கொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..!

கொரோனா வைரஸ் – தத்தளிக்கும் தமிழ்த் திரையுலகம்..!

சீனா பெற்றெடுத்த ‘கொரோனா’ என்னும் ஆட்கொல்லி வைரஸின் தாக்கத்தால் இன்றைக்கு உலகமே முடங்கிக் கிடக்கிறது. வல்லரசு நாடுகள்.. வளர்ந்த நாடுகள்.. சின்ன நாடுகள்.. என்ற பாகுபாடு பார்க்காமல் அனைத்து நாடுகளிலும் தனது கோர முகத்தைக் காட்டியிருக்கிறது இந்த வைரஸ்.

இந்தியாவில் இதுவரையிலும் உயிர்ப் பலி அதிகமாக இல்லையென்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகளினால் வைரஸ் பரவுவது மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதையும் மீறி வைரஸ் தாக்குதலோடு நாட்டிற்குள் வந்தவர்களையும், இவர்கள் மூலமாக வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களையும் தகுந்த பாதுகாப்போடு காத்து வருகின்றன மத்திய, மாநில அரசுகள்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதிலும் திரையரங்குகள், மால்கள், காட்சிக் கூடங்கள்.. பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடங்கள் அனைத்தையும் மார்ச் 31-ம் தேதிவரையிலும் இழுத்து மூடும்படி மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டு.. இன்றைக்கு இந்தியாவே முடங்கிப் போய்க் கிடக்கிறது..!

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் திரையரங்குகளும் சிக்கிக் கொண்டன. ஒரேயொரு பேப்பரின் மூலமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், இதனால் திரையுலகத்தில் கிளம்பியுள்ள பிரச்சினைகள் பலவிதங்கள்..!

இதோடு கூடவே புதிய திரைப்படங்களின் படப்பிடிப்புகளும், சின்னத்திரை படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது இன்னொரு பக்கம்.. பலவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.

திரையரங்குகளில் இந்த வாரம் ஓடிக் கொண்டிருந்த புதிய திரைப்படங்களான ‘அசுர குரு’, ‘தாராள பிரபு’, ‘கயிறு’, ‘வால்டர்’ ஆகிய படங்கள் திரைக்கு வெளிவந்த 4 நாட்களிலேயே முடங்கிப் போயின. இன்னும் கொஞ்சம் தியேட்டர்களில் தம் கட்டி ஓடிக் கொண்டிருந்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘ஓ மை கடவுளே’ போன்ற படங்களும் தங்களது ஆயுளை இழந்துவிட்டன. ‘திரெளபதி’ படமும் தன் இறுதி மூச்சைவிட்டுவிட்டது.

இப்படி இந்தப் படங்களின் மூலமாக கிடைத்திருக்க வேண்டிய வசூல் கிடைக்காமல் போனதால் இதனால் பாதிக்கப்பட்டிருப்பது இந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள்தான்.

இதேபோல் மற்ற தொழில்களான சுற்றுலா, போக்குவரத்து, கோவில்கள் என்று அனைத்துமே நாடு முழுவதிலும் தங்களது வருவாயை இழந்துவிட்டிருக்கின்றன.

ஆனால் திரையுலகத்தில் இன்னும் கொஞ்சம் குழப்பமாக இந்தத் தடையுத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டாலும் அப்போதும் தீர்க்க முடியாத பல பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதுதான் உண்மை.

ஏனெனில் மார்ச் 31-ம் தேதிவரையிலுமான இந்தத் தடையுத்தரவு அன்றைய நாளில் விலக்கிக் கொள்ளப்பட்டால்… அடுத்த நாளான ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து எந்தெந்த படங்களை வெளியிடுவது என்கிற குழப்பம் தயாரிப்பாளர்கள் சங்கத்தை ஆட்டுவிக்கப் போவது உறுதி..!

நாளைய தினமான மார்ச் 20-ம் தேதியன்று ‘ஞானச்செருக்கு’, ‘எனக்கு ஒண்ணு தெரிஞ்சாகணும்’, ‘காவல்துறை உங்கள் நண்பன்’, ‘சூடு’ ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வர இருந்தன. இதோடு மார்ச் 27-ம் தேதியன்று இன்னும் சில படங்களும் திரைக்கு வர ஒப்பந்தமாகியிருந்தன. இப்போது இந்தத் திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், “எங்கள் படங்கள்தான் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளிவர வேண்டு்ம்…” என்று எதிர்பார்ப்பார்கள்.

ஆனால் அதே நேரம்… "படம் வெளியான 4 நாட்களிலேயே தியேட்டர்களை மூடிவிட்டதால் நாங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகிவிட்டோம். எனவே, எங்களது படங்களுக்குத்தான் முன்னுரிமை தரப்பட வேண்டும்…" என்று திரையரங்குகள் மூடப்பட்டபோது ஓடிக் கொண்டிருந்த படங்களின் தயாரிப்பாளர்களும் கேட்பார்கள். இதுவும் ஒருவகையில் நியாயமானதுதான்..!

