full screen background image

என்ஜாய் – சினிமா விமர்சனம்

என்ஜாய் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை எல்.என்.எச். கிரியேசன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.லட்சுமி நாராயணன் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் மதன்குமார், டான்சர் விக்னேஷ், ஹரீஸ்குமார், நிரஞ்சனா, ஜீ.வி.அபர்ணா, சாய் தன்யா, ஹாசின், சாருமிசா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – பெருமாள் காசி, ஒளிப்பதிவு –  K.N.அக்பர், இசை – K.M.ரயான், படத் தொகுப்பு – மணி குமரன், பின்னணி இசை- சபேஷ்- முரளி, பாடல்கள் – விவேகா, உமாதேவி, நடனம்- தினேஷ், சண்டை- ‘டேஞ்சர்’ மணி, கலை இயக்கம் – சரவண  அபிராமன், பத்திரிகை தொடர்பு – குணா.

முழுக்க, முழுக்க இளைஞர்களை குறி வைத்து எடுக்கப்பட்டுள்ள செமி போர்னோ படம்தான் இந்த ‘என்ஜாய்’.

சமூக ஊடகங்களின் அபார வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள கருத்து  வெளிப்பாட்டு நன்மைகளையும், மோசமான கலாச்சார சீரழிவுகளையும் சுற்றியே நகர்கிறது இந்தப் படத்தின்  கதை.

இளைஞர்களுக்கே உரித்தான அவர்களது அடல்ட் வயதுக்கான கருமங்களைக் கலந்து இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள் மற்றும் கருமாந்திரமான சேஷ்டைகள் மூலமாக பதின்ம வயதினரை சிரிக்க வைப்பதாகச் சொல்லி அவர்களுக்குள் விஷத்தை பதிவு செய்திருக்கிறது.

ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகும் மதன்குமார், சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் டான்சர் விக்னேஷ், பணக்கார வீட்டு பையன் ஹரிஷ்குமார் மூவரும் ஒரே வீட்டில் தங்கியுள்ள நண்பர்கள்.

அதேபோல கிராமத்திலிருந்து சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்க வரும் அபர்ணா, சாருமிசா மற்றும் பெங்களூரு பொண்ணான நிரஞ்சனா மூவரும் கல்லூரி விடுதியில் நட்பாகிறார்கள்.

கல்லூரியில் நடக்கும் ராக்கிங்கில் இருந்து இவர்களை காப்பாற்றும் சீனியர் தோழியாக இவர்களுக்கு நட்புக் கரம் நீட்டுகிறார் ஹாசின்.

சின்னச் சின்ன பாலியல் சேட்டைகளுக்குக்கூட காதலி தன்னை அனுமதிக்காததால் விரக்தியில் இருக்கிறான் மதன் குமார். சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் விக்னேஷோ சரியான சபலிஸ்ட். திருமணத்துக்கு முன்பே அந்தரங்க பிரச்சனை குறித்த குழப்பம் ஹரிஷ்குமாருக்கு.

இந்த நிலையில் இவர்கள் மூவருமே கொடைக்கானலுக்கு சென்று ஜாலியாக என்ஜாய்’ பண்ண இன்ப சுற்றுலாவாக கிளம்பி செல்கிறார்கள்.

அதேபோல சுமாரான வசதி கொண்ட குடும்பத்தில் இருந்தாலும் கல்லூரியில் வசதியான பெண்ணாக வலம் வரும் ஹாசின் தனது பணத் தேவைக்காக வீக்-எண்ட் பார்ட்டிகளில் கலந்து கொள்கிறார்.

இதனை பார்க்கும் அவரது மூன்று தோழிகளும் அவர் மூலமாக அதேபோன்ற ஒரு ஆடம்பர வாழ்க்கையை வாழ தயாராகின்றனர். அப்படி அவர்களுக்கான முதல் பார்ட்டியை கொடைக்கானலில் உள்ள ரிசார்ட் ஒன்றில் ஏற்பாடு செய்து தருகிறார் ஹாசின்.

