full screen background image

“இனிமேல் செயலில் காட்டுவோம்..” – ரசிகர்களிடத்தில் சிம்பு பேச்சு..!

“இனிமேல் செயலில் காட்டுவோம்..” – ரசிகர்களிடத்தில் சிம்பு பேச்சு..!

நடிகர் சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’ படத்தின் இசை வெளியீ்ட்டு விழா இன்று மாலை சென்னையில் எழும்பூர் ‘ஆல்பர்ட்’ தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் நாயகன் சிம்பு, நாயகிகள் நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பால சரவணன், இயக்குநர் இமயம் பாரதிராஜா, படத்தின் இயக்குநர் சுசீந்திரன் மற்றும் படத்தில் பங்கு கொண்ட தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

சிம்புவின் ரசிகர்கள் ‘ஆல்பர்ட்’ தியேட்டரைச் சுற்றிலும் போஸ்டர்களையும், பேனர்களையும் வைத்து சிம்புவுக்கு வரவேற்பளித்தனர். நூற்றுக்கணக்கனக்கான சிம்பு ரசிகர்களால் ஆல்பர்ட் திரையரங்கம் நிரம்பி வழிந்தது.

இந்த விழாவில் படத்தின் நாயகனான சிம்பு பேசும்போது, “நான் நடிச்சிட்டிருந்த ‘மாநாடு’ படம் நிறைய இடங்கள்ல, தள்ளித் தள்ளி நடக்க வேண்டியிருந்தது. அதுக்கு இடையில் சீக்கிரமா வெளியாகுற மாதிரி ஒரு படத்தைப் பண்ணலாமேன்னு எனக்குத் தோணுச்சு.

அப்பத்தான் இயக்குநர் சுசீந்திரன்கிட்ட நான் பேசினேன். ‘நாம சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்’னேன். இதுக்கு முன்னாடியே நாங்க இது மாதிரி பேசியிருக்கோம். அப்போ ‘ஒரு நல்ல கதை கிடைச்சால் உடனே செய்யலாம்’ என்றார் சுசீந்திரன் ஸார்.

அதே மாதிரி இப்போ கேட்டவுடனேயே இந்த ‘ஈஸ்வரன்’ படத்தோட கதையைச் சொன்னார். இந்தக் கதையைக் கேட்ட பொழுது எனக்கு ரொம்ப தன்னம்பிக்கை வந்துச்சு. நாட்டுல இப்ப எல்லாருமே ஒரு மாதிரி மன உளைச்சல்ல இருக்காங்க. பிரச்சினைல மாட்டிருக்காங்க. இந்த நேரத்துல இந்தப் படத்தோட கதையைக் கேட்டவுடன் எனக்கே ஒரு ரிலீப் கிடைச்சது.

இந்தப் படத்தைப் பார்க்குற எல்லாருக்குமே நெகட்டிவ் சிந்தனைகள் போய் பாஸிட்டிவ் சிந்தனைகள் மட்டும்தான் வரும். அதுதான் இந்த ‘ஈஸ்வரன்’ படம்.

ஏன்னா இப்போ எங்க பார்த்தாலும் நெகட்டிவிட்டி.. யாருக்கும் யாரையும் பிடிக்கலை. எதைப் பார்த்தாலும் பிடிக்கலை.. எங்க பார்த்தாலும் பொறாமை.. சமூக வலைத்தளங்கள்ல யாராச்சும், யாரையாவது திட்டிக்கிட்டேயிருக்காங்க. மொதல்ல இதை நிறுத்துங்க. நம்ம மனசை முதல்ல மாத்தணும். அப்புறம் எல்லாமே சரியாகும்.

என் வாழ்க்கைல எனக்கும் இது மாதிரிதான் இருந்துச்சு. அதுனால நிறைய இழந்துட்டேன். நிறைய பிரச்சினைகளை சந்திச்சேன். இதெல்லாம் எதனால்ன்னு யோசிச்சுப் பார்த்தேன். எல்லாமே வெளில இருந்து இல்ல.. எல்லாத்துக்கும் காரணம் நமக்கு உள்ளதான் இருக்கு. அதை சரி செய்தாலே போதும்.. நாம் நாமளா இருக்கலாம்ன்ற உண்மை எனக்குத் தெரிஞ்சது. அப்படியே என்னையும் மாத்திக்கிட்டேன். அதன் தொடக்கம்தான் இது.

