கஜினிகாந்த் – சினிமா விமர்சனம்

கஜினிகாந்த் – சினிமா விமர்சனம்

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இதில் ஆர்யா நாயகனாகவும், சாயிஷா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் ஆடுகளம் நரேன், சம்பத், உமா பத்மநாபன், சதீஷ், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், லிஜீஷ், நீலிமா ராணி, காளி வெங்கட், மதுமிதா, டெல்லி கணேஷ், சுலக்சனா, மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – பாலமுரளி பாலு, ஒளிப்பதிவு – பல்லு, படத் தொகுப்பு – பிரசன்னா G.K., கலை இயக்கம் – சுப்ரமணிய சுரேஷ், சண்டை பயிற்சி – அன்பறிவ், நடன இயக்கம்  -பாபா பாஸ்கர், மக்கள் தொடர்பு – B. யுவராஜ், எழுத்து & இயக்கம் – சந்தோஷ் பி.ஜெயக்குமார், தயாரிப்பு நிறுவனம் – ஸ்டூடியோ க்ரீன், தயாரிப்பாளர் – கே.ஈ.ஞானவேல்ராஜா.

2015-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி தெலுங்கு மொழியில் வெளியான Bhale Bhale Magadivoy என்கிற தெலுங்கு திரைப்படத்தின் தமிழ் ரீமேக்குதான் இத்திரைப்படம்.

தெலுங்கில் நானியும், லாவண்யா திரிபாதியும் நடித்திருந்தனர். ஒரு மறதி குணம் கொண்ட இளைஞனுக்குக் கல்யாணம் செய்து வைக்க அவனது பெற்றோர் எப்படி கஷ்டப்படுகின்றனர்.. அவனுக்குக் கிடைத்த காதல் ஜெயித்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதைக் கரு.

10 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் மொத்தமாக 55 கோடி ரூபாய்வரையிலும் வசூலித்து நடிகர் நானியை முதல்முறையாக 50 கோடி வசூலைத் தாண்டிய ஹீரோக்கள் பட்டியலில் திணித்தது.

தெலுங்கு திரையுலகின் மிக இளம் வயது இயக்குநரான மாருதி தாசரியின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை அதே அளவு நகைச்சுவை வரும் அளவுக்கு திறமை மிக்க இயக்குநரிடம் தர வேண்டும் என்பதால் காத்திருந்து சந்தோஷ் ஜெயக்குமாரிடம் கொடுத்து படத்தை தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை நிச்சயமாக பாராட்ட வேண்டும்.

‘ஹரிஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ என்று பிட்டு படங்களை எடுத்துக் கொடுத்து தமிழ்ச் சினிமாவின் பெயரைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கியிருக்கும் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இந்தப் படத்தில் எல்லாவற்றுக்கும் சேர்த்து புண்ணியம் தேடியிருக்கிறார்.

ரஜினிகாந்த் என்னும் ஆர்யாவின் அப்பா ‘ஆடுகளம்’ நரேன். அம்மா உமா பத்மநாபன். நரேன் தீவிரமான ரஜினி ரசிகர். உமா பத்மநாபன் கர்ப்பிணியாக இருந்தபோது ‘தர்மத்தின் தலைவன்’ திரைப்படம் வெளியாகிறது. இத்திரைப்படத்தை தங்களது சொந்தத் தியேட்டரில் வெளியிடுகிறார் நரேன்.

படம் ஓடிக் கொண்டிருந்த முதல் காட்சியிலேயே தியேட்டரிலேயே உமாவுக்கு பிரசவம் நடந்து ஆர்யா பிறக்கிறார். தியேட்டரிலேயே.. அதுவும் ரஜினி படம் ஓடும்போதே பிறந்ததால் தன் மகனுக்கு ‘ரஜினிகாந்த்’ என்று பெயர் வைக்கிறார் நரேன்.

‘ரஜினிகாந்த்’ இப்போது தாவரவியல் படித்துவிட்டு ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இப்போதிருக்கும் மிகப் பெரிய பிரச்சினையே அவருக்கு இருக்கும் மறதி குணம்தான். முக்கியமான விஷயங்களை பேசும்போதோ அல்லது செய்து கொண்டிருக்கும்போதே அடுத்த வேலை வந்துவிட்டால் செய்து கொண்டிருக்கும் வேலையைவிட்டுவிட்டு போய்விடுவார்.

