படம் வெளியான 2-வது நாள் ரீமேக் விற்பனை-10-வது நாள் பூஜை, 15-வது நாள் படப்பிடிப்பு..!

படம் வெளியான 2-வது நாள் ரீமேக் விற்பனை-10-வது நாள் பூஜை, 15-வது நாள் படப்பிடிப்பு..!

ஒரு திரைப்படம் வெளியான 2-வது நாளே ரீமேக் உரிமை விற்று.. 10-வது நாளே பூஜை போட்டு, 15-வது நாளே ஷூட்டிங்கிற்குக் கிளம்பும் அதிசயம் தற்போது நடந்துள்ளது.

அந்த அதிசயத்தை நிகழ்த்தியிருப்பது மலையாளத் திரைப்படமான ‘திருஷ்யம்-2’ திரைப்படம்.  

மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திருஷ்யம்’-ன் இரண்டாம் பாகமான ‘திருஷ்யம்-2’ திரைப்படம் அமேஸான் பிரைம் OTT தளத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்றுதான் வெளியானது. அதற்குள்ளாக ரீமேக் உரிமை விற்று படப்பிடிப்பையும் துவக்கப் போகிறார்கள்.

கடந்த சனிக்கிழமையே இந்தப் படத்தின் தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்யும் உரிமை தொடர்பான விஷயங்கள் பேசி முடிக்கப்பட்டுவிட்டன.

திரிஷ்யம்’ முதல் பாகத்தை தெலுங்கில் ரீமேக் செய்த அதே குழு, இந்த இரண்டாம் பாகத்தின் ரீமேக்குக்கையும் தயாரிக்கிறது. முதல் பாகத்தில் நடித்திருந்த வெங்கடேஷ், மீனா, நதியா, நரேஷ் ஆகியோர் இந்த இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். ‘திருஷ்யம்’ திரைப்படங்களை மலையாளத்தில் இயக்கிய இயக்குநர் ஜீத்து ஜோசப்புதான் இந்த ரீமேக்கையும் இயக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் பூஜை மார்ச் 1 அன்று நடைபெறுகிறது. மார்ச்-5 அன்று படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து 50 நாட்கள் நடைபெறுகிறது.

இந்தத் தெலுங்கு பதிப்பை ராஜ்குமார் தியேட்டர்ஸ் சார்பில் ராஜ்குமார் சேதுபதி மற்றும் நடிகை ஸ்ரீபிரியா, மலையாள தயாரிப்பாளரான அந்தோணி பெரும்பாவூர் மற்றும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான சுரேஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

‘திருஷ்யம் 2’ படத்தின் தமிழ் பதிப்பை ராஜ்குமார் தியேட்டர்ஸ் சார்பில் ராஜ்குமார் சேதுபதி, நடிகை ஸ்ரீபிரியா ராஜ்குமார் மற்றும் ஆண்டனி பெரும்பாவுர் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளனர்.

தமிழ் பதிப்பின் இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.

திருஷ்யம்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பாபநாசம்’, ஜீத்து ஜோசப் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் கௌதமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானது நினைவிருக்கலாம்.

இந்த 2-ம் பாகத்திலும் இதே கூட்டணி நடிக்குமா.. இல்லையா.. என்பது விரைவில் தெரிய வரும்.

Our Score