புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் திருமதி தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் ‘எவன்’.
அறிமுக இயக்குநரான துரைமுருகன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் திலீபன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தீப்தி மானே நடித்திருக்கிறார். இவர்களுடன் ஜே.கே.சஞ்சீத், உஜ்ஜைனி ராய், கானாபாலா பாண்டி ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜி.சிவராமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஏ.கே.சசிதரன் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை பாலா கவனிக்க இப்படத்தில் இடம் பெறும் பாடல்களை மறைந்த புலவர் புலமைப்பித்தன், விவேகா, கானாபாலா, ஏகா ராஜசேகர் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.
வரும் ஏப்ரல் 7-ம் தேதியன்று வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பவர் ஸ்டார் சீனிவாசன், நடிகை ஷனம் ஷெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினார்களாக கலந்து கொண்டனர்.
இவர்களுடன் கவிஞர் மதுரா, வழக்கறிஞர் மோகன், புலமைப்பித்தனின் உதவியாளரான குணசேகரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
மறைந்த கவிஞர் புலவர் புலமைப்பித்தனின் மனைவியும், ‘எவன்’ படத்தின் தயாரிப்பாளருமான திருமதி தமிழரசி புலமைப்பித்தனும் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் பேசுகையில், ”இந்த ‘எவன்’ என்ற டைட்டிலே சூப்பராக இருக்கிறது. கண்டிப்பாக இந்த படம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும்.
நான் ஒரு முறை ஒரு படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் தம்பி திலீபன் அருகேயிருந்த 20-வது மாடியிலிருந்து டுப் போடாமல் குதிக்கும் சண்டைக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார். எனக்கு ஆச்சரியமாகிவிட்டது.
நான் ஒரு படப்பிடிப்பில் சிறிது தூரத்திற்கு நடக்கும்போது வழுக்கி விழுந்து முதுகு தண்டில் அடிபட்டு சிகிச்சை பெற்றேன். நான் பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்காமல் நடித்ததால் விபத்தில் சிக்கினேன். தற்போது சிகிச்சைக்குப் பிறகு முழுமையாக குணமடைந்து, தற்போது ‘பிக்கப்’ எனும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறேன்.
படப்பிடிப்பில் சண்டை காட்சிகளில் நடிக்கும்போது பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்க வேண்டும். இல்லையெனில் விபத்து ஏற்படும். ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியாகும். அதனால் தம்பி திலீபனும் சண்டைக் காட்சிகளில் நடிக்கும்போது பாதுகாப்பு அம்சங்களுடன் நடிக்க வேண்டும். அதுதான் நமக்கும் நல்லது.
2008-ம் ஆண்டில் நான் திரையுலகிற்கு அறிமுகமானேன். இதுவரை 100 படங்களில் நடித்திருக்கிறேன். என்னுடைய நூறாவது படம்தான் ‘பிக்கப்’.
என்னுடைய ‘லத்திகா’ படத்தில் மறைந்த புலமைப்பித்தன் ஐயா எழுதிய ‘நீங்க நல்லா இருக்கணும்..’ என்ற பாடலை கண்டிப்பாக வைக்க வேண்டும் என்று திட்டமிட்டு, அவரிடம் அனுமதி பெற்று வைத்தோம். இந்தப் பாடலுக்காகவே அந்த படம் 350 நாட்கள் ஓடியது.
அவருடைய பேரன் திலீபன் நடித்திருக்கும் இந்த ‘எவன்’ படமும் கண்டிப்பாக ஓடும். இந்த படம் வெற்றி பெறுவதற்கு அவருக்கு உறுதுணையாக இருப்பேன். அவர் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து திரையுலகத்தில் நல்ல இடத்தை பிடிக்க வேண்டும். என்னுடைய படத்திலும் அவர் நடிக்க வேண்டும். அவருடைய படத்திலும் நான் நடிப்பேன்.
ஊடகங்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். என்னை பற்றி தவறான செய்திகளை வெளியிடாதீர்கள். ஏன் இப்படி அவதூறான செய்திகளை வெளியிடுகிறீர்கள் என எனக்கு தெரியவில்லை. இதனால் உங்களுக்கு என்ன லாபம் என்றும் எனக்கு தெரியவில்லை. ஆனால் அது என்னை மிகவும் பாதிக்கிறது.
ஊடகங்களை எப்போதும் நான் என்னுடைய வளர்ச்சிக்கான கண்களாகத்தான் காண்கிறேன். எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனை பயன்படுத்தி கொள்கிறேன். ‘பிக்கப்’ என்ற படத்திற்கு ஒரே ஒரு போஸ்டரை மட்டும்தான் வெளியிட்டேன். இதுவரை அந்த போஸ்டரை மட்டும் மூன்று கோடி பேர் பார்த்திருக்கிறார்கள்.
நான் அனைவரையும் ‘தம்பி’, ‘தம்பி’ என்றுதான் அழைப்பேன். ஆனால் ஹீரோ திலீபனை எனக்கு முன்னால் அவரது தாத்தா புலமைப்பித்தன் ஐயா, ‘தம்பி’ என்று அழைத்திருக்கிறார். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்த ‘எவன்’ திரைப்படம் ஏப்ரல் 7-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் கண்டு ரசித்து திலீபனுக்கு திரையுலகில் நிலையான இடத்தை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்..” என்றார்.