Modern DigiTech Media நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஜெகநாதன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் சங்கரபாண்டி, தீப்தி, காதல் சுகுமார், ஆண்ட்ரூஸ்,. துர்கா, விஜய் கணேஷ், ரோபோ சந்துரு, ஹேமா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இயக்கம் – முத்துவீரா, கதை, திரைக்கதை, வசனம் – எஸ்.டி.குணசேகரன், ஒளிப்பதிவு – ராஜா கே.பக்தவச்சலம், இசை – சரவணன், நடன இயக்கம் – தீனா, பத்திரிக்கை தொடர்பு – செல்வரகு.
இத்திரைப்படம் தெருக்கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கைக் கதை. மதுரைப் பகுதியில் நடப்பது போல அமைந்துள்ளது.
‘மதிச்சயம் பாண்டி’ என்ற சங்கரபாண்டி கலைக்குழு நடத்தி வருகிறார். இவருடைய தாய் மாமனான தர்மலிங்கம், இந்தக் கலைக் குழுக்களை ஏற்பாடு செய்து கொடுக்கும் புரோக்கர் வேலையைச் செய்து வருகிறார்.
அதே ஊரில் இருக்கும் பாண்டியின் அத்தை மகளான தனமும் தன்னுடன் தெருக்கூத்தில் நடனமாட இருப்பதாக பாண்டி சொல்ல.. இதை தர்மலிங்கம் எதிர்க்கிறார். தனமும், பாண்டியைத் தீவிரமாகக் காதலிப்பதால் தானும் அவனுடன் இணைந்து தெருக்கூத்தில் ஆடப் போவதாகச் சொல்கிறாள்.
“தனத்தின் அம்மா எப்போதோ யாருடனோ ஓடிப்போய்விட்டாள்” என்று ஊர் முழுக்க தவறான செய்தியைப் பரப்புகிறார் தர்மலிங்கம். இதனால் தனது அம்மா யார் என்பது தெரியாமல் தான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று உறுதியாய் சொல்கிறார் நாயகி தீப்தி.
இதனால் நாயகியின் அம்மாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் நாயகன் இறங்க.. இன்னொரு பக்கம் தர்மலிங்கம் சென்னையை சேர்ந்த பெரும் தொழிலதிபரிடம் அவரது மகள் இப்போதும் உயிருடன் இருப்பதாகச் சொல்லி அவரிடமிருந்து பணம் பறிக்க முயல்கிறார்.
கடைசியில் நாயகியின் அம்மா பற்றிய உண்மை தெரிந்ததா? நாயகியின் திருமணம் நடந்ததா?.. தர்மலிங்கம் சொன்ன அந்த மகள் யார்..? ஆகிய கேள்விகளுக்கான பதில்களை தெருக் கூத்துக் கலையின் பின்னணியில் பாடல்கள் மற்றும் நடனங்கள் மூலமாகச் சொல்லியிருக்கிறார்கள்.
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின ‘தெக்கத்திப் பொண்ணு’ சீரியலில் அறிமுகமான நாயகன் சங்கரபாண்டி ஹீரோவாக நடித்திருக்கும் முதல் படம் இது.
இந்த முதல் படத்திலேயே நடிப்பில் மட்டுமில்லாமல் நடனத்திலும் வெகுவாகத் தேறியிருக்கிறார். வசன உச்சரிப்பு, உடல் மொழி மற்றும் நடனம் ஆகியவை மூலம் ஒரு உண்மையான தெருக்கூத்து கலைஞராகவே நம் கண்களுக்குத் தெரிகிறார் சங்கரபாண்டி.
பாடல் காட்சிகளில் பாண்டியின் வேகம் வேகமான நடன அசைவுகளும், முகத்தில் காட்டும் நடிப்பும் மிகச் சிறப்பாகவுள்ளது. படத்தின் பல முக்கிய டிவிஸ்ட்டான கதைகளையெல்லாம் பாடல்கள் மூலமாக விவரித்திருப்பது ஒரு புதுமைதான். அந்தப் புதுமைகளையெல்லாம் தனது முக நடிப்பின் மூலம் சிறப்பாகக் காண்பித்திருக்கிறார் சங்கரபாண்டி.
நாயகியாக நடித்திருக்கும் தீப்தி, டப்பிங் குரல் என்றாலும் அது துளிகூட மிஸ்ஸாகாத வண்ணம் வசனம் பேசி நடித்திருக்கிறார். நடனக் காட்சிகளில் நாயகனுடன் இணைந்து போட்டி போட்டு நடனம் ஆடியிருக்கிறார். கிளைமாக்ஸ் நடனக் காட்சியில் தனது தந்தை யார் என்பதை வெளிப்படுத்தும்போது சிறப்பான நடிப்பையும் காண்பித்திருக்கிறார்.
நாயகனின் நண்பனாக கடைசிவரையிலும் வலம் வந்திருக்கும் ‘காதல்’ சுகுமார் நாயகனுக்கு இணையாக தெருக்கூத்து கலை நிகழ்ச்சிகளில் ஆட்டமும், பாட்டமுமாக ஆடிப் பாடி அசத்தியிருக்கிறார். குறிப்பாக உடுக்கை பூசாரி பாடலில் கவனிக்க வைத்திருக்கிறார்.
