‘என்கிட்ட மோதாதே’ திரைப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா நேற்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கதாநாயகன் நட்டி(எ)நட்ராஜ், தயாரிப்பாளர் ‘ஈராஸ்’ சாகர், படத்தில் மற்றுமொரு கதாநாயகனாக நடித்திருக்கும் ராஜாஜி, சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர், இயக்குநர் ராமு செல்லப்பா, இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன், கணேஷ் சந்தரா, பாடலாசிரியர் யுகபாரதி, படத் தொகுப்பாளர் அத்தியப்பன் சிவா, சண்டை பயிற்சியாளர் மைக்கேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கவிஞர் யுகபாரதி பேசும்போது, “எனக்கு இயக்குநர் பாண்டியராஜை மிகவும் பிடிக்கும். அவர் ‘பசங்க’ படத்துக்காக தேசிய விருது வாங்கியதால் அல்ல; அவர் என்னைவிட குள்ளமாக இருப்பதால்தான்.. இயக்குநர்கள் அனைவரும் குள்ளமாக இருக்க வேண்டும் என்ற ஆசை எனக்குண்டு. அந்த வகையில் இயக்குநர் பாண்டிராஜ் குள்ளமாக இருப்பதால், அவர் மீது எனக்கு தனி ப்ரியமும் உண்டு.
இப்போது ‘என்கிட்ட மோதாதே’ படத்தின் இயக்குநர் ராமு செல்லப்பாவை அதைவிட எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால், அவர் இயக்குநர் பாண்டிராஜைவிடவும் குள்ளமாக இருக்கிறார் என்பதால்தான்.
இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு சங்கர் மகாதேவன் அல்லது கைலாஷ் கேர் ஆகியோரை பாட வைக்கலாம் என்ற எண்ணம் என்னிடம் இருந்தது. ஆனால் இயக்குநரோ, ‘இந்த பாடலுக்கு நட்டி நட்ராஜை ஏன் பாட வைக்கக் கூடாது?’ என்று என்னிடமும் இசையமைப்பாளரிடமும் கேட்டார்.
வாய்ஸ் டெஸ்டுக்கு பின்னர் அவரையே பாட வைத்தோம். அந்த பாடல் அருமையாக வந்துள்ளது. நடிகர் நட்ராஜ் பாடகர் நட்ராஜாகவும் தொடரலாம் என்று ஆசைபடுகிறேன். மேலும் இப்படத்தில் இன்னொரு பாடலை இசையமைப்பாளர் டி.இமான் பாடியுள்ளார்…” என்றார்.
விழாவில் ஹீரோ நட்டி நட்ராஜ் பேசும்போது, “இப்படத்தின் இயக்குநர் ராமு செல்லப்பா என்னிடம் கதை சொல்ல வரும்போது சிறுவன் போல் இருந்தார். நான் இயக்குநர் பாண்டிராஜின் உதவி இயக்குநர் என்று கூறி என்னிடம் கதை சொல்ல ஆரம்பித்தார்.
அவர் கதை கூறியதும் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்து. ஈராஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இப்படத்தில் நடிக்க எனக்கு பெருமையாக உள்ளது. இந்த குழுவுடன் சேர்ந்து இப்படத்தில் நடித்தது மிகச் சிறந்த அனுபவம் மற்றும் மகிழ்ச்சி..” என்றார்.
நடிகை சஞ்சிதா ஷெட்டி பேசும்போது, “நான் எப்போதும் மார்டன் ரோலுக்குத்தான் பொருந்துவேன் என்ற எண்ணம் அனைவரிடமும் இருந்தது. ஆனால் அதை இப்போது இப்படத்தின் மூலம் இயக்குநர் ராமு செல்லப்பா மாற்றி விட்டார். இப்படத்தில் திருநெல்வேலி பெண்ணாக நடித்தது எனக்கு பெருமையாக உள்ளது. நட்டி உடன் நடித்தது மிகச் சிறந்த அனுபவம்…” என்றார் சஞ்சிதா ஷெட்டி.
நடிகை பார்வதி நாயர் பேசும்போது, “நானும் சஞ்சிதா போல்தான் இப்படத்தில்தான் முதன் முதலாக கிராமத்து பெண் வேடத்தில் நடித்துள்ளேன். திருநெல்வேலி பெண்ணாக நடித்ததில் மகிழ்ச்சி, இப்படத்தில் இக்குழுவுடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத ஒரு அனுபவம். எல்லோரும் ஒரு குடும்பம் போல் பணியாற்றினோம். இன்றுவரை எல்லோரும் ஒன்றாக இருக்கிறோம்…” என்றார் பார்வதி நாயர்.
விழாவில் தயாரிப்பாளர் ‘ஈரோஸ்’ சாகர் பேசும்போது, “இந்தப் படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இருவருக்கும் சமர்ப்பணம் செய்யக் கூடிய ஒரு படைப்பாக இருக்கும். 1980-களில் நடந்த உண்மை விஷயங்களை கொண்ட கதைதான் ‘என்கிட்ட மோதாதே..” என்றார் அவர்.












