‘வின்னர்’, ‘கிரி’ படங்களை இப்போதும் பார்த்துச் சிரிப்பவர்கள் அது வடிவேலு படம் என்றே சொல்வார்கள். படத்தின் இயக்குநரான சுந்த.சி.யை மறந்துவிடுவார்கள். அந்த அளவுக்கு அந்தப் படங்களில் இருக்கும் நகைச்சுவை பட்டி தொட்டியெல்லாம் பிரசித்தம்..
இதன் பிறகும் வடிவேலு சுந்தர் சி-யின் படங்களில் நடித்துதான் வந்தார். கடைசியாக இருவரும் சேர்ந்து ‘நகரம் மறுபக்கம்’ படத்தில் நடித்திருந்தார்கள். இதன் பின்பு இருவருக்குள்ளும் மனஸ்தாபம் ஏற்பட இதன் பின்னர் வடிவேலுவைவிட்டுவிட்டு விவேக்கையும், சந்தானத்தையும் பிடித்துக் கொண்டார் சுந்தர் சி.
நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில், “திரும்பவும் வடிவேலு உங்களது படத்தில் நடிப்பாரா..?” என்று கேட்டதற்கு, “இல்ல ஸார்.. அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை..” என்றவர் காரணத்தைச் சொல்ல மறுத்துவிட்டார். ஆனால் அதன் பின்பு சந்தானத்தைப் பற்றி அவர் சொன்ன ஒரு விஷயத்தில் இருந்து இதற்கான காரணமும் புரிந்தது..
“நான் இதுவரைக்கும் பல காமெடி ஆக்டர்ஸோட வொர்க் பண்ணியிருக்கேன். ஆனா சந்தானம் மாதிரி ஒருத்தரை பார்த்ததே இல்லங்க.. இதுவரைக்கும் சந்தானம் என்கூட நடிச்ச எந்தப் படத்துலேயும் எனக்கு இவ்ளோ சம்பளம் வேணும்னு கேட்டதே இல்லை.. கதையை மட்டு்ம் கேட்டுக்கிட்டு ஒத்துக்கிருவாரு.. அப்புறம் நானா பேசி இவ்ளோ சம்பளம்ன்னு கொடுப்பேன். அதையும் எதுவும் பேசாம வாங்கிக்குவாரு.. அதுக்காக குறைச்செல்லாம் குடுக்குறதில்லை. உங்களுக்கு எது நியாயம்ன்னு தோணுதோ அதைக் கொடுங்கன்னு மட்டும் சொல்றாரு சந்தானம்.. இதைவிட ஒரு தயாரிப்பாளருக்கு வேறென்ன வேணும்..?” என்றார்.
இப்போது புரிந்தது வடிவேலுவின் விலகலுக்கான காரணம்..! பணம்தான் நல்ல கலைஞர்களையும் பிரித்து வைக்கிறது.. நல்ல படைப்புகளை சேர்ந்து தருவோம் என்ற எண்ணம் நல்ல கலைஞர்களுக்குள் ஏற்படக் கூடாதா..? பணமா பெரியது..? சுந்தர் சி இப்படிச் சொன்னாலும், காலம் இவர்களை மாற்றி சேர்த்து வைக்கும் என்ற நம்பிக்கையிருக்கிறது..!