இப்போது இவர்களது கோரிக்கையை தயாரிப்பாளர் சங்கம் ஏற்றுக் கொண்டால் அடுத்த மாதம் முழுவதும் படங்களை திரையிட திட்டமிட்டிருந்த பல பெரிய திரைப்படங்களின் திரையிடலிலும் குழப்பங்கள் வரும். இது இப்படியே தொடர்ந்து போய் திரைப்படங்களின் வெளியீடுகள் மாதக் கணக்கில் தள்ளிப் போகும் சூழல் உருவாகியிருப்பதினால் தயாரிப்பாளர்கள் அவதியுறப் போவது உறுதி.

இன்னொரு பக்கம் நடந்து கொண்டிருந்த அனைத்துத் திரைப்படத் தயாரிப்புகளையும் முடக்கிவிட்டது இந்த ‘கொரோனா’ வைரஸ். வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில்.. நடந்து கொண்டிருந்த படப்பிடிப்புகள்கூட நிறுத்தப்பட்டுவிட்டன. கிட்டத்தட்ட 13 நாட்கள் ஒட்டு மொத்தப் படப்பிடிப்புகளும் ரத்து என்ற நிலையில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் என்ன என்பதில் பல தயாரிப்பாளர்களின் அலுவலகத்தில் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள் தயாரிப்பு நிர்வாகிகள்.

சின்ன பட்ஜெட் படங்களுக்கு பரவாயில்லை. எப்படியாவது தப்பித்துக் கொள்வார்கள். பெரிய நடிகர்களை வைத்து படமெடுப்பவர்கள்.. இந்த 13 நாட்களுக்குப் பிறகு அந்தந்த நடிகர், நடிகைகளின் கால்ஷீட்டை பெறுவதற்கு என்ன பாடுபடப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.

இப்போதே தங்கள் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர், நடிகைகள் அடுத்து கால்ஷீட் கொடுத்திருந்த மற்றைய படங்களின் தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். “கொஞ்சம் விட்டுக் கொடுங்கள்…” என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்.

இது ஒருவகையான சங்கிலித் தொடர்போல ஒரு நடிகரின் கால்ஷீட் கிடைக்காததால் பல்வேறு மொழிகளில்… பல்வேறு சினிமாக்களில் நடிக்கும் பல்வேறு மொழி நடிகர்களுக்கும் சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கிறது.

செட் போட்டு படமெடுத்தவர்கள் வேறு வழியில்லாமல் அடுத்த 13 நாட்களுக்கு சும்மாவே வைத்திருப்பதற்காகவே அந்த செட்டுக்கு சும்மாவே வாடகை கொடுக்கப் போகிறார்கள். அடுத்த செட்டுக்களை அதே இடத்தில் அமைக்கக் காத்திருந்த புதிய தயாரிப்பாளர்களும் தங்களது படப்பிடிப்பை தள்ளிப் போட்டுவிட்டு காத்திருக்க வேண்டிய சூழல்.

இதனால் அவர்கள் வாங்கிய கடனுக்கான வட்டியும் இன்னொரு பக்கம் ஏறும் நிலைமை.. வட்டி குட்டி போட்டு… படத்தின் துவக்க நிலை தயாரிப்பிலேயே நஷ்டத்தைக் காணும் நிலைமையில்தான் தற்போது படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் நிற்கிறார்கள்.

தியேட்டர் பிரச்சினையைவிடவும் நடிகர், நடிகைகளின் இந்தக் கால்ஷீட் பிரச்சினையே இப்போது தயாரிப்பாளர்களுக்குக் கழுத்தை நெரிக்கவிருக்கிறது. எப்படி சமாளிக்கப் போகிறார்களோ தெரியவில்லை..!?

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தற்போது தேர்தல் நடைமுறைகள் துவங்கிவிட்டதால் இதுவரையிலும் இருந்த இடைக்கால நிர்வாகக் கமிட்டிக்கான அதிகாரம் இப்போது இல்லை என்று சொல்லப்படுகிறது.

அதோடு அனைத்து முக்கிய தயாரிப்பாளர்களும் தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கோடு தங்களுக்கான அணிகளைச் சேர்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருப்பதாலும் படம் எடுத்துக் கொண்டிருக்கும் இப்போதைய தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளுக்கு யார், எப்படி, எப்போது தீர்வு காணப் போகிறார்கள் என்றே தெரியவில்லை..!

இன்னொரு பக்கம் சின்னத்திரை உலகத்திற்கு வேறுவிதமான பிரச்சினைகளையும் உருவாக்கிவிட்டது இந்தக் ‘கொரோனா’ வைரஸ்.

பொதுவாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்களின் டேப்புகள் ஒளிபரப்பும் நாளுக்கு முந்தின நாளன்றுதான் தொலைக்காட்சியில் அளிக்கப்படும். பல சீரியல்களில் அடுத்த 5 நாட்களுக்குத் தேவையான சீரியலின் எபிசோடுகள் மட்டுமே கைவசம் இருக்கும்.

