full screen background image

மேலவளவு முருகேசன் கொலை சம்பவம்தான் ‘கர்ணன்’ படத்தின் கதையா..?

மேலவளவு முருகேசன் கொலை சம்பவம்தான் ‘கர்ணன்’ படத்தின் கதையா..?

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் தயாரிப்பில் நடிகர் தனுஷின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கர்ணன்’. இந்தப் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

இந்தப் படம் மேலவளவு கிராமப் பஞ்சாயத்தின் தலைவரான முருகேசன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி வருவதாகச் சொல்லப்படுகிறது.

சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் இதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.

இந்தப் படத்தில் இடம் பெறும் ‘கண்டா வரச் சொல்லுங்க’ என்ற பாடலின் விஷூவல் காட்சிகளை ஸ்லைடுகளாக அமைத்து, அந்தப் பாடல் காட்சியை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்கள் படக் குழுவினர்.

இந்தப் பாடல் காட்சியில்தான் ஒரு பிரேமில் மேலவளவு பஞ்சாயத்து தலைவராக இருந்த முருகேசனின் முகம் வரையப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் இருக்கும் மேலூர் வட்டம், மேலவளவு ஊராட்சியின் தலைவராக இருந்து உயர் சாதி இந்துக்களால் படுகொலை செய்யப்பட்டவர் முருகேசன்.

இவர் தலித் மக்களுக்காக போராடியவர். 1996-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அந்த மேலவளவு ஊராட்சி தலித் தொகுதியாக அறிவிக்கப்பட்டதால், அதில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்.

இதையொட்டி அந்தக் கிராமத்தில் வேறு சாதியினருக்கும், தலித் சமூகத்தினருக்கும் இடையில் பல்வேறு மோதல்கள் ஏற்பட்டன. தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. பின்பு மீண்டும் உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் தேர்தல் நடத்தப்பட்டு 1996-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதியன்று முருகேசன் அந்த ஊராட்சியின் தலைவராகத் தேர்வானார்.

அதன் பின்பு ஒரு நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பிய முருகேசனையும், அவருடன் வந்த 7 பேரையும் ஒரு கும்பல் படுகொலை செய்தது. இந்தக் கொலையின்போது முருகேசனின் தலையை மட்டும் துண்டித்து எடுத்துச் சென்று அரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கிணற்றில் வீசியிருந்தார்கள்.

பின்பு இந்தக் கொடூரச் செயலைச் செய்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும் பல்வேறு அரசியல் அழுத்தங்களுக்குப் பிறகும் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்பு பத்தாண்டுகள் கழித்து அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தை மையமாக வைத்துதான் கர்ணன்’ திரைப்படம் உருவாகி வருவதாகச் சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே, “இந்தப் படம் ஜாதி கலவரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது. இதைத் தடை செய்ய வேண்டும்” என்று நடிகர் கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை சார்பில் தமிழக அரசிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score