‘டாக்டர்’ படத்தில் வசனம் குறைவாகப் பேசி நடித்திருக்கும் சிவகார்த்திகேயன்

‘டாக்டர்’ படத்தில் வசனம் குறைவாகப் பேசி நடித்திருக்கும் சிவகார்த்திகேயன்

தமிழக சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘டாக்டர்’ திரைப்படம், ரசிகர்களிடையேயும்,  வர்த்தக வட்டாரங்களிடையேயும்   இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும்  படங்களில் ஒன்றாக உள்ளது.

இப்படத்தை Sivakarthikeyan Productions உடன் இணைந்து,  KJR Studios சார்பில் கோட்டபாடி  J.ராஜேஷ் தயாரித்துள்ளார்.

உலகமெங்கும் அக்டோபர் 9-ம் தேதி, இப்படம் வெளியாகவுள்ள நிலையில், பட வெளியீட்டை ஒட்டி,  படக் குழுவினரின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று மாலை நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் நடிகை அர்ச்சனா பேசும்போது, “இந்த மகிழ்ச்சியை தெரிவிக்க வார்த்தைகளே இல்லை. எனக்கும், என் மகளுக்கும் ஒரு சேஃபான உணர்வை தந்தார்கள். இந்தப் படத்தில் ஒரு குடும்பமாகத்தான் வேலை பார்த்தோம் மிக அழகான படமாக, அனைவருக்கும் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும். கண்டிப்பாக அனைவரும் தியேட்டரில் போய் படம் பாருங்கள்…” என்றார்.

நடிகர் வினய் பேசும்போது, “நெல்சன், சிவா உங்கள் இருவருக்கும் நன்றி. இந்த 15 வருடத்தில் 15 படங்கள் பன்ணியிருக்கிறேன். அனைவருடனும் இன்றும் நல்ல உறவு இருக்கிறது. இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்ததே ஒரு கனவு நிறைவேறியது போலவே இருந்தது. இந்தப் படம் முழுதுமே ஒரு இனிமையான பயணமாக இருந்தது. அனைவருக்கும் இப்படம் பிடிக்கும்.  உங்களுடன் மீண்டும் இணைந்து பணி புரிய காத்திருக்கிறேன்…” என்றார்.

நாயகி பிரியங்கா அருள் மோகன் பேசும்போது, “இந்தப் படம் எனக்கு கிடைத்ததை ஆசிர்வாதமாகத்தான் பார்க்கிறேன். என்னுடைய அறிமுக படமே பெரிய படமாக கிடைத்தது மகிழ்ச்சி. SK நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என வளர்ந்துகொண்டே போகிறார் அவருக்கு நன்றி. என்னை அறிமுகப்படுத்திய இயக்குநருக்கு நன்றி. அனிருத் இசை அட்டாகாசமாக இருகிறது. அருண் எனக்கு அண்ணாவாக நடித்தார். உண்மையிலும் அண்ணாவாக இருந்தார். இப்படம் மிகப் பெரிய புகழை பெற்று தந்திருக்கிறது. மிகப் பெரிய சந்தோஷத்தை தந்துள்ளது. படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெறும்…” என்றார்.

இயக்குநர் நெல்சன் பேசும்போது, “முதலில் சிவகார்த்திகேயன் வழக்கமான அவரது படங்கள் போல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று அவரிடம் பேசித்தான் இப்படத்தைத் தயாரிக்க முடிவு செய்தோம். அவரிடம் இரண்டு ஐடியாக்களை சொன்னேன். “இரண்டுமே.. நல்லாருக்கு நீங்களே முடிவு பண்ணுங்கள்” என்றார் சிவா.

என் கடமை அதிகமாகிவிட்டது. படம் துவங்கிய இரண்டு வாரங்களிலேயே இது நன்றாக வந்துவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. படம் நினைத்தது போலவே ஒரு நல்ல படமாக வந்துள்ளது.