இந்த மறதி நோயினால் இவருடைய பெயரை ‘கஜினிகாந்த்’ என்று கிண்டலடித்து அழைக்கிறார் இவரது தந்தை நரேன். ஆர்யாவுக்கு பெண் தேடி அலைகிறார். கிடைத்த பெண்களெல்லாம் இவரது மறதி நோயை அறிந்து ஓடிப் போகிறார்கள்.

கடைசியாக சம்பத்தின் பெண்ணான சாயிஷாவை பெண் பார்க்க ஏற்பாடு நடக்கிறது. தோட்டக் கலை நிபுணரான சம்பத் மாப்பிள்ளையை தான் பார்க்க வேண்டும் என்று விரும்ப.. அவரைச் சந்திக்கப் போகும் ஆர்யா வழக்கம்போல மறதி நோயால் அதை மறந்துவிட்டுப் போக சம்பத் டைம் பன்ச்சுவாலிட்டியை சரிவர பின்பற்றாத ஆர்யாவை தனக்குப் பிடிக்கவில்லை என்று உறுதியாய் சொல்லிவிடுகிறார். அவரிடத்தில் தனது மறதி நோய் பற்றிச் சொல்ல “என் மூஞ்சிலேயே முழிக்காதே….” என்று சொல்லிவிடுகிறார் சம்பத்.

இதையறியும் ஆர்யாவின் அப்பாவான நரேனோ, “இனிமேல் உனக்கு நான் பெண் பார்க்க மாட்டேன். நீயே பார்த்துக்க…” என்று தண்ணி தெளித்து விடுகிறார்.

இப்படியொரு சூழலில்தான் சமூக அக்கறையும், குச்சுப்புடி நடன ஆசிரியையுமான சாயிஷா என்னும் வந்தனாவைச் சந்திக்கிறார் ஆர்யா. பார்த்தவுடன் காதலாகிறார். அவரைக் காதலிக்க வழக்கமான சினிமா ஹீரோக்கள் போல பலவித முயற்சிகள் செய்கிறார். இந்த முயற்சிகளுக்கிடையில் இவரது மறதி குணமும் சேர்ந்து இவரை திசை திருப்ப.. எப்படியோ கஷ்டப்பட்டு சாயிஷாவின் மனதில் இடம் பிடிக்கிறார் ஆர்யா. சாயிஷாவின் அப்பாதான் சம்பத் என்பது தெரியாமல் ஆர்யா அவரைக் காதலித்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் அதுவும் தெரிய வர.. சாயிஷாவை காதலிப்பது தான்தான் என்பது தெரிந்தால் கல்யாணத்திற்கு சம்பத் ஒத்துக் கொள்ள மாட்டார் என்று நினைக்கும் ஆர்யா தனது நண்பனான சதீஷை மாப்பிள்ளையாக நடிக்க வைக்கிறார்.

இந்தக் குழப்பத்திற்கிடையில் சம்பத்தின் நெருங்கிய நண்பரின் மகனான போலீஸ் இன்ஸ்பெக்டர் லிஜீஸும் சாயிஷாவை விரும்பி அவருக்கு நெருக்கடி கொடுக்கிறார்.

இதனால் சம்பத் லிஜீஸுக்கே சாயிஷாவை மணமுடிக்க நினைக்கிறார். சாயிஷாவோ ஆர்யாவை திருமணம் செய்ய நினைக்கிறார். ஆர்யாவோ சம்பத்தை எப்படி சமாளிப்பது என்று யோசிக்கிறார். முடிவு என்ன என்பதுதான் இந்தக் கலகலப்பான ‘கஜினிகாந்த்’ படத்தின் சுவையான திரைக்கதை.

முழு நீள நகைச்சுவைப் படமாக தென்பட்டாலும் இடைவேளைக்கு முன்புவரையிலும் சில காட்சிகளில் மட்டுமே நகைச்சுவை. ஆனால் இடைவேளைக்கு பின்பு நகைச்சுவை காட்சிக்கு காட்சி தெறிக்கிறது.

