full screen background image

சண்டிக்குதிரை – சினிமா விமர்சனம்

சண்டிக்குதிரை – சினிமா விமர்சனம்

‘சண்டிக்குதிரை’ என்றால் ‘யாருக்கும் அடங்காத குதிரை’ என்பார்கள். இதுதான் தலைப்பு என்பதால் ஹீரோவின் குணத்துக்காக வைத்திருக்கிறார்களோ என்று நினைத்தால் அதுவும் பொய்யாகிவிட்டது.

படம் முழுக்க கிராமத்திலேயே எடுக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஏதோ தனக்குத் தெரிந்த அளவுக்கு இயக்கத் திறமையைக் காட்டி திரைக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

ஹீரோ ராஜ்கமல் ஊரில் மண் குதிரைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். அம்மா, அப்பா இல்லாத அனாதை. அந்த ஊரின் பண்ணையார் இடும் அடிதடி வேலைகளையும் அவ்வப்போது செய்து அதிலும் பணம் பார்த்து வருகிறார் ராஜ்கமல். தன் வீட்டருகே வசிக்கும் மானசாவையும் காதலித்து வருகிறார்.

அதே ஊரில் வசிக்கும் டெல்லி கணேஷ் தனது பேத்தியான திவ்யாவை கண்ணும், கருத்துமாக வளர்த்து வருகிறார்.  திவ்யா பள்ளி மாணவி. இருந்தாலும் இப்போதே அதே ஊரை சேர்ந்த ஹரி என்பவனுடன் காதல்வயப்பட்டிருக்கிறார்.

இந்த காதல் ஜோடிகள் ஓரிடத்தில் ஒதுங்கி காதல் மொழி பேசிக் கொண்டிருக்கையில் ராஜ்கமலின் நண்பனான முத்துவிடம் மாட்டுகிறார்கள். முத்து ஹரியைக் கண்டிக்கும்போது திவ்யா முத்துவை அவமானப்படுத்தி பேசுகிறாள். இதனால் முத்து அவள் மீது கோபத்துடன் இருக்கிறான்.

மீண்டும் ஒரு முறை இந்த காதல் ஜோடிகள் தனிமையில் சந்திக்கையில் எல்லை மீறி நடந்து கொள்கிறார்கள். இதனை ஹரி தனது செல்போனில் படமெடுத்து வைக்கிறான். கடைசியாக இதனைப் பார்த்துவிடும் திவ்யா அவனது செல்போனை பிடுங்கி அந்த வீடியோவை அழிக்கிறாள்.

ஆனாலும், ஹரி அந்த செல்போனை தொலைத்துவிட அது அங்கே சுற்றி, இங்கே சுற்றி ஒரு மர்ம நபரின் கைகளுக்குப் போகிறது. 

அவரிடமிருந்து மானசாவின் செல்போனுக்கு அந்தக் குறிப்பிட்ட சில்மிஷ வீடியோ வர.. இதைப் பார்த்து அதிர்ச்சியாகும் திவ்யா ஹரியைத் தேடிப் பிடித்து அடித்துவிட்டு.. வீட்டுக்கு வந்து தற்கொலை செய்து கொள்கிறாள். டெல்லி கணேஷ் நொந்து போக.. சின்ன வயதில் இருந்தே தங்கையை போல வளர்த்து வந்த திவ்யாவின் மரணத்தால் ராஜ்கமலும் அதிர்ச்சியில் இருக்கிறார்.

கொஞ்ச நாட்களிலேயே திவ்யாவின் மரணம் தற்கொலையல்ல.. அது கொலை என்பது தெரிய வர.. அந்தக் கொலையாளி யார் என்பதை கண்டறிய முனைகிறார் ராஜ்கமல். இப்போது தனது காதலியான மானசாவை சந்திக்க விரும்பி ஓரிடத்திற்கு வரச் சொல்கிறார் ராஜ்கமல்.

அங்கே வரும் மானசாவையும், அவளது தம்பியையும் ஒரு மர்ம நபர் தாக்குகிறார். இந்த்த் தாக்குதலில் மானசாவின் தம்பி மரணமடைய.. மானசாவை மருத்துவமனையில் சேர்க்கிறார் ஹீரோ. இந்தக் கொடூரத்தை செய்தது யார் என்று தேடுகிறார் ஹீரோ. விசாரிக்கிறார். அவரே புலனாய்வும் செய்கிறார்.

கடைசியில் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் இந்த எளிய திரைப்படத்தின் மீதமான திரைக்கதை.

சின்ன பட்ஜெட் படம் என்றாலும் கிடைத்த நடிகர்களை வைத்து தயாரித்திருந்தாலும் இயக்கத்தில் இன்னும் கொஞ்சம் திறமையை காட்டியிருந்தால் படத்தை ரசிப்பாக பார்க்க வைத்திருக்கலாம்.

திரைக்கதை சவசவ என்று போய்க் கொண்டிருக்க.. இயக்கம் அதைவிட மோசமாக இருக்க.. எப்படி படத்தை ரசிப்பது என்பதே தெரியாமலேயே கடைசிவரையிலும் பார்க்க வேண்டியதாகிவிட்டது.

சஸ்பென்ஸ், திரில்லர் வகையில் இவர்கள் இடையிடையே காட்டியிருக்கும் அவராக இருக்குமோ..? அதென்ன..? யார் எட்டிப் பார்ப்பது என்பது போன்றெல்லாம் சந்தேகத்தை ஊட்டியும், கடைசியில் கொலைகாரன் அவர்தான் என்பதை ஊகிக்க முடியாமலேயே கொண்டு போயிருப்பதெல்லாம் சரிதான். ஆனால் இது ஒன்றை வைத்தே படத்தை முழுமையாக ரசிக்க வைக்க முடியாதே இயக்குநர் ஸார்..!?

வீராவின் ஒளிப்பதிவையும் தாண்டி படத்தில் ஒரேயொரு ஆறுதல் பாடல்கள்தான். வரஸ்ரீயின் இசையில் அனைத்து பாடல்களுமே அருமை. ஏற்கெனவே வெளியான சில பாடல்களின் சாயல்கள் தெரிந்தாலும் இனிமையாக இருந்தன. பாராட்டுக்கள்.

ராஜ்கமலுக்கு வேறு நல்ல இயக்குநர் கிடைத்து அவர் மூலம் நல்லதொரு வாய்ப்பு கிடைக்க வாழ்த்துகிறோம். மானசாவும், திவ்யாவும் கொஞ்சமேனும் நடித்திருப்பது உண்மைதான். அந்தப் பண்ணையாரின் குரலும், பேச்சும், மாடுலேஷனும் புதிதாக இருப்பதால் அவரை மட்டுமே கவனிக்க முடிந்தது..!

நடிகர் ராஜ்கமலின் கேரியரில் ஒரு படத்தின் எண்ணிக்கை கூடிவிட்டது. இயக்குநருக்கும், மற்றவர்களுக்கும் அவர்கள் வேலை பார்த்த படங்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறது. இந்தப் படத்தினால் அவர்களுக்குக் கிடைத்திருப்பதும் இது ஒன்றுதான்..!

எழுத்து, இயக்கம் சரியாக இல்லையேல் எல்லாமே வீணாகிவிடும் என்பதற்கு இந்தப் படமும் ஒரு சான்று..!

சண்டிக்குதிரை நொண்டிக்குதிரையாகிவிட்டது..!

Our Score