‘கம்பெனி’ கொடுத்து பணம் சம்பாதிக்க நினைத்து கொடைக்கானலுக்கு வந்த மூன்று தோழிகளுக்கும் எதிர்பாராமல் ரிசார்ட்டுக்குள் நுழைய அனுமதி கிடைக்காமல் போக.. இன்னொரு பக்கம் பாலியல் பெண்களுடன் சுகம் அனுபவிக்க வந்து, ஆள் கிடைக்காத ஏமாற்றத்தில் இருக்கும் மூன்று நண்பர்களும் அன்றைய இரவில் ஒரே அறையில் தங்கும் சூழலும் உருவாகிறது.

தங்கள் அறையில் தங்க வந்த பெண்களை பாலியல் தொழிலாளிகள் என்று நினைத்து ஆர்வத்துடன் இருக்கும் மூன்று இளைஞர்களும் அவர்களுக்கு உதவி செய்யப் போய் ஒரு சிக்கலில் சிக்குகிறார்கள்.

இந்த சிக்கலில் இருந்து அவர்கள் மீண்டார்களா..? அல்லது இழப்பை சந்தித்தார்களா..? இதில் அவர்களுக்கு கிடைத்த பாடம் என்ன..? படம் நமக்கு சொல்லும் செய்தி என்ன என்பதுதான் மீதிக் கதை.

இன்றைய பல இளைஞர்களின் மனோபாவம்.. அது ஆணாக இருக்கட்டும். இல்லை பெண்ணாக இருக்கட்டும்.. திருமணத்திற்கு முன்பே ஜாலியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துவிட வேண்டும் என்பதாகவே இருக்கிறது. அதற்கேற்றபடி மேல்தட்டு வர்க்கத்தினரின் ஆடம்பர வாழ்க்கை, நடுத்தர மற்றும் ஏழை இளைஞர்களை அந்த மாயைக்குள் தூண்டில் போட்டு இழுக்கிறது.

இந்த விஷயத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் அனைவருமே இன்றைய இளைஞர்களின் தாகம், மோகம், வேகம், அதனால் ஏற்படும் குழப்பம் என கலவையான உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளனர்.

காதலியிடம் இருந்து ஒரு சிறிய சந்தோஷம் கிடைக்காதா என்று சதா ஏங்கியபடியே தனது ஐ.ஏ.எஸ். படிப்பில் தடுமாறும் மதன்குமார், பார்க்கும் பெண் எல்லாம் தன்னுடன் படுக்கைக்கு வர மாட்டாளா என நினைக்கும் விக்னேஷ், திருமணத்திற்கு முன்பே செக்ஸ் பற்றிய புரிதல் இல்லாமல் குழப்பத்தில் இருக்கும் ஹரிஷ்குமார் என மூன்று கதாநாயகர்களுக்குமே படத்தில் சம அளவிலான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இதில் டான்ஸர் விக்னேஷ் கொஞ்சம் கூடுதலாக நகைச்சுவையையும் கையில் எடுத்துக் கொண்டுள்ளார். அவருக்கு அது ஒர்க் அவுட்டும் ஆகியுள்ளது. மதன்குமார் சற்று சீரியஸ் முகம் காட்டினாலும் காதலில் விழும் இன்றைய இளைஞர்களின் மன ஓட்டத்தை துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளார். பார்ப்பதற்கு சாக்லேட் பாய் போல இருந்தாலும் இந்த மூவரும் ஆக்சன் காட்சிகளிலும் அசத்தியுள்ளனர்.

அதேபோல கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வந்து, அந்தக் கலாச்சாரத்தை பதட்டத்துடன் எதிர்கொண்டு, அதை எப்படி அணுகுவது என ஒரு தெளிவில்லாமல் குழம்பும் இளம் பெண்களின் பிரதிபலிப்பாகவே அபர்ணா மற்றும் சாருமிசாவின் கதாபாத்திரங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவர்களும் சோடை போகாத நடிப்பால் தங்கள் கதாபாத்திரங்களை தாங்கிப் பிடித்துள்ளனர்.

இவர்களின் தோழியாக வரும் நிரஞ்சனாவின் பக்குவமான பேச்சும் அணுகுமுறையும், இடைவேளைக்கு பின்னான ரொமான்ஸும் இந்த மூவரில் இவருக்கு கொஞ்சம் கூடுதல் மார்க் பெற்று தருகிறது.

