“க்யூப் கட்டணத்தை செலுத்த மாட்டோம்” – விநியோகஸ்தர்கள் சங்கமும் போர்க்கொடி..!

“க்யூப் கட்டணத்தை செலுத்த மாட்டோம்” – விநியோகஸ்தர்கள் சங்கமும் போர்க்கொடி..!

அக்டோபர் 1-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் திரையரங்குகளைத் திறக்க அனுமதிக்கும்படி பல்வேறு திரைப்பட அமைப்புகள் கோரிக்கை வைத்து வரும் சூழலில் தமிழகத்தில் தியேட்டர்களை திறந்தாலும் படங்களை ரிலீஸ் செய்வது முடியாது என்பதுபோன்ற நிலை எழுந்துள்ளது.

2 நாட்களுக்கு முன்பாக தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் தியேட்டர் உரிமையாளர்களுக்கு சில நிபந்தனைகளை விதித்து.. அவற்றை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தாங்கள் படங்களை வெளியிடுவோம் என்று எச்சரித்தனர்.

இப்போது தமிழக விநியோகஸ்தர்கள் அமைப்பும் இந்த எச்சரிக்கை பட்டியலில் இணைந்துள்ளது.

நேற்று கூடிய சென்னை செங்கல்ப்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்தத் தீர்மானங்களை தியேட்டர் உரிமையாளர்கள் ஏற்றுக் கொண்டால்தான் பட வெளியீடு உடனடியாக நடைபெறும் என்று விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அந்தச் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை இது :

1. QUBE, UFO, SCRBBLE நிறுவனங்கள் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆகியோரிடமிருந்து வசூல் செய்யும் தொகை குறித்து திரையரங்க உரிமையாளருக்கு வைக்கும் கோரிக்கை :

2. திரையரங்க உரிமையாளர் அவர்கள் சொந்த செலவிலேயே Digital Projectorகளை அமைத்து கொள்ளுதல் அவர்களது கடமை மற்றும் உரிமை. அதை எந்த நிறுவனத்திடம் பெறுகிறார்களோ, அதற்கு உண்டான தொகையை மொத்தமாகவோ, தவணை முறையிலோ அவர்கள்தான் செலுத்த வேண்டும்.

3. VPF Charges என்ற பெயரியில் தயாரிப்பாளர்களிடம் / விநியோகஸ்தர்களிடம் எந்த தொகையும் பெறக் கூடாது. மற்றும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் இங்கிருந்து செலுத்தப்பட்டுள்ளது.

4. மேலும் உலகம் முழுவதும் VPF கட்டணம் ரத்தாகி இரண்டு ஆண்டுகளாகிறது. ஆனால் நமது இந்தியாவில் மட்டும் இந்த கொடுமை நீடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

இதை ரத்து செய்வதன் மூலம் சிறிய படத் தயாரிப்பாளர்கள் / விநியோகஸ்தர்களுக்கு சுமார் 100 பிரதிகளுக்கு ரூபாய் 25 லட்சங்கள், பெரிய படங்களின் தயாரிப்பாளர்கள் / விநியோகஸ்தர்களுக்கு சுமார் 500 பிரதிகளுக்கு ரூபாய் 1 கோடியே 25 லட்சங்கள், 1000 பிரதிகளுக்கு ரூபாய் 2 கோடியே 50 லட்சங்கள்வரை மீதமாகும்.

எனவே வருங்காலத்தில் தயாரிப்பாளர்கள் / விநியோகஸ்தர்கள் திரையரங்க உரிமையாளர்கள் யாரும் VPF தொகையை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தக் கூடாது என்ற கோரிக்கையினை வைக்கின்றோம்.

தேவைப்பட்டால், படத்தின் பிரதியை Hard Diskல் கொடுத்து விடுகின்றோம். அதற்கான செலவு குறைந்தது ரூபாய் 500/- முதல் 1000/- வரைதான் ஆகும். அதனை நாங்கள் தயாரிப்பாளர்கள் / விநியோகஸ்தர்கள் கலந்து பேசி ஏற்றுக் கொள்கின்றோம்.

குறிப்பு : மேற்படி கோரிக்கையினை தயாரிப்பாளர்கள் / விநியோகஸ்தர்கள் நலன் கருதி திரையரங்க உரிமையாளர்களுக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் சரியானது என்று கருதும் இந்திய அளவில் உள்ள அனைத்து தயாரிப்பாளர்களும் / விநியோகஸ்தர்களும் தங்களின் கருத்தினை சென்னை செங்கல்ப்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு தெரியப்படுத்தும்படி கேட்டுக் கொள்கின்றோம். (Mail ID – cktdfdass@gmail.com)”

– இவ்வாறு அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Our Score