full screen background image

பேய காணோம் – சினிமா விமர்சனம்

பேய காணோம் – சினிமா விமர்சனம்

குளோபல் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தேனி பாரத் R. சுருளிவேல் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடிகை மீரா மிதுன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மற்றும் இயக்குநர் தருண் கோபி,  கௌசிக், சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம்,  முல்லை, ஜெயா டிவி ஜேக்கப், செல்வகுமார் மற்றும் ஜாக்குவார் தங்கம் ஆகியோர் நடித்துள்ளனர்.

இசை – மிஸ்டர் கோளாறு, ஒளிப்பதிவு – ராஜ்.O.S., கௌபாஸு, பிரகாஷ், படத் தொகுப்பு – A.K.நாகராஜ், தயாரிப்பு மேற்பார்வை – உசிலை சிவகுமார், பத்திரிகை தொடர்பு – மணவை புவன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – செல்வ அன்பரசன்.

வாழ்க்கையில் பணத்தை காணோம்.. குழந்தையை காணோம்… பொருளை காணோம்… நண்பனை காணோம்… இன்னும் எதை எதையோ காணோம் என்று தேடியிருப்போம். முதன்முதலாக இந்தப் படத்தில் வித்தியாசமாக ஒரு பேயை தேடுகிறார்கள். பேயை எதற்காக தேடுகிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

தமிழ் சினிமாவில் எப்படியாவது இயக்குநராகிவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார் இயக்குநர் செல்வ அன்பரசன். இதன் முன்னோட்டமாக குறும் படமெல்லாம் எடுத்துக் காட்டி அசத்துகிறார்.

முழு நீள திரைப்படம் எடுக்க ஒரு தயாரிப்பாளரிடம்  கதை சொல்கிறார் செல்வா. ஆனால் அந்தத் தயாரிப்பாளரோ கதையை மட்டும் தன்னிடம் தரும்படி கேட்கிறார். அதை மறுத்துவிட்டு வரும் இயக்குநர் செல்வா வேறொரு தயாரிப்பாளரிடம் சின்ன பட்ஜெட் கதை ஒன்றை சொல்ல அவருக்குக் கதைப் பிடித்துப் போய் தயாரிக்க ஒத்துக் கொள்கிறார்.

இதையடுத்து படக் குழுவினருடன் ஒரு மலைப் பகுதிக்கு வந்து ‌ஷீட்டிங்கை தொடங்குகிறார் இயக்குநர் செல்வா. அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு மர்ம பங்களாவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடும்போது அங்கிருக்கும் மீரா மிதுன்  அவர்களுக்கு உதவ முன் வருகிறார். ஆனால் அந்த உதவிகளை இயக்குநர் ஏற்க மறுக்கிறார்.

ஆனாலும் ஒரு கட்டத்தில் மீரா மிதுனே மறைமுகமாக படப்பிடிப்புக்கு உதவி செய்ய படத்தை முடிக்கிறார் இயக்குநர். ஆனாலும் இயக்குநருடன் ஏற்படும் சண்டையினால் கோபமடையும் மீரா மிதுன் படமாக்கப்பட்ட முக்கிய காட்சிகளை அழித்துவிட்டு காணாமல் போகிறார்.

இதையடுத்து படக் குழுவினர் சாமியாரை அழைத்து வருகிறார்கள். அங்கே வரும் சாமியார் “மீரா மிதுன் பெண் அல்ல; பேய்” என்ற உண்மையை சொல்லிவிட்டு தப்பியோடுகிறார்.

இப்போது எடுத்தக் காட்சிகளையெல்லாம் மீண்டும் எடுக்க முடியாது. பட்ஜெட் இல்லை. இதுவரையில் எடுத்தக் காட்சிகளை மீட்டெடுக்க மீரா மிதுன் என்ற பேயைத் தேடி அலைகிறார்கள் படக் குழுவினர்.

மீரா மிதுன் என்ற பேயை படக் குழுவினர் கண்டுபிடித்தார்களா..? இல்லையா..? அவர்களுடைய படப் பதிவு என்னவானது..? என்பதுதான் இந்தப் ‘பேய காணோம்’ படத்தின் கதை.

