வரும் தீபாவளியன்று தில்லாக ‘கத்தி’யோடு போட்டியிட காத்திருக்கும் ‘பூஜை’ படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சி சென்ற வாரம் நடந்தது.. அதன் பின்னர் படத்தின் இயக்குநர் ஹரி மட்டும் தனியே அவருக்காக ஒரு பிரஸ்மீட்டை இன்று காலை தி.நகர் ரெஸிடென்ஸி ஹோட்டலில் நடத்தினார்.
இயக்குநராக ஹரி எப்படியோ..? ஆனால் பத்திரிகையாளர்களுடன் பழகுவதில் மேன்மையாளர். மென்மையான குணம். போன் செய்தால் அவரே எடுத்து பேசுவார். தன்மையாக பழகுபவர்.. மீடியாக்கள் இதுவரையிலும் இவரைப் பற்றி எந்தவொரு கன்ட்ரவர்ஸியையும் எழுதாததற்கு அதுவே காரணம்..! கூடுதலாக எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாத, அவரது தனிப்பட்ட குணங்களும் ஒரு காரணம்தான்..!
முன் வரிசையில் அமர்ந்திருந்த பத்திரிகையுலக பெரியவர் பிலிம் நியூஸ் ஆனந்தனின் காலைத் தொட்டு வணங்கிவிட்டு அவரிடம் ஆசி பெற்றுவிட்டுத்தான் மேடையேறினார் ஹரி. உட்கார சேர் இருந்தும், அதில் அமராமல் நின்றபடியே அரை மணி நேரம் பேசிவிட்டு.. கேள்வி பதில்களையும் அசராமல் சந்தித்தார்.
“இதுவொரு நன்றியறிவிப்பு கூட்டம்தான். வர்ற தீபாவளிக்கு என்னோட ‘பூஜை’ படம் ரிலீஸாகப் போகுது. அது என்னோட 13-வது படம். என் முதல் படம் தமிழ் 2002-ல் வந்தது. அதைத் தொடர்ந்து ‘சாமி’, ‘கோவில்’, ‘அருள்’, ‘ஐயா’, ‘ஆறு’, ‘தாமிரபரணி’, ‘வேல்’, ‘சேவல்’, ‘சிங்கம்-1’, ‘வேங்கை’, ‘சிங்கம்-2’ என தொடர்ந்து 12 படங்கள் எடுத்துள்ளேன்.
அனைத்து படங்களையுமே நீங்க ரசிச்சிருச்சிருக்கீங்க.. விமர்சனம் செஞ்சிருக்கீங்க.. நல்லாயிருந்தா நல்லாயிருக்கு. இல்லைன்னா இல்லைன்னு சொல்லியிருக்கீங்க.. ஆனா ஒரு தடவைகூட என்னைப் பற்றி தரக்குறைவாகவோ, அநாகரிகமாகவோ நீங்கள் எழுதியதில்லை. இது எனக்கு நீங்க கொடுத்த பெருமையா நினைக்குறேன். இதுக்காகவே உங்களை நான் தனியா சந்திக்கணும்னு நினைச்சேன். அதுக்குத்தான் இந்தக் கூட்டம்..!
இந்த ‘பூஜை’ படத்தின் கதையைக்கூட முதல்ல விஷாலிடம் சொல்லவே தயங்கினேன். அவரே தயாரித்து, அவரே நடிப்பது சரிப்படுமா என்று யோசித்தேன். ஆனால், ஒரு தயாரிப்பாளராக ‘பாண்டிய நாடு’ படத்துல அவர் எடுத்த முயற்சிகள் பற்றி பத்திரிகைகள் மூலமாக தெரிஞ்சுக்குட்டேன். சரி.. விஷால் நமக்கு தோதான ஆள்தான்னு அதுக்கப்புறமா தெரிஞ்சுக்கிட்டுத்தான் அவர்கிட்ட போனேன்.
‘பூஜை’ படத்துக்கு 100 நாட்கள் ஒதுக்கி 90 நாளில் முடித்தோம். ஒரு சேசிங் காட்சியை முழுக்க முழுக்க டாப் ஆங்கிள்ல எடுத்திருக்கோம்.. ரசிகர்களுக்கு இது ரொம்ப வித்தியாசமா இருக்கும்.
