full screen background image

காதலை உணர்வுப்பூர்வமாகச் சொல்ல வரும் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ திரைப்படம்!

காதலை உணர்வுப்பூர்வமாகச் சொல்ல வரும் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ திரைப்படம்!

ஒரு காதல் மனிதனின் வாழ்க்கையை முழுமையாக மாற்ற முடியுமா?

தனிமை, இழப்பு, வேதனை, மதுப் பழக்கம் என இருள் சூழ்ந்த வாழ்க்கைக்கு காதல் புதிய அர்த்தத்தை அளிக்குமா?

இந்தக் கேள்விகளுக்கு உணர்வுப்பூர்வமான பதிலை சொல்லும் முயற்சியாக உருவாகியுள்ள திரைப்படம்தான் “ஏன் என்னை ஏதோ செய்தாய்.”

இந்தப் படத்தின் எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் என நான்கு பொறுப்புகளையும் ஏற்றுள்ளார் டி.ஆண்டனி.

Anthony’s Atelier நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் டி. ஆண்டனியுடன் மதுமிதா தாஸ், ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், ஆலம் ஷா, நவ்யா சுஜி, மாதங்கி சதீஷ், ரியா மனோஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, இயக்கம் மற்றும் படத் தொகுப்பு ஆகியவற்றை டி.ஆண்டனி கவனித்துள்ள நிலையில், ஒளிப்பதிவை பியட்ரோ வில்லானி மேற்கொண்டுள்ளார். பாடல்களுக்கு ஜெய்கார் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரன் இசையமைத்துள்ளனர். பின்னணி இசையை ஜோயி ரிடா அமைத்துள்ளார். பாடல்களை கார்த்திக் நேத்தா மற்றும் தமிழ்மணி எழுதியுள்ளனர். ஒலிப்பதிவை ஜெய்கார் ஹரிநாத், சவுண்ட் மிக்சிங்கை ஆனந்த் ராமச்சந்திரன், கலை இயக்கத்தை கே.கே. சுரேந்தரன் மேற்கொண்டுள்ளனர். நிர்வாகத் தயாரிப்பாளர்களாக ஹரிஹரன் மற்றும் சந்தோஷ் பணியாற்றியுள்ளனர்.

காதலை வெறும் கதையாக மட்டும் அல்லாமல், ஒரு மனிதனின் உள்ளார்ந்த மாற்றத்திற்கான சக்தியாக இந்தப் படத்தில் சித்தரித்துள்ளார்.

வழக்கமான காதல் படங்களிலிருந்து விலகி, உணர்வுகளை மையமாகக் கொண்ட ரொமான்டிக் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.

உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் காதல் திரைப்படங்களை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு, “ஏன் என்னை ஏதோ செய்தாய்” திரைப்படம் ஒரு வித்தியாசமான அனுபவமாக அமையும் என்ற எதிர்பார்ப்பை, தற்போது வெளியாகியுள்ள இந்தப் படத்தின் டீசர் மேலும் அதிகரித்துள்ளது.

டீசரில் இடம் பெறும் காட்சிகள், சிறு வயதிலேயே தாயை இழந்து தனிமையில் வளர்ந்த இளைஞனின் மனநிலையை ஆழமாக வெளிப்படுத்துகின்றன.

வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை இழந்து மதுவுக்கு அடிமையாக வாழும் அவனது உலகில்,

ஒரு பெண்ணின் வருகை எப்படி புதிய நம்பிக்கையையும் வாழ்வதற்கான காரணத்தையும் உருவாக்குகிறது என்பதற்கான அழகான முன்னோட்டத்தை டீசர் வழங்குகிறது.

காதலின் மென்மையும், வாழ்க்கையின் வலியும், மனித உறவுகளின் ஆழமும் இணையும் இந்த டீசர், அதிக வசனங்களைவிட காட்சிகளின் மூலமாகவே உணர்வுகளைப் பேசுகிறது.

அதனால், காதல் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களிடம் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

படத்தின் முக்கியமான சிறப்பம்சமாக, முழுப் படமும் லைவ் சவுண்ட் தொழில் நுட்பத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், அனைத்து பாடல்களும் நேரடி இசைக் கருவிகளுடன் பதிவு செய்யப்பட்டுள்ளதால், இயல்பான ஒலித் தரத்துடன் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என படக் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பின்னணி பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 

வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி இந்தப் படத்தை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ளது.

Our Score