ஒரு சில பெரிய நடிகர், நடிகைகளை வைத்து தயாராகும் சீரியல்… ஒரு நாள் ஷூட் செய்து.. அன்றைய இரவிலேயே எடிட் செய்து.. அடுத்த நாள் டப்பிங் செய்து.. அன்றைய இரவில்தான் டேப்பை தொலைக்காட்சிகளில் ஒப்படைக்கிறார்கள். இப்படி மின்னல் வேகத்தில்.. அவசரம், அவசரமாக தயாரித்து ஒளிபரப்பி வருகிறார்கள்.

இந்தச் சூழலில்தான் இந்த மின்னல் வேக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போனார்கள் சீரியல் தயாரிப்பாளர்கள். இடையில் 2 நாட்கள் மட்டுமே நேரம் இருந்ததால் அவசரம், அவசரமாக மூன்று ஷிப்ட்டிலும் வேலை பார்த்திருக்கிறார்கள்.

ஒரு சீரியலுக்கு  3 யூனிட் இயக்குநர்கள் வேலை செய்து மூன்று இடங்களில் 48 மணி நேரமும் இரவு, பகல் பாராமல் ஷூட்டிங் நடத்தியிருக்கிறார்கள். இதன் விளைவு நேற்று நள்ளிரவுவரையிலும் பல எடிட் ஷூட்டுகள் மிகவும் பிஸியாக இயங்கிக் கொண்டிருந்தன.

அப்படியும் ஒரு சில தயாரிப்பு நிறுவனங்களால் அடுத்த 11 நாட்களுக்குரிய டேப்புகளை தயாரிக்கவே முடியவில்லை. இதனால் இதுவரையிலும் அவர்களது சீரியல் ஒளிபரப்பான நேரத்தில் பாதியை அல்லது முக்கால்வாசி நேரத்தைக் குறைத்து.. அதிலிருந்து மீதியை எடுத்து அடுத்தடுத்த நாட்களில் ஒளிபரப்பிக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து அதனை செயல்படுத்தும்விதமாக மீண்டும் ஒரு ரீ எடிட்டிங் செய்து வருகிறார்கள்.

தனி நபர்கள் நடத்தும் எடிட்டிங் ஸ்டூடியோக்களுக்கும் இந்தத் தடையுத்தரவு வந்துள்ளதால் சீரியல் தயாரிப்பாளர்கள் தங்களது டேப்புகளை தற்போது அந்தந்த சீரியல்கள் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிறுவனங்களிலேயே ஒப்படைத்து அங்கேயே எடிட்டிங் செய்யும் பணியைச் செய்து வருகிறார்கள்.

இன்னொரு பக்கம்… இந்த அவசர வேலையைச் செய்தவிதத்தில் பாராட்டுக்களைப் பெற்ற துணை, உதவி, இணை இயக்குநர்களுக்கு இந்தக் கடின வேலைக்கான சம்பளம் கிடைக்காமல் போயிருப்பதும் இப்போது துணை இயக்குநர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. உடனடியாக கூடுதல் தொகையினை புரட்ட முடியாததால் உதவி இயக்குநர்களுக்கு சம்பளம் தர முடியவில்லை என்று தயாரிப்பாளர்கள் சமாளித்திருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம்.. தினமும் வேலைக்குச் சென்றால்தான் சம்பளமும், சாப்பாடும் என்கிற நிலைமையில் இருந்த கடை நிலை திரைத்துறை ஊழியர்களின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது.

எதிர்பாராமல், திட்டமிடப்படாதவகையில் திடீரென்று இந்தத் தொழில் முடக்கம் நடந்துள்ளதால் அடுத்த 13 நாட்களுக்கு என்ன செய்வது.. பொருளாதாரச் செலவுகளை எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல் திரையுலகத் தொழிலாளர்கள் திணறி வருகிறார்கள்.

அதோடு மார்ச் 31 முடிந்த வாரத்தில் அடுத்த மாதமும் துவங்குவதால் வீட்டு வாடகை.. மளிகை சாமான்கள்.. வீட்டு செலவுகள்.. என்று மும்முனைத் தாக்குதலில் சிக்கப் போகும் தங்களது நிலைமையை நினைத்து இப்போதே பெரும் கவலையில் மூழ்கியிருக்கிறார்கள் பெப்ஸி தொழிலாளர்கள்..!

எத்தனையோ பிரச்சினைகளை சமாளித்து படத்தைத் தயாரித்து உருவாக்கிவிட்டபோதும்.. அதனைத் திரைக்குக் கொண்டு வந்த பிறகும் இப்படியொரு பிரச்சினையா என்றால்.. தொழிலதிபர்களில் பாவப்பட்ட ஜீவன்கள்… நமது தயாரிப்பாளர்கள்தான் என்று சொல்லத் தோன்றுகிறது.

‘கொரோனா’ வைரஸ் என்னும் இந்த சைத்தான்.. மனித உயிர்களை எடுத்ததைவிடவும், மனித உயிர்களை முடக்கிப் போட்டதில்தான் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. உலகம் முழுவதும் இதனால் முடங்கிப் போயிருக்கும் தொழில்களும், தொழிலாளர்களும்.. இதில் இருந்து மீண்டு வருவதற்கு நிச்சயமாக சில காலமாகும்..!