இந்த படத்தை எல்லோரும் குடும்பத்துடன் பார்க்கும்படியாகத்தான் எடுத்திருக்கிறோம். சென்சாரும் முடிஞ்சிருச்சு. யு/ஏ கொடுத்திருக்காங்க.. ஒரு சண்டைக் காட்சியை நீக்கியிருந்தா ‘யு’ கிடைத்திருக்கும். ஆனா படம் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு. இப்படியே படத்தை ரிலீஸ் செய்வோம்னு விஷால் சொல்லிட்டார். அதுனால மேற்கொண்டு எதுவும் செய்யலை…” என்றார் ஹரி.
அடுத்து கேள்வி-பதில் சீஸன் துவங்கியது.
கமர்ஷியல் படமாவே எடுக்குறீங்களே…?
“இப்போ இது மாதிரி படங்களைத்தான் ரசிகர்களும் விரும்புறாங்க. இந்த மாதிரி படங்களால்தான் தயாரிப்பாளர்களுக்கும் போட்ட காசு திரும்பக் கிடைக்குது.. இதைத்தான் நானும் விரும்புறேன். என்னை வைச்சு படமெடுக்குற தயாரிப்பாளர் நஷ்டப்படக்கூடாது என்கிற ஒரேயொரு விஷயம்தான் எனக்கு ரொம்ப முக்கியம்.
மசாலா படங்களையே எடுக்கிறதால எனக்குள்ள எந்த குற்றவுணர்வும் இல்லை. ஷங்கர் ஸார், கே.எஸ்.ரவிக்குமார் ஸார்.. இவங்களும் கமர்ஷியல் படங்கள்தான் எடுக்கிறாங்க. என்ன பட்ஜெட் கொஞ்சம்கூட இருக்கும். கொஞ்சம் டேலண்ட்டாவும் இருக்கும். அவ்ளோதான்.. அவார்டு கிடைக்குற மாதிரி படங்கள் எடுக்க வேறு இயக்குனர்கள் இருக்காங்க.. அதுக்கு நான் எதுக்கு..? எனக்கு இதுவே போதும்.. நான் கமர்ஷியல் படங்கள்தான் எடுப்பேன்..” என்றார்.
படத்துல நடிக்குற ஆர்ட்டிஸ்டுகள்கூட பிரச்சனையாமே..?
“பிரச்சினைதான்.. அதில்லாம ஒரு படத்தையும் நான் முடிச்சதில்லை.. எனக்கு காலைல ஆறரை மணிக்கு ஷாட்டுன்னா, அந்த நேரத்துக்கு ஆர்ட்டிஸ்ட் வந்தாகணும். இல்லைன்னா நிச்சயம் கோபப்படுவேன்.. இது ரொம்ப நாள் பழக்கம்.. இது ஒண்ணுதான் எல்லா ஷூட்டிங்லேயும் தொடர்ந்து நடக்கும்..
அப்புறம் சில பேர்.. சில வசனங்களை பேசணுமான்னு யோசிப்பாங்க.. அப்போ என்னோட அஸிஸ்டெண்ட் டைரக்டர்ஸை கூப்பிட்டு அவங்க இதுக்கு முன்னாடி பேசியிருக்குற டயலாக்குகளையெல்லாம் சொல்லச் சொல்லுவேன். அவங்க கடகடன்னு சொல்லும்போது.. ‘ஓ.. இவ்ளோ டயலாக்கை முன்னாடியே பேசிட்டோமா..? சரி இதையும் பேசித் தொலைய வேண்டியதுதான்’னு பேசிருவாங்க..இப்படி ஏதாச்சும் வரத்தான் செய்யும். இதையெல்லாம் தாண்டித்தான் ஓடிக்கிட்டிருக்கேன்..”
தயாரிப்பாளரா விஷால் எப்படி..?
“இப்போது படம் இயக்க வரும் ஒவ்வொரு புதிய தயாரிப்பாளர்களும் விஷாலை கண்டிப்பா பின்பற்றணும். தினமும் படப்பிடிப்பு முடிஞ்சதும், கேரவன் வேன்ல உக்காந்து அன்றைய செலவை அன்றைக்கே செக்கப் செஞ்சிருவார்.. ஒரு தயாரிப்பாளரா அவரோட இந்த அணுகுமுறை ரொம்பச் சரியானது. இப்படி செஞ்சிட்டா ஹீரோவா அவர் கேமிரா முன்னாடி நிக்கும்போது அவருக்கும் டென்ஷன் இருக்காது.. எனக்கும் இருக்காது..”
