செய்கிறார்…? அவரது வாழ்க்கையில் நடந்த கதைதான் என்ன..? என்ற கேள்விகளுக்கு நான் லீனியர் பாணி திரைக்கதையில் படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

இயக்குநர் பாண்டிராஜ் இந்தப் படத்தில் கையாண்டிருக்கும் கதைக் களம் சூப்பர். தற்போது நாட்டில் அதிகமாக நடந்து வரும் முக்கிய பிரச்சினையான பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, அதனை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல்களிடம் சிக்கி வாழ்க்கையை தொலைக்கும் பெண்களுக்கு தைரியம் கொடுப்பதைப் போல திரைக்கதையாக்கம் செய்திருக்கும் இயக்குநர் பாண்டிராஜ் பாராட்டுக்குரியவர்.

படத்தின் ஆரம்பம் முதல் இடைவேளைவரையிலும் சூர்யாவின் ரசிகர்களுக்கு செம விருந்து அளித்திருக்கிறார் இயக்குநர். முதல் பாதி முழுவதும் காதல் காட்சிகள், நகைச்சுவை காட்சிகள் என ஓரளவுக்கு கலகலப்பாக செல்கிறது.

இரண்டாம் பாதியில் பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்ட பெண்களின் வலியையும், செண்டிமெண்ட் காட்சிகளையும் தூக்கிப் பிடித்து அதற்கு வித்தியாசமான ஒரு தீர்வையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

இருப்பினும் வழக்கமான பாண்டிராஜ் படத்தை எதிர்பார்ப்பவர்களின் ஆவலை இந்தப் படம் நிறைவு செய்யுமா என்பது தெரியவில்லை. ஏனெனில், படத்தின் முதல் பாதி மெதுவாக சென்று கொஞ்சம் நமது பொறுமையை சோதிக்கிறது. ஆனால், இடைவேளை காட்சியில் இருந்து படம் சூடு பிடித்து இறுதிவரையிலும் ஜெட் வேகத்தில் பறக்கிறது. அதிலும் கடைசி 20 நிமிடங்கள் படத்துடன் நம்மை ஒன்ற வைத்துவிட்டார் இயக்குநர் பாண்டிராஜ்.

பெண்களுக்கான காவல் துறையின் ‘காவலன் செயலி’யை பற்றி சூர்யா மூலமாக எடுத்துக் கூறும் காட்சியும், தன் குடும்பமும் பாதிக்கப்பட்ட பின் அவர்களுக்கு சூர்யா தைரியம் கூறும் காட்சியும் இன்றைய சமூகத்திற்கு தேவையான ஒரு பாடம் என்பதில் சந்தேகமில்லை.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் சொல்லும் வகையிலும், ஆண் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்ற அறிவுரைகள் மூலமாகவும் பல நல்ல வசனங்களைப் பேசியிருக்கிறார் சூர்யா.

“புள்ள பெக்குறவன்லாம் அப்பா இல்ல; புள்ளையை சரியா வளக்குறவன்தான் அப்பன்

“பொண்ணுகன்னா அவமானம் இல்ல; அதுவொரு அடையாளம்”

“ஆண் பிள்ளைகளை அழக் கூடாது எனச் சொல்லி வளர்ப்பதைவிட, பெண்களை அழ வைக்கக் கூடாது என்று சொல்லி வளர்க்க வேண்டும்”,

“ஒரு பெண்ணின் வீடியோ வெளியானால் அதற்காக வெட்கப்பட வேண்டியது அந்த வீடியோவில் இருப்பவர்கள் அல்ல; அதை எடுத்தவர்கள்தான்…”

”பெற்றோர்கள் பிள்ளையை பெற்றால் மட்டும் போதாது; பிள்ளைகளுக்கு இது சரி இது தவறு என்று கற்றுக் கொடுப்பதுதான் நல்ல வளர்ப்புக்கு அடையாளம்” என்பது போன்ற பாண்டிராஜின் வசனங்களும், படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. 

ஆனாலும் படத்தில் பல இடங்களில் லாஜிக் மிஸ்டேக்குகள் ஆங்காங்கே தென்படுகின்றன என்பதும் உண்மைதான்.

பெண்களை ஏமாற்றி பயன்படுத்திக் கொள்ளும் இளைஞர்கள் குறித்துதான் இந்தப் படத்தில் பேசுகிறார்கள். அவைதான் இந்தப் படத்தின் அடிப்படையான விஷயம். ஆனால் அந்தக் காட்சிகளெல்லாம் வெறும் மேலோட்டமாகவே அழுத்தம் இல்லாததாக உள்ளன.

வில்லனான வினய், அமைச்சரின் மகன் என்பது புரிந்தாலும் அவர் எந்த எதிர்ப்பும் இல்லாமல் எப்படி தொடர்ந்து இப்படிப்பட்ட குற்ற செயல்களில் ஈடுபடுகிறார் என்பதை இன்னும் கொஞ்சம் விரிவாக காட்டியிருக்க வேண்டும். இதிலும் அழுத்தம் இல்லை.

பெண்கள் பாதிக்கப்பட்ட விவகாரத்தை நீதிமன்றத்திற்கு எடுத்து சென்ற சூர்யா, பின்பு அங்கே மேற்கொண்டு பேசாமல் வில்லனை கமர்ஷியல் ரீதியாக சண்டை போட்டு ஜெயிக்க நினைப்பது ஏற்புடையதாக இல்லை. இது ஒரு வகையில் தவறான முன்னுதாரணத்தையும் ஏற்படுத்துகிறது.

இறுதிக் காட்சியில் சூர்யாவின் முடிவும் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மரணம்தான் தண்டனை என்பதை வெகுஜன ரசிப்பிற்காக இயக்குநர் யோசித்து வைத்திருந்தாலும், அதுவும் இன்னொரு கோணத்தில் மற்றொரு கொலையாக, குற்றமாகத்தான் கருதப்படும். இதை இந்தப் படம் போதித்திருக்கக் கூடாது.

ஆனாலும் இவைகளெல்லாம் படம் முடித்து வெளியில் வரும்போது மறந்துபோகும் அளவுக்கு தனது அழுத்தமான இயக்கத்தை செய்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.  

இந்தப் படம் ஒரு பக்கம் சமூகக் குற்றங்களைப் பற்றிப் பேசினாலும், அதை குடும்பத்தோடு பார்க்க கூடிய அளவுக்கு ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக தனது எழுத்து மற்றும் இயக்கத் திறமையால் மாற்றியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். பாராட்டுக்கள் ஸார்..

இந்த ’எதற்கும் துணிந்தவன்’ ரசிக்க வேண்டிய திரைப்படம் மட்டுமல்ல; கற்க வேண்டிய பாடமும் கூட…!

RATING : 3.5 / 5

Our Score