ஒவ்வொருத்தனுக்கும் ஒரு பெர்ஸனல் லைப் இருக்கும். அதை நாம தொடவே கூடாது. அது அவனோடது.. அதை அவனை பார்த்துக்குவான். சரி செய்துக்குவான். நீங்களும் மாறிருங்க. யாரைப் பார்த்தும் பொறாமைப்படாதீங்க. திட்டாதீங்க. வாழ்த்துங்க.. அவனும் நல்லாயிருக்கணும்.. நாமளும் நல்லாயிருக்கணும்ன்னு நினைங்க. அதுதான் நமக்கும் நல்லது.. நம்ம உடம்புக்கும் நல்லது.

இந்தப் படத்துல என்கூட நிதி அகர்வால் நடிச்சிருக்காங்க. அவங்க ஏற்கெனவே ‘பூமி’ படத்துல நடிச்சிருக்காங்க. அவங்களுக்கு எனது வாழ்த்துகள். நந்திதாவை கடைசி நிமிஷத்துலதான் கூப்பிட்டோம். சில காட்சிகள் என்றாலும் வந்து நடிச்சுக் கொடுத்தாங்க. அவங்களுக்கும் எனது நன்றிகள்.

பாரதிராஜா அப்பாவை பத்தி நான் பேசியே ஆகணும். அவர்கூட ச்சும்மா நின்னுட்டிருந்தாலே போதும்.. அவரோட எனர்ஜி நமக்கும் பரவும். அந்த அளவுக்கு பவர்புல்லான மனிதர் அவர். அழகான கேரக்டரை இதுல செஞ்சிருக்காரு. அவருக்கும் எனது நன்றி.

மேலும் பால சரவணன் என்கூடவே வர்ற ஒரு கேரக்டர்ல நடிச்சிருக்காரு. எங்க ரெண்டு பேரோட காம்பினேஷன் ரசிகர்களுக்குப் புதுசா இருக்கும்ன்னு நினைக்கிறேன். முனீஸ்காந்த் அண்ணனும் நடிச்சிருக்கார். அப்புறம் சின்னப் பிள்ளைகள் நிறைய பேர் நடிச்சிருக்காங்க. எல்லாருக்கும் எனது நன்றிகள்.

இயக்குநர் சுசீந்திரன் ஸார் வெரி பாஸ்ட் ஒர்க்கர். ஒரு ஷாட் முடிஞ்சு நான் திரும்பிப் பார்க்குறதுக்குள்ள அடுத்த ஷாட்டுக்குப் போயிருவாரு.. ஓகேவா.. இல்லையான்னாச்சும் சொல்லிட்டுப் போங்க ஸார்ன்னு சொல்லுவேன். ஷூட்டிங் ஸ்பாட் ரொம்பக் கலகலப்பா இருந்துச்சு. படம் முழுக்க நாங்களே ஹேப்பியாத்தான் படப்பிடிப்பை நடத்தினோம்.

இந்தப் படம் தியேட்டருக்காக மட்டுமே எடுக்கப்பட்டது. தியேட்டரில் மட்டும்தான் வெளியாகும். வரும் பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது. அன்றைக்கு தியேட்டர்களில் 100 சதவிகித டிக்கெட்டுகளை கொடு்க்க தமிழக அரசும் ஒத்துக் கொண்டுள்ளது. இதற்காக தமிழக முதலமைச்சருக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இந்தப் படத்துக்கு அப்புறம் ‘மாநாடு’ படத்துல நடிக்கிறேன். அப்புறம் ‘பத்து தல’ இருக்கு. அதுக்கப்புறம் ஒரு படம் இருக்கு. நாலாவதா சுசீந்திரனே இயக்கப் போற ஒரு படத்துலேயும் நடிக்கப் போறேன். அந்தப் படம் வரும் இந்த வருடத் தீபாவளிக்கு நிச்சயமாக வெளியாகும். இனிமேல் வரிசையாக என் படங்கள் வரும்.

‘அவன் வாழ்க்கையை அழிக்கணும்; இவன் வாழ்க்கையை அழிக்கணும்’னு பிளான் பண்ணாதீங்க. மேல இருக்கிறவன் வேற பிளான் வச்சிருக்கான். அவன் சிரிச்சிடுவான். இந்த நேரத்தில் நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். இனிமேல் செயல் மட்டும்தான். செயலில் மட்டும்தான் பேசுவோம்.. அவ்வளவுதான்.. வந்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றி..” என்று கூறினார்.

Our Score