‘உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்து சமவெளி’ போன்ற சர்ச்சைப் படங்களுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் சாமி இப்போது ‘நல்ல பிள்ளை’யாக மாறி இயக்கியிருக்கும் படம் ‘கங்காரு’.
பரபரப்புக்காக முறையற்ற உறவுகளைச் சித்தரிக்கிறார் என்கிற விமர்சனம் இயக்குநர் சாமியைத் துரத்தி வருகிறது. சாமி படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று முத்திரை குத்தப்பட்டு அவரை விடாமல் தொடர்ந்து வருகிறது. “நான் அப்படிப்பட்ட இயக்குநரல்ல. ஆளை விடுங்கப்பா சாமி..” என்று இப்போது வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார் சாமி.
இதுவரை பாலுணர்வை உயர்த்திப் பிடித்ததாக சர்ச்சைக்குள்ளான சாமி இப்போது பாசவுணர்வை தூக்கிப் பிடித்திருக்கிறார். அதுதான் ‘கங்காரு’ படம்.
“எப்படி ஒரு கங்காரு தன் குட்டியை வயிற்றுப் பையில் சுமக்கிறதோ, அப்படி தன் தங்கையை மார்பிலும், தோளிலும் சுமக்கும் ஒரு அண்ணனின் கதைதான் இந்த கங்காரு திரைப்படம்..” என்கிறார் சாமி.
தன் மீது விழுந்த முத்திரை பற்றி அவர் என்ன நினைக்கிறார்?
“நானும் பெரிய, பெரிய இயக்குநர்கள் மாதிரி விதவிதமான கதைகளில் ரகம் ரகமான நிறங்களில் புதுப்புது படம் இயக்க வேண்டும் என்று நினைத்துதான் இங்கு வந்தேன். ஆனால் நினைத்த மாதிரி இங்கே நிலைமை இல்லை. யாரும் என்னைக் கண்டு கொள்ளவில்லை. என் மீது கவனமும், மற்றவர் பார்வையும் படவேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் ஒரு பரபரப்புக்காக இப்படிப்பட்ட படங்களை இயக்கினேன். நான் கவனிக்கப்பட்டேன். ஆனால் பெயர் கெட்டு விட்டது. சாமி ‘அப்படிப்பட்ட ஆசாமியோ’ என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
என் படங்களை விமர்சித்தவர்கள்கூட, சாமி அழுத்தமாகக் கதை சொல்லத் தெரிந்தவன் என்பதை ஒப்புக் கொள்ளவே செய்தார்கள். அழுத்தமாகச் சொல்லத் தெரிந்ததால்தான் இவ்வளவு விமர்சனங்கள் வந்தன என்றும் என் நண்பர்கள் சொல்வதுண்டு. எது எப்படியோ அது என் தவறுதான். பெயர் கெட்டுவிட்டது. அதை மாற்ற வேண்டும். இனி நான் வேறு சாமி.
இந்த சாமிக்குள் நிறைய கனவுகள், படைப்புகள் உள்ளன. அதற்குள்ளாக என்னை இப்படி தவறான முத்திரை குத்தி, குறுகிய வட்டத்துக்குள் போட்டு அழுத்திவிட வேண்டாம். இந்த கெட்ட பெயரை மாற்ற வேண்டும். துடைத்தெறிய வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் இப்போது ‘கங்காரு’ எடுத்திருக்கிறேன். இதன் மூலம் திரையுலகில் தற்போது எனக்குள்ள கெட்ட பெயரை மாற்றுவேன். இந்தப் படம் நிச்சயம் என் பெயரை மாற்றும்…” என்கிறார்.
“கங்காரு படத்தில் மற்ற சிறப்புகள் என்னென்ன..?”
”புதிய இசையமைப்பாளரை தேடியபோது ஒரு நண்பர் மூலம் ஸ்ரீநிவாஸ் அறிமுகமானார். அவரை ஒப்பந்தம் செய்யும் முன்பே மெட்டு போட்டுக் காட்டி என்னைக் கவர்ந்தார். ஒப்பந்தம் செய்து விட்டோம்.
இதில் நாயகனாக நடிக்கும் அர்ஜுனாவை நான் ஏற்கெனவே ‘மிருகம்’ படத்துக்காக பார்த்திருந்தேன். ஆனால் ஆதியை நடிக்க வைத்தேன். இந்தக் கதைக்குப் பொருத்தமாகத் தோன்றியதால் அர்ஜுனாவை இதில் நடிக்க வைத்துள்ளேன். அதேபோல தங்கையாக வரும் ஸ்ரீபிரியங்கா, வர்ஷா அஸ்வதி, தம்பி ராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, ஆர்.சுந்தர்ராஜன் எல்லாரையுமே கதைக்காக தேர்வு செய்து நடிக்க வைத்தேன். நடிகர்களுக்காக நான் என்றும் கதை செய்ய மாட்டேன்… ” என்கிறார்.
அண்ணன் தங்கை பாசமெல்லாம் காலம் கடந்தது என்பார்களே..?
“நம் மண்ணில் இன்னமும் ஈரமும் பாசமும் வற்றிப்போய் விடவில்லை. இன்னமும் பாசமலரான அண்ணன், தங்கைகள் இருக்கவே செய்கிறார்கள். அம்மா-பிள்ளை பாசமும் இருக்கவே செய்கிறது. இதற்கு ஏராளமான நிஜக் கதைகள் இருக்கின்றன. ‘கங்காரு’ நவீன பாசமலர் என்று சொல்வேன். நிச்சயம் இது பேசப்படும். பாராட்டப்படும். எதுவும் மிகையில்லாதபடி சொல்லி இருப்பது நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும்.
என்னுடைய முந்தைய படங்கள் பற்றி என் அம்மாவே என்னைத் திட்டியிருக்கிறார். ‘இனியாவது ஒழுங்காக நல்ல மாதிரியா படம் பண்ணு‘ என்று .அந்த அம்மாவே பாராட்டும்படி இப்படம் இருக்கும்… “என்கிறார்.
இதுவரையிலான இயக்குநர் சாமியின் பிம்பத்தை இப்படம் நிச்சயம் உடைக்கும் என்பது அவரது பேச்சிலிருந்து புரிகிறது.
’கங்காரு’ படம் வரட்டும்.