‘லிங்கா’ படத்தில் 9 நிமிடக் காட்சிகளை குறைத்திருப்பதாக அப்படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கே.எஸ் ரவிகுமாரின் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ திரைப்படம் கடந்த 12-ம் தேதி உலகம் முழுவதும் 3 ஆயிரம் தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்பட்டது. தமிழ் நாட்டில் மட்டும் 750 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழியிலும் இப்படம் ரிலீசாகியுள்ளது.
படத்திற்கு கணிசமாக பாராட்டும், எதிர்ப்பும் கலந்த விமர்சனங்கள்தான் வெளியாகியுள்ளன. ‘லிங்கா’ படத்தை பார்த்த பலரும் படம் நீளமாக இருப்பதாக விமர்சித்தனர். காட்சிகளை குறைத்தால் மேலும் விறுவிறுப்பாக இருந்து இருக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.
லிங்கா படம் மொத்தம் 2 மணி நேரம் 54 நிமிடம் ஓடுகிறது. இதையடுத்து படத்தின் நீளத்தை படக் குழுவினர் குறைத்துள்ளனர். தேவையில்லாத காட்சிகளை வெட்டியுள்ளார்கள்.
“மொத்தம் 9 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன. இடைவேளைவரை உள்ள படத்தில் 6 நிமிட காட்சிகளும், இடைவெளிக்கு பிறகு 3 நிமிட காட்சிகளும் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது படம் மேலும் விறுவிறுப்பாக உள்ளது” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.