full screen background image

மறைந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர் செய்யாறு ரவிக்குக் கிடைத்த பெருமை..!

மறைந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர் செய்யாறு ரவிக்குக் கிடைத்த பெருமை..!

சென்ற ஆண்டு காலமான தமிழ்த் திரைப்பட இயக்குநர் செய்யாறு ரவி இயக்கிய சிங்கள மொழி திரைப்படமான ‘Dharma Yuddhaya’ இதுவரையிலான சிங்கள திரைப்பட வரலாற்றிலேயே மிக அதிகமான வசூல் செய்த திரைப்படம் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறது.

இந்த ‘தர்ம யுத்தயா’ திரைப்படம் 2013-ம் வருடம் டிசம்பர் 19-ம் தேதியன்று வெளியாகி மலையாள மொழியில் வெளியாகி உலகம் முழுவதும் மிக அதிகப் பார்வையாளர்களையும் அதிக வசூலையும் வாரிக் குவித்த திரைப்படமான ‘திரிஷ்யம்’ படத்தின் சிங்கள ரீமேக்காகும்.

Drishyam-Movie-Poster-1

மலையாள ‘திரிஷ்யம்’ திரைப்படம் 2014-ம் வருடம் ‘திருஷ்யம்’ என்ற பெயரில் வெங்கடேஷ், மீனா நடிப்பில் தெலுங்கிலும், 2014-ம் வருடம் கன்னடத்தில் ‘திருஷ்யா’ என்ற பெயரில் ரவிச்சந்திரன், நவ்யா நாயர் நடிப்பிலும், 2015-ம் வருடம் தமிழில் கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் ‘பாபநாசம்’ படமாகவும், இதே 2015-ம் வருடம் ஹிந்தியில் அஜய் தேவ்கன், ஷ்ரேயா, தபு நடிப்பில் ‘திருஷ்யம்’ என்ற பெயரிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டது.

இப்படி மொழி மாற்றம் செய்யப்பட்ட அத்தனை மொழிகளிலும் இத்திரைப்படம் மிகப் பெரிய வசூலை வாரிக் குவித்தது என்பது ஆச்சரியம் கலந்த செய்தி.

பொதுவாக மொழி மாற்றுப் படங்கள் ஒரு மொழியில் நன்றாக ஓடினாலும் வேறொரு மொழியில் அதே வெற்றியை பெற்றுவிடாது. ஆனால் இத்திரைப்படம் இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கிக் கொடுத்தது.

dharmayudhayaa-stills-1

இதே ‘திருஷ்யம்’ திரைப்படம்தான் சிங்கள மொழியில் ‘தர்ம யுத்தயா’ என்கிற பெயரில் தயாரானது. இந்தப் படத்தில் தில்கானி ஏகநாயகா, ஜாக்சன் ஆண்டனி முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தை தமிழ்த் திரைப்பட இயக்குநர் செய்யாறு ரவி இயக்கியிருந்தார்.

செய்யாறு ரவி ஏற்கெனவே தமிழில் ‘தர்மசீலன்’, ‘அரிச்சந்திரா’ ஆகிய படங்களை இயக்கியவர். இதோடு ‘கோபுரம்’, ‘பணம்’, ‘ஆனந்தம்’, ‘அன்னக்கொடியும் 5 பெண்களும்’ ஆகிய தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியவர்.

கடந்த ஆண்டு ஜூலை 14-ம் தேதி இந்த ‘தர்ம யுத்தயா’ சிங்கள திரைப்படம் வெளியானது. ஆனால் இதனை பார்ப்பதற்கு இயக்குநர் செய்யாறு ரவி அப்போது உயிருடன் இல்லை.

seyyaaru ravi-1

கடந்தாண்டு மார்ச் 11-ம் தேதியன்று ‘அன்னக்கொடியும் 5 பெண்களும்’ என்ற சீரியலை இயக்கிக் கொண்டிருந்த தருணத்தில், படப்பிடிப்புத் தளத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு அவர் காலமானார்.

அவருடைய இறப்புக்கு பின் வெளியான அவருடைய ‘தர்ம யுத்தயா’ திரைப்படம் இலங்கையில் பெரும் வெற்றியைப் பெற்றது. அதோடு அதுவரையில் சிங்கள திரைப்படங்களின் வசூல் கணக்கையெல்லாம் முறியடித்து ‘அதிக வசூலை வாரிக் குவித்த திரைப்படம்’ என்கிற பெருமையைப் பெற்றது.

அதோடு சென்ற ஆண்டிற்கான சிறந்த திரைப்பட விருதுகள் பட்டியலில் தவறாமல் இத்திரைப்படமும் விருதுகளை வாரிக் குவித்துள்ளது.

சமீபத்தில் இலங்கையில் கொடுக்கப்பட்ட 2018-ம் ஆண்டிற்கான Derana Film Awards-ல் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த நடிகர், சிறந்த குணச்சித்திர நடிகர் ஆகிய நான்கு விருதுகளையும் இத்திரைப்படமே பெற்றிருக்கிறது.

dharmayudhayaa-stills-4

Best Supporting actor – Kumara Thirimadura (Dharmayuddhaya), Best Actress – Dilhani Ekanayake (Dharmayuddhaya), Best Actor – Jacson Anthony  (Dharmayuddhaya), Best Film of the highest income 2018 (Dharmayuddhaya).

‘திருஷ்யம்’ படத்தின் கதாசிரியரான மலையாள இயக்குநர் ஜீத்து ஜோஸப் இதனை தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இயக்குநர் செய்யாறு ரவியை பெரிதும் பாராட்டியிருக்கிறார்.

இந்தச் சாதனை செய்திகளை கேட்டுக் கொண்டாடியிருக்க வேண்டிய இயக்குநர் செய்யாறு ரவி இல்லாதது, அவரது குடும்பத்தினருக்கும், தமிழ்த் திரையுலகத்திற்கும் பெரிய துரதிருஷ்டம்தான்..!

அதோடு கலைக்கு மொழி என்கிற எல்லையே கிடையாது என்பதற்கும் இத்திரைப்படமே ஒரு சாட்சி. மலையாள மொழியில் தயாரான ஒரு கதை இன்று இந்தியாவையே சுற்றிவிட்டு அருகில் இருக்கும் இலங்கை மக்களையும் கவர்ந்திழுத்திருக்கிறது என்றால் சினிமா என்பது உலகம் தழுவி மக்களுக்கான மொழி என்பதையே சுட்டிக் காட்டுகிறது..!

இதன் ஒரிஜினல் கதாசிரியர் ஜீத்து ஜோஸப்பிற்கே அத்தனை பெருமைகளும் சேரும்..!

Our Score