இந்தப் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் செல்வ அன்பரசனே, படத்தில் த.க.தெ.ம.கி’ என்ற இயக்குநர் வேடத்தில் நடித்திருக்கிறார். காட்சிகளை விவரிக்கிறேன் என்று சொல்லியும், வசனங்களை சொல்லித் தரும் சாக்கிலும் சினிமா துறையில் இருப்பவர்களே சினிமாவை எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் தமிழ் சினிமா துறையினரையும் பல இடங்களில் கிண்டல் செய்திருக்கிறார்.

ஹீரோ கெளசிக்கைவிட அதிக காட்சிகளில் இயக்குநர்தான் நடித்திருக்கிறார். பெரிய ஹீரோக்கள் டூப் போட்டு நடிப்பதையும், ஹீரோயின்களை படக் குழுவினர் எப்படியெல்லாம் டீஸ் செய்வார்கள் என்பதையும் வெளிப்படையாகச் சொல்லி கலாய்த்தியிருக்கிறார்.

பேயாக நடித்திருக்கும் மீரா மிதுனுக்கு போட்டிருக்கும் மேக்கப் குறைந்த செலவில் போட்டதுபோல.. பளிச்சென்று தெரிகிறது கிழவி வேடம்.  இதைப் பார்த்தே கோதண்டம் பியூட்டி’ என்று ஜொள்ளு விடுவதைப் பார்த்து நமக்கு நாமே சிரித்துக் கொள்ள வேண்டியதுதான்..!

இணை இயக்குநராக நடித்திருக்கும் கோதண்டம் இன்றைய இணை இயக்குநர்களை ‘வச்சு’ செய்திருக்கிறார். பிரச்சினை வராமல் இருந்தால் சரிதான். சில இடங்களில் தனது டைமிங்கான காமெடி டெலிவரியில் கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறார்.

ஹீரோ கவுசிக் சண்டை காட்சியிலும், நடன காட்சியிலும் தெரிகிறார். மற்றபடி அவருக்கென்று தனி போர்ஷன் இல்லை. நாயகியாக நடித்திருக்கும் சந்தியா ராமச்சந்திரனுக்கும் பெரிய நடிப்பென்று இல்லை. அதற்கான திரைக்கதையே இல்லாதபோது இவரைக் குற்றம் சொல்லி என்ன புண்ணியம்..? மற்றும் நிறைய நடிகர்கள் திரையில் தோன்றி வசனத்தைப் பேசிவிட்டு செல்கின்றனர்.

ராஜ்.ஓ.எஸ், கௌபாஸு, பிரகாஷ் என மூன்று ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றியும் படம் சின்ன பட்ஜெட் என்பதை சொல்லாமல் சொல்கிறது படத்தின் ஒளிப்பதிவு.

மிஸ்டர் கோளாறு இசையில் பாடல்கள் ஒரு முறை கேட்கும் ரகம். காதர் மஸ்தானின் பின்னணி இசை பேய் படத்திற்கான வழமையான இசையாகவே ஒலிக்கிறது.

ஸ்கிரிப்ட்டை வழக்கமான பேய் கதையாக இல்லாமல் கொஞ்சம் மாற்றி யோசித்திருக்கும் இயக்குநரின் திறமையை பாராட்ட வேண்டும். இந்தப் பேய் படத்தை காமெடியாக சொல்ல வந்ததோடு, சினிமா கலைஞர்களின் வாழ்க்கையை குறிப்பாக முதல் படம் இயக்கும் இயக்குநர்களின் வலிகளையும் நகைச்சுவைக்கிடையில் பதிவு செய்திருக்கிறார்.

அதே சமயம் இந்தப் படத்தில் இருக்கும் குறைகளையே கலாய்த்து காட்சிகளை வைத்திருக்கும் இயக்குநரை மனதாரப் பாராட்டவும் வேண்டும்.

பேய காணோம்’ என்ற டைட்டிலே நமக்குக் கேட்சிங்காகவும், ஆச்சரியத்தைத் தருவதாகவும் உள்ளதே என்றெண்ணி படத்தைப் பார்த்தால் படத்தின் துவக்கத்தில் வரும் குறும் படமும், படத்தின் இறுதியில் காட்டப்படும் இந்தப் படத்தின் உருவாக்கம் பற்றிய குறும் படமும்தான் ‘சூப்பர்’ என்று சொல்ல வைத்திருக்கிறது.

RATING : 2 / 5

Our Score