ஹீரோயின்ஸ்கூடவெல்லாம் பெரிய பிரச்சினையாமே..?
“அப்படீல்லாம் எதுவும் இல்லீங்க.. கரெக்ட் டயத்துக்கு வரைலன்னா மட்டும்தான் பிரச்சினை.. மற்றபடி இந்தப் படத்துல சுருதிஹாசன்கூட ஒரு பிரச்சினையும் இல்லை. பொண்ணு வந்துச்சு.. சொன்ன மாதிரி நடிச்சுக் கொடுத்துட்டு போயிருச்சு..
அவரை கவர்ச்சியாவும் காட்டலை. என் படத்தில் எப்போதும் கதாநாயகிகளை கவர்ச்சியா காட்ட மாட்டேன். குடும்ப பாங்காகவே நடிக்க வைக்கிறேன். பாடல் காட்சிகளில் மட்டும் கவர்ச்சியாக தோன்றுவார்கள். இது எல்லா படத்துலேயும் சகஜம்தான்..
கேரவன் வேன் இல்லாமல் ஷூட்டிங்கே கிடையாது..!
இப்போவெல்லாம் ஹீரோயின்களுக்கு கேரவன் வேன் கண்டிப்பா அவசியம். நான் கண்டிப்பா அது தேவைன்னு சொல்வேன்.. ஏன்னா ஆம்பளைங்களுக்கு பிரச்சினையில்லை.. எங்கயாச்சும் ஒதுங்கிரலாம்.. ஆனா லேடீஸுக்கு.. பெரிய ஓப்பன் பிளேஸ்ன்னு ரொம்பக் கஷ்டம். அவங்க கஷ்டப்படாமல் இருந்தால்தான் நாமளும் டென்ஷன் இல்லாம ஷூட்டிங்கை நடத்த முடியும்..! அதுனால கேரவன் வேன் இல்லாம நான் ஷூட்டிங்கே நடத்த மாட்டேன்..”
சினிமாவுக்குள்ள எப்படி வந்தீங்க..?
“சின்ன வயசுல இருந்தே போலீஸ் இன்ஸ்பெக்டராகணும்ன்றதுதான் என்னோட லட்சியம். ஆனா வீட்ல என் அப்பாவுக்கு அந்த வேலை பிடிக்கல. அதனால் நேரடியா ஐ.பி.எஸ். எழுதி போலீஸ் அதிகாரியா ஆகிலடாம்னு அதுக்கான எக்ஸாம் எழுத வந்தேன். குரோம்பேட்டைலதான் எக்ஸாம் சென்டர். உள்ள போய் உக்காந்து கொஸ்டீன் பேப்பரை பார்த்த பின்னாடிதான் தெரிஞ்சுது, இது ஒண்ணும் சாதாரண விஷயமில்லே.. ஸ்பெஷலா டேலண்ட்ன்னு ஒண்ணு வேணும்னு.. அப்படியே ஓடி வந்துட்டேன்..
அதுக்கப்புறம் கொஞ்ச நாள் ரியல் எஸ்டேட் பிசினஸ் செஞ்சேன். இருந்தாலும் ஏதாவது பெரிசா செய்யணும்னு மனசுல ஆசை இருந்துக்கிட்டேயிருந்துச்சு. நாள் முழுக்க கடுமையா உழைச்சு தொழில் கத்துக்கிற மாதிரி ஒரு துறை வேணும்னு நினைச்சேன்.
வடபழனி சாலிகிராமம் ஏரியால நம்ம வீடு இருந்ததால, வீட்டை சுற்றி நிறைய ஸ்டுடியோக்கள். திடீர்ன்னு ஒரு யோசனை.. சரி இதுல நுழைஞ்சு பார்ப்போமேன்னு நுழைஞ்சுட்டேன். முதல்ல செந்தில்நாதன் சார்ட்ட அசிஸ்டென்ட்டா சேர்ந்தேன். அப்புறம் நட்ராஜ் ஸார், நாசர் ஸார்.. அலெக்ஸ் பாண்டியன், கே.பி.ஸார்.. கடைசியா சரண் சார்ட்ட வொர்க் பண்ணினேன். அப்படியே ஆரம்பிச்சு முதல் படம் தயாரிப்பாளர் அமுதா துரைராஜ் சார் மூலமா ‘தமிழ்’ பட வாய்ப்பு கிடைச்சுது. அப்படியே தொடர்ந்ததுதான் நம்ம கதை..!