சிவகார்த்திகேயனே படத் தயாரிப்பாளர் என்பதால், அது எனக்கு உதவியாக இருந்தது. என்னை கேள்வி கேட்காமல் முழு சுதந்திரம் இருந்தது. விஜய் கார்த்திக் ஒவ்வொரு ஷாட்டுக்கும் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார். ஆனால் நினைத்ததை கொண்டு வந்து விடுவார்.

முழுப் படத்தையும் எடிட் பண்ணிய பிறகு, எனக்கே தெரியாமல் எடிட் செய்துவிட்டார் நிர்மல். அந்தளவு படத்துடன் ஒன்றியிருப்பார். ப்ரியங்கா அவரது முழுத் திறமை இந்தப் படத்தில் வெளிப்படவில்லை. அவருடன் மீண்டும் படங்கள் செய்வேன்.

வினய் பார்த்து பழகும்போது அப்பாவியாக இருந்தார். ஆனால், படத்தில் வில்லனாக அசத்தியுள்ளார். அருணை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். அவரை எல்லாப் படத்திலும் வைத்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். அவர் இல்லாதது மிகப் பெரும் வருத்தம். அனிருத்தை வைத்துதான் திரைக்கதையே எழுதுவேன். அவர் இப்படத்திற்கு மிகப் பெரிய பலம். படமும் நினைத்தது போல அழகாக வந்திருக்கிறது…” என்றார்.  

நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது, “இரண்டு வருடங்கள் கழித்து அனைவரையும் சந்தித்தது மகிழ்ச்சி. எனக்கு பாட்டு எழுதும் நம்பிக்கை எல்லாம் இருந்தது இல்லை. நெல்சன்தான்  அவரது முதல் படத்தில் ஆரம்பித்து வைத்தார். இப்படத்தில் செல்லம்மா’ பாடல் எளிதாக இருந்தது. ஆனால் ‘ஓ பேபி’ பாடல் கொஞ்சம் கஷ்டமாக, பயமாக இருந்தது. அதிலும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. மக்களுக்கு பிடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்தப் படத்தில் எனக்கு டயாலாக்கே இல்லை. மொத்தமாகவே ஒரு பத்து டயலாக்தான். எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும்போது நான் மட்டும் பேசாமல் இருந்தது கஷ்டமாக இருந்தது. ஆனால், நெல்சன் எப்படி என்னை வைத்து இப்படி ஒரு கதையை யோசித்தார் என்று வியப்பாக உள்ளது.

வினய்யை உன்னாலே உன்னாலே’ படம் பார்த்ததில் இருந்து பிடிக்கும். நான் உயரமாக இருக்கிறேன் என்று நினைத்து கொண்டிருந்தேன். ஆனால், வினய் முன்னால் நடிக்கும்போது நானே ஆப்பிள் பாக்ஸ் போட்டுதான் நின்றேன். மனுஷன் மிகப் பெரிய உயரமாக இருந்தார். அவரது குரலும், பாடியும் படத்திற்கு மிகப் பெரிய பலம்.

ப்ரியங்காவிற்கு தமிழ் தெரிந்தது மிகப் பெரிய உதவியாக இருந்தது. தமிழ் தெரிந்த நடிகையுடன் நடிக்கும் போது, படப்பிடிப்பிலேயே காட்சி எப்படி வரும் என்ற தெளிவு இருக்கும்.

ரெடின், யோகிபாபு இருவரும் இப்படத்தில் கலக்கியுள்ளனர். அருண் ப்ரோ இப்படத்தில் செய்தது காலாகாலத்திற்கும் பேசப்படும். அவரை ரொம்பவும் மிஸ் பண்ணுகிறேன்.

விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு படத்தில் அட்டகாசமாக இருக்கும், தியேட்டரில் பார்த்தால் உங்களுக்கு புரியும். அனிருத்துதான் இந்தப் படத்தை அறிவித்ததிலிருந்தே, இதற்கு அடையாளமாக இருந்தார்.

இந்தப் படத்தில் நடித்த அனைவருக்குமே இதுவொரு முக்கியமான படமாக இருக்கும். இந்தப் படம் எல்லாருக்கும் பிடித்த படமாக இருக்கும்…” என்றார்.

Our Score