‘பீச்சாங்கை’ பட வெற்றி மூலம் கவனம் ஈர்த்த நடிகர் ஆர்.எஸ்.கார்த்திக் தற்போது புதியதாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படம், 1980 மற்றும் 1990-களில் தமிழகத்தில் நடந்து வந்த தெருக் கூத்துக் கலையை மையமாகக் கொண்டு தயாராகி வருகிறது. இதில் கார்த்திக் ஜோடியாக மனிஷா ஜித் நடிக்கிறார்.
மற்றும் இயக்குநர் மாரிமுத்து, சிவசங்கர் மாஸ்டர், தவசி, நந்திதா ஜெனிபர் மற்றும் பலரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்,
செல்வம் நம்பி இசையமைக்க, ஜெய்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். நடனம் – ராதிகா மாஸ்டர், சன்டை இயக்கம் – வீரா, M.G.M. நிறுவனம் தயாரிக்க, இணைத் தயாரிப்பாக ஜனா ஜாய்ஸ் முவிஸ் ஜேம்ஸ் சிவன் இணைந்து தயாரிக்க, படத்தினை எழுதி இயக்குகிறார் இயக்குநர் ஆதிரை.
இப்படத்தின் முதல் கட்டப் படபிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சிதம்பரம் அருகே உள்ள வெள்ளயங்குடி கிராமத்தில் இன்று துவங்கியது.
இந்தப் படப்பிடப்பில் 1980-களின் காலத்தை காண்பிக்கும்வகையில் பல நாடக கலைஞர்களுடன் மிக பிரம்மாண்டமாக அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
படம் பற்றி இயக்குநர் ஆதிரை கூறுகையில் “கூத்து என்பது சினிமாவின் முதல் படியாகும், கலையின் ஆதி வடிவம் இதுதான். ஆனால் இன்றைய காலகட்டத்தில் கொஞ்சம், கொஞ்சமாக அந்தக் கலை அழிந்து கொண்டு வருகிறது. அன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் கூத்து நடக்கும். ஆனால் இந்தக் காலகட்டத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் கூத்து நடப்பதே ஆச்சரியமாக இருக்கிறது, கூத்து அழிந்து விடக்கூடாது. அந்தக் கலையை காப்பாற்ற வேண்டும். அதனை பதிவு செய்யும் பொருட்டே இந்த படத்தை உருவாக்கியிருக்கிறேன்…” என்று கூறினார்.