என்னமா கத வுடுறானுங்க – சினிமா விமர்சனம்

என்னமா கத வுடுறானுங்க – சினிமா விமர்சனம்

சாதாரணமா “காதுல பூ சுத்துறாங்கடே” என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நம் தோள்பட்டையில் ஏறி அமர்ந்து நம் காதில் ஆற, அமர மெதுவாக பூ சுற்றுகிறார்கள் என்பதை இந்தப் படத்தை பார்க்கும்போது நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.

இதுவரையில் பேயைக் கண்டறிய ஒரு வழியும் தெரியாமல் ஏதோ ஒரு அரூபத்தைக் காட்டியே ஒப்பேற்றி வந்தார்கள் தமிழ் சினிமா இயக்குநர்கள். மீடியேட்டர்களான சாமியார்களின் துணையோடு அவர்களை வேறொரு உடலுக்குள் புக வைத்து அவைகளோடு பேசியும் வந்தார்கள்.

இனிமேல் அந்தத் தொல்லையெல்லாம் வேண்டாம்.. ஆவியை கண்டுபிடிக்க நான் புதுசா ஒரு மெஷினையே கண்டுபிடிச்சிட்டேன் என்கிறார் இந்தப் படத்தின் இயக்குநரான பிரான்சிஸ் ராஜ்.

இந்தப் படத்தின் நாயகன் அர்வி ஒரு இத்துப் போன தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றி வருகிறார். பேய்களுடன் பேசுவது போன்ற ஒரு நிகழ்ச்சியை தயாரித்து வழங்கி வருகிறார்.

பேய்களுடன் பேசுவதற்காகவே ஒரு கருவியை கையில் வைத்துக் கொண்டு அதன் மூலமாக தனக்கு மட்டும் புரிகின்ற மொழியில் பேயுடன் பேசி அதனை நேரடி ஒளிபரப்பையும் செய்ய வைத்து அந்த டிவிக்கான டிஆர்பி ரேட்டிங்கை கொஞ்சமேனும் கூட்டி வைத்திருக்கிறார் ஹீரோ.

அவ்வப்போது தனது அம்மா சீதாவுடன் போனிலேயே பாச மழை பொழிந்து வருகிறார். இவருடைய நிகழ்ச்சியிலேயே தொகுப்பாளராக இருக்கும் நாயகி அலிஷா ஹீரோவை ஒருதலையாய் காதலித்தும் வருகிறார்.

ரவி மரியா ஒரு கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். தாம்பரத்திற்கு மிக அருகில் பிளாட் வீடுகளைக் கட்டியிருக்கிறார். அந்தக் குடியிருப்பில் பேய்கள் இருப்பதாக அங்கேயிருக்கும் வாட்ச்மேன், ஹீரோவின் டிவி அலுவலகத்திற்கு போன் செய்து சொல்ல.. தன் படை பரிவாரங்களுடன் அங்கே படையெடுக்கிறார் ஹீரோ.

தன்னுடைய மிஷின் மூலமாக அங்கேயிருக்கும் பேய்களுடன் பேசுகிறார் ஹீரோ. ரவி மரியா வீடு கட்டியிருக்கும் அந்த இடம் முன்பு சுடுகாடாக இருந்த இடம் என்றும், இப்போது இங்கே நாங்கள் இருப்பதாகவும் எங்களை தொந்தரவு செய்யாமல் போய்விடும்படியும் பேய்கள் எச்சரிக்கின்றன.

இது அப்படியே டிவியில் நேரடியாக ஒளிபரப்பாக, அந்த வீடுகளை கேட்டு பணம் கட்டியிருந்தவர்கள் ரவி மரியாவுக்கு போன் மேல் போன் செய்து வீடுகளை கேன்சல் செய்வதாகச் சொல்கிறார்கள். கட்டிய பணத்தைத் திருப்பிக் கேட்கிறார்கள்.

இதனால் இவர்கள் மேல் கடும்கோபமான ரவி மரியா இவர்கள் மீடியாக்காரர்கள் என்பதால் அதிகம் எதுவும் செய்ய முடியாமல் விட்டுவிடுகிறார்.

அதே நேரம் மதுரை அருகேயிருக்கும் கோட்டைமேடு என்னும் ஊரில் பேய்கள் இருப்பதாகவும், அந்த ஊரில் பல மரணங்களை அந்த பேய்கள் ஏற்படுத்தியிருப்பதாகவும் தகவல் கிடைக்க, ஹீரோ தன் பட்டாளத்துடன் அந்த ஊருக்கு வருகிறார்.

“இங்கேயிருக்கும் பேய் சாதாரண பேய் இல்லை. அடிச்சு கொன்னேபுடும். மரியாதையா திரும்பி போயிருங்க…” என்கிறார் ஊர்ப் பண்ணையாரான ஜி.எம்.குமார். ஆனால் ஹீரோவும், அவரது யுனிட்டும் அதை ஏற்காமல் அங்கேயே இருந்து பேய்களை தேடப் போவதாகச் சொல்கிறார்கள்.

பேய்கள் எங்கெல்லாம் இருக்குன்னு சொன்னார்களோ அங்கெல்லாம் தேடுகிறார்கள். பேய்கள் கண்ணில் படவில்லை. அதே நேரம் ரவி மரியாவும் அதே ஊரில் வந்து செட்டிலாகி மறுபடியும் நிலத்தை வாங்கி விற்கும் வேலையைச் செய்ய.. இப்போதும் பேய்கள் சர்ச்சையில் அவர்களுக்கும் பிரச்சினை உருவாகிறது.