வில்லன் தர்மலிங்கமாக நடித்தவர், தொழிலதிபர் பூபதியாக நடித்தவர், நாயகனின் அம்மா, மற்றும் நாயகியின் வளர்ப்பு தாய் என்று மற்ற வேடங்களில் நடித்தவர்களும் ஓரளவுக்கு நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள்.
தெருக்கூத்து கலைகள் மற்றும் அந்தக் கலைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் திரைக்கதை, இதுவரையிலும் நாம் பார்த்திராத பாணியில் முழுக்க, முழுக்க பாடல்கள் மற்றும் நடனங்கள் மூலமாகவே சொல்லப்பட்டிருந்தாலும், அவை அனைத்துமே மிகச் சிறப்பாகவும் அமைந்துள்ளன.
பரவை முனியம்மா, கரிசல் கருணாநிதி, தேக்கம்பட்டி சுந்தர்ராஜன், கிடாக்குழி மாரியம்மா, ஆக்காட்டி ஆறுமுகம், செந்தில், ராஜலட்சமி ஆகிய தெருக்கூத்து பாடகர்கள் பாடிய பல பாடல்களை, இந்தப் படத்தில் அவர்கள் அனுமதியுடன் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
‘சித்திரை மாதம் சிறு முருங்கை பூத்தது போல’ பாடல், ‘அடியே வட்ட வட்டக் கொண்டைக்காரி’ என்ற பாடல், ‘ஆடத் தெரியாத ஆட்டக்காரி’ என்ற பாடல், ‘ஆத்தங்கரை பூந்தோட்டம்’ என்று ஒலித்த பாடல்களிலெல்லாம் இளமையும், இசையும், இனிமையும் ஒன்றாகவே அமைந்து நம்மைப் பெரிதும் குஷிப்படுத்துகின்றன.
ஓரங்க நாடகம் போல புருஷன், பொண்டாட்டி சண்டையை வைத்து ஒரு பாடலும், தமிழகத்தில் ஓடும் 42 ஆறுகளை மையமாக வைத்து எழுதப்பட்ட பாடலும் சிறப்பு. கிளைமாக்ஸில் நாயகியின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் பாடல்தான் படத்தின் ஹைலைட் என்றே சொல்லலாம்.
இசையமைப்பாளர் சரவணன் முழுக்க, முழுக்க நாட்டுப்புற பாடல்களின் பாணியில் இந்தப் பாடல்களை கையாண்டிருக்கும்விதம் படத்திற்கு மிகப் பெரிய பலத்தைச் சேர்த்திருக்கிறது. பின்னணி இசையையும் அளவாக கொடுத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ராஜா கே.பக்தவச்சலம் தன் கேமரா மூலமாக தெருக்கூத்துக் கலைஞர்களின் நடிப்புத் திறமையையும், நடனத் திறமையையும் அழகாகப் படம் பிடித்துள்ளார். கிராமத்தில் நடக்கும் தெருக்கூத்து நிகழ்ச்சிகளை பட்டோபடமில்லாமல் எளிமையாகப் படமாக்கித் தந்திருக்கிறார்.
பாடல் காட்சிகளே பிரதானம் என்பதால் அதிவேக நடன அசைவுகளைக் கச்சிதமாக நறுக்கித் தொகுத்துக் கொடுத்திருக்கும் படத் தொகுப்பாளரை பாராட்டியே தீர வேண்டும்.
கரகாட்டம் போன்ற தெருக்கூத்து கலையாக இருந்தாலும் அதிலும், எந்தவித ஆபாசமும் இல்லாமல் நடனம் அமைத்திருக்கும் நடன இயக்குநர் தீனா மாஸ்டருக்கும் நமது பாராட்டுக்கள்..!
இப்போதைய இணைய வழி வாழ்க்கையில் அழிந்து கொண்டிருக்கும் தெருக்கூத்து கலைகள் மற்றும் அதன் கலைஞர்களின் அவல நிலையை தனது சிறப்பான கதை, திரைக்கதை, வசனம் மூலமாக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் எஸ்.டி.குணசேகரன்.
தெருக்கூத்து கலையையும், அதன் கலைஞர்களையும் மையப்படுத்திய படம் இது என்பதால், படத்தின் முக்கியமான திருப்பங்களைக்கூட, வசனக் காட்சியாக வைக்காமல் அந்தக் கலைஞர்களின் பாணியில் பாடல், நடனம் மூலமாகவே விவரித்திருப்பது வித்தியாசமாகவும், தமிழ் சினிமாவுக்கு புதியதாகவும் இருக்கிறது.
கதை, திரைக்கதை, வசனம், நடனம், இசை, பாடல்கள் என்று பலவற்றிலும் இத்திரைப்படம் ஓகே வாங்கினாலும் டாக்கி போர்ஷன் என்ற வசனக் காட்சிகளைப் படமாக்குவதில் மட்டும் மந்தமாகிவிட்டது. இயக்குதலில் இருக்கும் போதாமை இந்தக் காட்சிகளில் தெளிவாகத் தெரிகிறது.
இருந்தாலும் மற்றைய திறமைகளுக்காகவே அதை மன்னித்து, இந்தப் படத்தை அவசியம் பார்த்தாக வேண்டிய பட்டியலில் சேர்த்துவிடலாம்.!
இந்த ‘டப்பாங்குத்து’ திரைப்படம் தெருக்கூத்து கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் பெருமை சேர்த்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை..!
RATING : 3 / 5