அதிலும் சம்பத் ஆர்யாவின் வீட்டுக்கு வந்து விசாரிக்கும் காட்சியில் தியேட்டரில் தொடர்ந்து 2 நிமிடங்களுக்கு கை தட்டல் ஒலிதான். சிறந்த நகைச்சுவையைக் கொண்டு வந்திருக்கும் அதே நேரத்தில் இடைவேளைக்குப் பின்னான காட்சிகளில் நைசாக இரட்டை அர்த்த வசனங்களையும் திணித்திருக்கிறார் இயக்குநர். அதுவும் சிரிப்போடு சிரிப்பாக மறைந்து போகும் அளவுக்கு இருப்பதால் மன்னித்து விட்டுவிடலாம்.

ஆர்யா ஸ்மார்ட் பாய் வேடத்திற்குக் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்திற்குப் பிறகு இந்தப் படத்தில்தான் அனைத்துத் தரப்பினருக்கும் பிடிக்கும்வகையில் நடித்திருக்கிறார்.

கடைசியில் தன்னுடைய மறதி நோயால் தான் படும் அவஸ்தையை தனது அம்மாவிடம் சொல்லி கண் கலங்கும் காட்சியில் ஆர்யா உண்மையாகவே நடித்திருக்கிறார் என்பதுதான் படத்தின் சிறப்பம்சம்.

பல முறை தனது மறதியால் ஏற்படு்ம் இன்னல்களை சிரிப்புடனேயே சமாளிக்கும் காட்சிகளில் விலா நோக சிரிக்க வைத்திருக்கிறார் ஆர்யா. அதிலும் பிச்சைக்காரனுக்கு பைக் சாவியைக் கொடுத்துவிட்டு பைக் பின்னாலேயே ஓடும் காட்சி சூப்பர்ப்..!

சதீஷின் கவுண்ட்டர் டயலாக்கிற்கு பொருத்தமாக ஆர்யாவும் டயலாக் டெலிவரி செய்திருக்கிறார். வாழ்த்துகள் பாராட்டுக்கள்.

வெண்ணெய்யாய் உருகி நிற்கும் சாயிஷா குச்சுப்புடி டான்ஸராக வந்தனாவாக நடித்திருக்கிறார். ஆர்யாவின் ஏமாற்றுதலையே தெரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ளாமல் உண்மையாகவே நேசிக்கும் நல்லதொரு கேரக்டர். ஆர்யாவை நடனமாட வைத்திருப்பதால் இவருக்கு தனியாக ஒரு பாராட்டு..! குச்சுப்புடி நடனம்தான் பெரிதாக இல்லை.

‘ஆடுகளம்’ நரேன் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில்தான் அமர்க்களமாக நடித்திருக்கிறார். ஆர்யா மீதான கசப்புணர்வில் வார்த்தைகளை வெறுப்பில் தேய்த்துக் கொட்டுவதிலும், ஆர்யாவின் மறதி மீதான கோபத்தை ஆர்யா மீது காட்டுவதிலும் கில்லி அடித்திருக்கிறார்.

இவருடைய வெறுப்புணர்வே நகைச்சுவையைத் தருகிறது. சம்பத் வீட்டுக்கு வரும் நேரத்தில் இவர் மற்றும் இவரது மனைவியாக நடித்திருக்கும் உமா பத்மநாபனின் நடிப்பும் ஏக ஜோர். அதிலும் உமா, கணவரையே ‘அண்ணா’ என்றழைக்கும் காட்சியிலும் சிரிப்பலை எழும்பி தியேட்டரை கலகலக்க வைத்திருக்கிறது. உமா பத்பநாபனுக்கும் பெயர் சொல்லும் படம் இது..!

இதேபோல் இதுவரையில் வில்லத்தனத்தில் பெயர் பெற்றிருந்த சம்பத் இதில் நடிப்பில் தனியாக பெயர் வாங்கியிருக்கிறார். ஆள் மாறாட்ட காட்சிகளில் குழப்பத்தை கண்களிலேயே காட்டிக் கொண்டு இவரும் சிரிப்பதற்கு வழி வகை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

சதீஷ் மற்றும் கருணாகரன் இருவரும் ஆர்யாவை காப்பாற்ற வந்த தோழர்களாய் காட்சியளித்திருக்கிறார்கள். இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் லிஜீஸ் தனது வில்லத்தனத்தை காட்டி மிக இயல்பாய் நடித்திருக்கிறார்.