கல்லூரியில் சீனியர்கள் எல்லாம் இப்படி நல்ல தோழிகளாக இருந்துவிட மாட்டார்களா என ஏங்க வைக்கும்விதமாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் ஹாசின்.

சூழ்நிலை காரணமாக அவர் தனது லைப் ஸ்டைலை மாற்றிக் கொண்டாலும் தன்னைப் போலவே மாற முயற்சிக்கும் தனது தோழிகளை அவர் ஆரம்பத்தில் தடுத்து நிறுத்தி நெறிப்படுத்த முயற்சிப்பது ஆறுதலான விஷயம்.

மதன்குமாரின் சீரியஸ் காதலியாக வரும் சாய் தன்யா கதாபாத்திரம் இன்றைய இளம் பெண்கள் காதலை எப்படி பாதுகாப்பாக அணுக வேண்டும் என்பதற்கு ஒரு சரியான உதாரணம்.

இவர்கள் தவிர டெரர் போலீஸ் அதிகாரியாக வலம் வந்து கிளைமாக்ஸில் ட்விஸ்ட் கொடுக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பில்லி முரளி, வீக்-என்ட் பார்ட்டி நடத்துகிறேன் என டீசன்டான வில்லத்தனம் காட்டியிருக்கும் ரிசார்ட் ஓனர் காலாட்படை’ ஜெய், பெண்களை அரக்கத்தனமாக அணுகும் சைக்கோ வில்லன் யோகிராம் என இன்னும் சில முக்கிய கதாபாத்திரங்களும் கவனம் பெறுகின்றன.

கே.என்.அக்பரின் ஒளிப்பதிவில் சென்னையைவிட கொடைக்கானல் சம்பந்தப்பட்ட காட்சிகள் பளிச்சென்று இருக்கின்றன. ஆனாலும் இரவு நேரக் காட்சிகளில் நிறையவே லைட்டுகளைப் பயன்படு்த்திருக்கிறார்.

கே.எம்.ரயானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். குறிப்பாக இடைவேளைக்குப்பின் வரும் இரண்டு பாடல்கள் அருமை. சபேஷ் – முரளியின் பின்னணி இசையை நாடகத்தனமாக காட்சிகளை திரையில் முன்னுக்குக் கொண்டு வந்து காட்ட மட்டுமே உதவியிருக்கிறது.

இளைஞர்களை மையப்படுத்தி, அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்து, இந்தக் கதையை உருவாக்கிய அறிமுக இயக்குரான பெருமாள் காசி, கடைசியாக படத்தை காம நெடி அடிக்கும் படமாக மாற்றியிருக்கிறார்.

இன்றைய பல இளைஞர்களின் மனப்போக்கை ஒவ்வொரு கதாப்பாத்திரம் வாயிலாக வெளிப்படுத்தவும் செய்துள்ளார். ஆனால் அதேசமயம் திரைக்கதையில் நகைச்சுவை என்ற பெயரில் படம் நெடுகிலும் இரட்டை அர்த்த வசனங்களையும், காட்சிகளையும் அள்ளித் தெளித்து நம்மை நெளிய வைத்திருக்கிறார்.

பாலியல் வக்கிரங்களைக் கூட்டும்விதமாகவும், பாலியல் நுகர்வு கலாச்சாரத்தைத் தவறு என்பதை அழுத்தமாகச் சொல்லாமல் அப்படி, இப்படி இருப்பதில் தவறில்லையே என்பதை தியேட்டருக்கு வரும் இளசுகளின்  மனதில் நஞ்சாக விதைத்திருக்கும் இந்தப் படத்தின் இயக்குநரை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மேல் மாடியில் குடியிருக்கும் அம்மா, மகளை சம்பந்தப்படுத்திய காட்சிகள், கையில் முளைத்திருக்கும் ஆறாம் விரலை வைத்து பேசியிருக்கும் சில வசனங்கள் எல்லாமே உவ்வே ரகம்..!

என்ஜாய்’ என்ற தலைப்பு வைத்ததினால்  இன்றைய இளைய சமுதாயத்தினர் அனைத்தையுமே என்ஜாய் செய்ய வைத்து அனுப்புவதற்காகவே இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார் போலும்..!

ஐஸ்கிரீமுக்குள் இருக்கும் விஷமாக இந்தப் படம் அமைந்துள்ளது.

Our Score