படத்தை வேகமா எடுக்குறீங்க.. கதை தயார் செய்ய..?
நான் படத்தைத்தான் சீக்கிரமா முடிப்பேன். ஆனா கதைக்கு ரொம்ப நாள் எடுத்துக்குவேன்.. கிட்டத்தட்ட ஒரு வருஷம்கூட ஆகும்.. ஷூட்டிங்கிற்கு முதல் நாள்வரைக்கும் என் அஸிஸ்டெண்ட்டுகள்கூட டிஸ்கஷன் செய்வேன்.. ஏதாவது நீக்கணுமா.. சேர்க்கணுமான்றதை அன்னிக்குகூட முடிவெடுத்திருக்கேன்.. இப்போ வர்ற இயக்குநர்களுக்கும் நான் சொல்றது இதுதான்.. கதையை உருவாக்க நிறைய நேரம் எடுத்துக்குங்க.. அப்பத்தான் நல்ல கதையா, திரைக்கதையா உருவாக்க முடியும்.. இதுல குரூப் டிஸ்கஷன் அவசியம் வேணும்..
நீங்க அறிமுகப்படுத்திய நயன்தாராவை எப்படி கண்டுபிடிச்சீங்க..?
‘ஐயா’ படத்தோட கதைப்படி ஹீரோயின் பிளாஸ்டூ ஸ்டூடண்ட் மாதிரியிருக்கணும். நிறைய பேரை பார்த்தோம். ஒண்ணும் அமையலை.. அந்த நேரத்துல நயன்தாராவை பத்தி சொல்லி அவங்க நடிச்ச ஒரு படத்தைக் காட்டினாங்க. மம்முட்டிகூட நடிச்சிருந்தாங்க. பார்த்தோம். பிடிச்சிருந்தது.. சரி.. நேரா போய் பார்க்கலாம்னு கேரளாவுக்கே போயிட்டோம்.
அவங்க ஒரு ஷூட்டிங்ல இருந்தாங்க. அங்க போய் அவங்க்கிட்ட கதை சொன்னோம். லாங்குவேஜ் பிராப்ளமே இல்லை. சொன்னதை புரிஞ்சுக்கிட்டாங்க. அவங்களும் தமிழ் தெளிவா பேசுனாங்க. அங்கேயே ஹீரோயினா பிக்ஸ் பண்ணிட்டு வந்தோம்.
மற்ற மொழி படங்களை இயக்க உங்களை கூப்பிடலையா..?
நிறைய பேர் கூப்பிட்டாங்க. எனக்குத்தான் ஆசை இல்லை. தமிழே போதும்னு நினைச்சு விட்டுட்டேன்.. நான் மத்த மொழி படங்களையே பார்க்க மாட்டேன். கொரியன், இங்கிலீஷ்ன்னு நிறைய சொல்வாங்க. நான் பார்த்ததே இல்லை.. ஹிந்திப் படம் செய்ய கூப்பிட்டாங்க. நான் ஒரு ஹிந்தி படம்கூட பார்த்ததில்லைன்னு சொல்லிட்டேன்..
மத்த ஹீரோக்களை இயக்கும் ஆர்வம்..?
விஜய் ஸார், அஜீத் ஸார்கூடவெல்லாம் வொர்க் செய்ய ஆசையாத்தான் இருக்கு. கதை கேட்டாங்கன்னா என்னால உடனே சொல்ல முடியும்.. அப்படியொரு வாய்ப்பு வரும்னு நம்புறேன்..
அடுத்தது என்ன..?
இப்போ சூர்யா ஸார்கிட்ட இரண்டு கதைகள் சொல்லியிருக்கேன். அவர் எதை செலக்ட் செய்றாருன்னு தெரியலை.. ஒருவேளை இதுவே இல்லாமல் சிங்கம்-3 வருமான்னும் எனக்குத் தெரியலை. அதை இப்போ சொல்ல முடியாது..