‘எச்சரிக்கை-இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தின் வெளியிடும் உரிமையை பிரபல விநியோகஸ்தர் கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி வாங்கியுள்ளார்.
இன்று சினிமாத் துறைக்குத் தேவை நேர்மையான, துணிச்சலான விநியோகஸ்தர்கள் என்கிற ‘ஆக்சிஜன்’தான். நல்ல படம் என்று பாராட்டப்பட்ட பல படங்கள் நல்ல விநியோகஸ்தர்கள் கிடைக்காமல் தோல்வியை தழுவிய சோகங்கள் உண்டு.
சிறந்த படங்களை கண்டு பிடித்து அதை முறைப்படி மொத்தமாக வாங்கி சிறப்பாக வெளியிட்டு நல்ல விநியோகஸ்தர் என்று பெயரெடுத்தவர் ‘கிளாப் போர்டு புரொடக்ஷன்ஸ்’ வி.சத்யமூர்த்தி.
‘தப்பு தண்டா’ படத்தின் மூலம் திரைத்துறைக்கு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் வி.சத்யமூர்த்தி. இயக்குநர் சுசீந்திரன் இயக்கிய ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, விஜய் சேதுபதி நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’, விஜய் மில்டன் தயாரித்து, இயக்கிய ‘கோலிசோடா-2’ போன்ற படங்களை வாங்கி வெளியிட்டார்.
தற்போது இவர் ‘எச்சரிக்கை-இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தின் விநியோக உரிமையையும் வாங்கியிருக்கிறார்.
டைம் லைன் சினிமாஸ் மற்றும் சுந்தரம் அண்ணாமலை புரொடக்ஷன்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – சுதர்ஷன் ஸ்ரீனிவாஸ், இசை – சுந்தரமூர்த்தி கே.எஸ், பாடல்கள் – கபிலன், கலை – விஜய் ஆதிநாதன், நடனம் – விஜய், சதீஷ், அனுஷா ஸ்வாமி, சண்டை பயிற்சி – மிராக்கில் மைக்கேல். படத் தொகுப்பு – கார்த்திக் ஜோகேஷ், தயாரிப்பு நிர்வாகம் – சதீஷ் ரகு, தயாரிப்பு – C.P.கணேஷ், சுந்தர் அண்ணாமலை, எழுத்து, இயக்கம் – சர்ஜுன்.
இயக்குநர் சர்ஜூன் யூ டியூப்பில் பிரபலமான ‘மா’, ’லஷ்மி’ ஆகிய குறும் படங்களை இயக்கியவர். அத்துடன் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான மணிரத்னம், A.R.முருகதாஸ் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.
இந்தப் படத்தின் சிறப்பையும் ‘மா’, ‘லஷ்மி’ படங்களின் நேர்த்தியையும் கேள்விப்பட்ட ‘அறம்’, ‘குலேபகாவலி’ படங்களின் தயாரிப்பாளர் ராஜேஷ் நயன்தாரா இருவரும் அவர் சொன்ன வித்தியாசமான கதையை கேட்டு உடனடியாக அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
இயக்குநர் சர்ஜூன் இந்தப் படம் பற்றிப் பேசுகையில், “இதுவொரு கிரைம் திரில்லர் படம். ‘எச்சரிக்கை-இது மனிதர்கள் நடமாடும் இடம்’ என்கிற டைட்டிலிலேயே இது திரில்லர் படம் என்று சொல்லி இருக்கிறோம்.
சத்யராஜ் சார் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். மனிதக் கடத்தல் பற்றி இதில் சொல்லி இருக்கிறோம். பாண்டிச்சேரி சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது இம்மாதம் படம் வெளியாகிறது…” என்றார் இயக்குநர்.
கிளாப் போர்டு புரொடக்சன்ஸ் தற்போது யூ டியூப் புகழ் இளைஞர்களை வைத்து ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற படத்தையும் தயாரித்து முடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்க இருக்கிறது.











