“டான்ஸ் வரலைதான்.. சுமாராத்தான் ஆடியிருக்கேன்..” – ஒப்புக் கொண்ட ஹீரோ..!

“டான்ஸ் வரலைதான்.. சுமாராத்தான் ஆடியிருக்கேன்..” – ஒப்புக் கொண்ட ஹீரோ..!

‘மக்கள் பாசறை’ வழங்கும் ஆர்.கே. ஹீரோவாக நடிக்கும் படம் ‘என் வழி தனி வழி.’ இதில் பூனம் கவுர், மீனாட்சி திட்சித் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.  ராதாரவி, ‘ஆஹா’ ராஜீவ் கிருஷ்ணா, ஆசிஷ் வித்யார்த்தி, ரோஜா, சீதா, ‘தலைவாசல்’ விஜய், அஜய்ரத்னம், இளவரசு, கராத்தே ராஜா, பொன்னம்பலம். என நடிகர் சங்கமே சேர்ந்தது போல் பலர் நடித்துள்ளனர். ராஜரத்தினம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். பாடல்களை வைரமுத்துவும், இளையகம்பனும் எழுதியுள்ளனர். பிரபல மலையாளப் பட இயக்குநரான ஷாஜி கைலாஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

படத்தின் இசையை நேற்று காலை இளைய தளபதி விஜய் தன் வீட்டில் சம்பிரதாயமான முறையில் வெளியிட்டார். தொடர்ந்து நேற்று மாலை ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் படத்தின் அறிமுக விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில்  ஹீரோ ஆர்.கே. பேசும்போது, “இந்த ஆடியோ வெளியீட்டை விமானத்தில் பறந்தபடியே வெளியிட எண்ணினேன். ஆனால் அதையும் தாண்டி இதை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் மீடியா முன் அறிமுகம் செய்யவே இந்த விழாவை ஏற்பாடு செய்தேன்.

இந்தப் படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் போன்றவற்றை ரசிகர்கள் எவரும் இருந்த இடத்திலிருந்து பார்க்கவும், கேட்கவும் வகையில் புதிய தொழில் நுட்பத்தில் வெளியிட்டுள்ளோம். இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர்கள் புதுமையான முறையில் மொபைல் அப்ளிகேஷனில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி உங்களது மொபைல்களில் இருக்கும் அப்ளிகேஷன்கள் பட்டியலில் இந்த ‘என் வழி தனி வழி’ படத்தின் விளம்பரமும், போஸ்டரும் இடம் பெற்றிருக்கும். அதில் ஏதேனும் ஒன்றை கிளிக் செய்தால் போதும்.. இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்கலாம். ட்ரெய்லரைப் பார்க்கலாம்.

வருங்காலம் இனி தொழில் நுட்பத்தின் கையில்தான். வருங்காலம் இனி மீடியாவின் கையில்தான். எனவேதான் இம்முயற்சியை செய்துள்ளோம். இந்தியாவிலேயே முதன் முதலில் இதனை என் படத்தில் அறிமுகம் செய்ததற்காக பெருமைப்படுகிறேன்.

இந்த ‘என் வழி தனி வழி’ படம், எனது முந்தைய படமான ‘எல்லாம் அவன் செயல்’ படத்தைப் போல பத்து மடங்கு நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன். இது ஒரு போலீஸ் அதிகாரி பற்றிய விறுவிறுப்பான படம். இந்தப் படம் அடுத்தாண்டு ஜனவரி 23-ல் வெளியாகிறது. படத்தில் பாடல்களுக்கு எனக்கு நடனம் வரவில்லைதான். ஆனாலும் எப்படியோ சுமாராகத்தான் ஆடியுள்ளேன்.  இனிமேல் ஆட ஆட  நடனமும் எனக்கு வருமென்று நம்புகிறேன்.

மேலும் 2015–ல் மூன்று படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளேன். இதே படக் குழுவைக் கொண்டு ‘வைகை எக்ஸ்பிரஸ்’ என்கிற  படம் எடுக்க இருக்கிறோம். பிப்ரவரியில் படப்பிடிப்புக்குச் செல்கிறோம்..” என்றார்.

Our Score