பேய்களைக் கண்டறியும் மிஷினை பயன்படுத்தியும் பேய்களைக் காணாததால் அந்த ஊரில் பேய்களே இல்லை என்கிறார் ஹீரோ. இதனால் இதற்கு முன்பு அந்த ஊரில் நடந்த கொலைகளையெல்லாம் யார் செய்தது என்று போலீஸ் விசாரிக்க துவங்குகிறது.

இந்த நேரத்தில் அதே ஊரில் இருக்கும் செளம்யாவை பார்த்தவுடன் காதலிக்கத் துவங்குகிறார் ஹீரோ. செளம்யா சொல்லும் கதைகளையெல்லாம் நம்பி அந்த ஊரைவிட்டு வெளியேற நினைக்கிறார்.

இந்த சர்ச்சையில் ஊரார்களிடம் ஹீரோ சிக்கிக் கொள்ள.. பேய்கள் இல்லை என்பதை நிரூபித்துவிட்டு ஊரைவிட்டு வெளியேறும்படி ஊர்க்காரர்கள் கிடுக்கிப்பிடி போட.. ஹீரோ அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதுதான் இடைவேளைக்கு பின்பான திரைக்கதை.

ஹீரோ அர்வி புதுமுகம் என்பது காட்சிக்கு காட்சி தெரிகிறது.. புரிகிறது.. இயக்குநர் என்னதான் சொல்லிக் கொடுத்தாலும் இருப்பதுதானே வரும். அதுதான் வந்திருக்கிறது. வசனங்களை வைத்து கொஞ்சம் சமாளிக்கப் பார்த்தாலும், ஹீரோவே படத்தின் தோல்விக்கு வழிவகை செய்திருக்கிறார்.

இரண்டு கதாநாயகிகளில் அலிஷாவைவிடவும் செளம்யாவுக்கு ஸ்கோப் நிறைய இருந்தாலும் இருவருக்கும் நடிப்புக்கான வாய்ப்பே கொடுக்கப்படவில்லை. கதை மொத்தமும் ஹீரோவையே சுற்றி சுற்றி வருவதால் எரிச்சலோ எரிச்சல்தான் வருகிறது. செளம்யாதான் கொஞ்சம் பார்க்க குளுமையாக அவர் வரும் காட்சிகளையாவது கண்கொட்டாமல் பார்க்க வைத்திருக்கிறார். நன்றி..!

சாம்ஸின் காமெடிகள் ஆங்காங்கே ரசிக்க வைத்திருக்கிறது. தனது தம்பியை மரியாதையாக அழைத்து பேசும் ரவி மரியாவின் கேரக்டர் ஸ்கெட்ச் ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக இருந்தாலும் பின்பு தம்பி மனைவியையே பெண்டாள்கிறார் என்கிற காட்சியைப் பார்த்தவுடன் ‘உவ்வே’ என்றுதான் சொல்ல வருகிறது. நல்லா எழுதியிருக்காங்கய்யா திரைக்கதையை..!

பேய்களை அமானுஷ்யமாக காட்டியே பயமறுத்த முடியாமல் பல படங்கள் தோல்வியைத் தழுவியிருக்கின்றன. இந்த லட்சணத்தில் இவர்கள் மிஷினையே கண்டுபிடித்துவிட்டோம் என்று சொல்லி அதையும் சப்பையாக சொல்லி ஏமாற்றியிருக்கிறார்கள்.

பண்ணையாரின் சொந்தக் கதையை வைத்து பேய் இருப்பதாக ஏமாற்றி வருகிறார்கள் என்பதை கடைசியாக இத்தனை நீட்டி முழக்கி சொல்லியிருக்க வேண்டாம். பண்ணையாரின் மனைவி கார் டிக்கியில் பண்ணையார் கிடப்பதை சர்வசாதாரணமா சொல்லும் காட்சி மட்டுமே படத்தின் ஒரேயொரு ரசிக்கும்படியான காட்சி எனலாம்.

சிவபாஸ்கரின் ஒளிப்பதிவு மிக சுமார். ரவி விஜயானந்தின் இசையில் பாடல்களை முதல்முறைகூட கேட்க முடியாமல் போனது அவரது துரதிருஷ்டம்தான்.

புதுமுக ஹீரோக்கள்.. அதுவும் பணம் போடும் தயாரிப்பாளரே அவர்தான் என்றால்.. பல்லு பிடித்து விலை பேச முடியாத மாடு என்பதை புரிந்து கொண்டுதான் அறிமுக இயக்குநர்கள் படமெடுக்கிறார்கள். இதில் அந்த இயக்குநருக்கு பெயர் கெட்டதுதான் மிச்சமாக இருக்கிறது. நடிக்கவே தெரியாதவரை வைத்து என்னதான் செய்வது..?

இனி இயக்குநர் பிரான்சிஸ் ராஜ், தன்னுடைய தனித்திறமையை காட்ட நடிக்காமல் தயாரிப்புப் பணியை மட்டுமே செய்யும் தயாரிப்பாளர் கிடைக்கும்வரையில் காத்திருக்க வேண்டியதுதான்..! வேறு வழியில்லை..!

‘என்னமா கத வுடுறானுங்க’ – நிசமாவே அப்படித்தான் சொல்ல வைச்சிருக்காங்க..!

Our Score