கிடைத்த கேப்பில் கடைசி சில நிமிடங்களில் திரைக்கு வரும் காளி வெங்கட் ஆள் மாறாட்ட குழப்பத்தில் குழம்பிப் போய் உண்மையைச் சொல்ல முடியாமல் தவிப்பதும்.. அந்தக் காமெடி காட்சிகளும் பார்த்து சலித்தவையென்றாலும் சிறந்த இயக்கத்தினால் சிரிக்க வைத்திருக்கின்றன.

ஒளிப்பதிவாளர் பல்லுவின் ஒளிப்பதிவில் முதல் ஷாட்டில் இருந்து கடைசிவரையிலும் திரை வண்ணமயமாகவே இருக்கிறது. பாடல் காட்சிகளில் தாய்லாந்து கடற்கரை பிரதேசத்தை அப்படியே முழுமையாக படம் பிடித்துக் காண்பித்திருக்கிறார். சாயிஷாவின் அழகை குறைவில்லாமல் காட்டியிருக்கிறார். பாடல் காட்சிகளும் ஏ ஒன் ரகமாக ஜொலிக்கிறது.

பாலமுரளி பாலுவின் இசையில் பாடல்கள் ஒலிக்கின்றன. ஆனால் மீண்டும், மீண்டும் கேட்பதுபோல இல்லை என்பதுதான் உண்மை. அதே சமயம் பின்னணி இசையில் கொஞ்சம் அடக்கி வாசித்து வசனங்களை முழுமையாகக் கேட்கவிட்டு, சிரிப்பலையை எழுப்பி, நகைச்சுவையை பரப்பி.. ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறார் இசையமைப்பாளர். இதற்காகவே அவருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு.

இதில் கடைசியான கிளைமாக்ஸ் சண்டை காட்சி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொடர்பான காட்சிகளே தேவையில்லை. ஆனால் தெலுங்கில் சண்டை இல்லாமல் இருக்க முடியாது என்பதால் அப்படி வைத்திருக்கிறார்கள்.

அதனை அப்படியே மாற்றி இன்ஸ்பெக்டர்தான் வேண்டுமென்றே சாயிஷாவை விபச்சார வழக்கில் கைது செய்ய வைத்திருக்கிறார் என்பதை அறிந்த சம்பத், இதன் பின்பு ஆர்யாவை தேடி வந்து மாப்பிள்ளையாக்க முயல்வதாக திரைக்கதையை மாற்றியிருந்தால் அந்த சண்டை காட்சியெல்லாம் தேவையில்லாமல் போயிருக்கும்.

இன்ஸ்பெக்டரின் அந்த விபரீத ஒரு தலைக் காதலை காமெடியாக வேண்டுமானால் வைத்திருக்கலாம். சீரியஸாக வைத்திருப்பது திரைக்கதைக்கு உதவவில்லை.

எப்படியிருந்தாலும் படம் முழுவதும் சிரிக்க வைக்கவில்லையென்றாலும், முக்கால் வாசி நேரங்களில் தங்களை மறந்து சிரிக்க வைத்திருப்பதால் இந்தப் படம் ஆர்யாவுக்கும், இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமாருக்கும் நிச்சயமாக வெற்றிப் படமாக ஆகியிருக்கிறது..!

இந்தப் படம் ஓடவில்லையெனில் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் மீண்டும் பிட்டு படங்களின் பக்கம் ஓடிவிட வாய்ப்புண்டு என்பதால் இந்தப் படத்தை ஜெயிக்க வைத்தாக வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழகத்தின் ரசிகர்களுக்கு உண்டு என்பதைச் சொல்லிக் கொள்கிறோம்.

கலகலப்பான ஒரு பொழுது போக்கிற்காக இந்த ‘கஜினிகாந்த்’ படத்தை நிச்சயமாக பார்க்கலாம்..!

Our Score