‘அந்நியன்’ படத்தின் கதை உரிமம் தொடர்பாக எழுந்த பிரச்சினையில் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன், இயக்குநர் ஷங்கருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பதாக உறுதியான செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2005-ம் ஆண்டில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், சதா, விவேக் நடிப்பில் நடிப்பில் வெளியான ‘அந்நியன்’ படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.
இந்தப் படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்யவிருப்பதாக இயக்குநர் ஷங்கர் அறிவித்தார்.
ஆனால் இந்தப் படத்தின் கதை உரிமை தன்னிடம் இருப்பதால் என்னிடம் அனுமதி பெறாமல் படமாக்க முயல்கிறார் ஷங்கர் என்று ‘அந்நியன்’ படத்தைத் தயாரித்த ஆஸ்கர் ரவிச்சந்திரன் புகார் கூறினார். வழக்கறிஞர் நோட்டீஸும் அனுப்பி வைத்தார்.
ஆனால், இயக்குநர் ஷங்கரோ “அந்நியன்’ படத்தின் கதையும், திரைக்கதையும் என்னுடையது. ‘கதை, திரைக்கதை, இயக்கம் – ஷங்கர்’ என்கிற பெயருடன்தான் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது. இதனால் கதையின் மீது தயாரிப்பாளருக்கு எந்த உரிமையும் இல்லை..” என்று கூறியிருந்தார்.
இதையடுத்து இந்த விவகாரத்தில் இயக்குநர் ஷங்கர் மீது ஆஸ்கார் ரவிச்சந்திரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகத் தெரிகிறது.
ஏற்கனவே ‘இந்தியன் 2’படத்தை முடிக்காமல் வேறு படத்தை இயக்கக் கூடாது என லைகா நிறுவனம் இயக்குநர் ஷங்கர் மீது வழக்கு தொடர்ந்து அந்த வழக்கும் தற்போது நிலுவையில் உள்ளது.
இப்போது புதிதாக இப்படியொரு வழக்கு..?!