பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர் சேரன், திருட்டு டிவிடிக்களால் தமிழ்த் திரைப்படங்கள் நிறைய நஷ்டத்தை சந்திப்பதைத் தடுக்கும்விதத்தில் புதிதாக C2H என்ற ‘சினிமா டூ ஹோம்’ என்ற பெயரில் புதிய மாற்றுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
இது பற்றிய அறிமுக விழா நேற்று இரவு சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாரதிராஜா, பாக்யராஜ், கேயார், சித்ரா லட்சுமணன், சீமான், அமீர், கே.எஸ்.சீனிவாசன். ஞானவேல்ராஜா, ஒய்.ஜி.மகேந்திரன், ஹெச்.முரளி மற்றும் பல முக்கிய தயாரிப்பாளர்களும், திரைப்பட தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்தத் திட்டம் பற்றி இயக்குநர் சேரன் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விபரம் இது :
திரையுலகில் அவ்வபோது விஞ்ஞான வளர்ச்சியால் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். சில மாற்றங்கள் உடனடியாக நடந்து விடும்… சில மாற்றங்கள் நடக்க காலதாமதம் ஆனாலும் நடந்தே தீரும்..!
காலம்காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த பிலிம் சுருள் இப்போது HARD DISK-களிலும், SD CARD-களிலும் சுருண்டு கொண்டது… 10 கிலோ எடையுடன் ஒரு மனிதன் தூக்கி சுமந்து அதன் மூலம் பதிவு செய்யப்பட்ட பிலிம் கேமரா, தற்போது தடாலென டிஜிட்டல் கேமராவாக கைகளுக்குள் அடங்கிவிட்டது..!
அதைப் போலவே அகன்ற திரையில் மிரண்டு பார்த்த அந்த அழகிய சினிமா, இப்போது வேறு தளங்களுக்கு நகர்ந்து பார்வையாளர்கள் அவரவர் வசதிக்கேற்ப தேவையான சினிமாவைப் பார்க்கும் வண்ணம் தொலைக்காட்சியாகவும், கணினியாகவும் மாற்று சாதனங்களை நமக்கு வழங்கியுள்ளது வளர்ந்து வரும் நமது விஞ்ஞானம்..!
இருப்பினும்,! காட்டு யானைகளை அழிப்பது கஷ்டம்… அழிக்கவும் கூடாது என்பது போல திரையரங்கம் என்பது ஒரு அபரிதமான உணர்வுகளைத் தரும் ஒரு இடம்.. இன்றைய ஜாம்பவான்கள் அனைவரும் இந்த அகன்ற வெண்திரையை அண்ணாந்து பார்த்து தங்களது சினிமா கனவுகளை வளர்த்து வெற்றி கண்டவர்கள்தான். எனவே அதை இழக்கக் கூடாது.. அதே சமயம், தற்போது திரைத்துறையில் ஏற்பட்டு வரும் இழப்புகளால் திரையுலகமே மாண்டு விடும் அபாயம் உள்ளதால் திரையுலகை தற்போதே சரி செய்து கொள்வதும் நலம்…!
ஊர்க்குளத்தில் உள்ள தண்ணீரில் அசுத்தம் இருந்தால் மருந்து போடலாம். ஊருக்கே மலேரியா நோய் வந்துவிட்டால்…. முதலில் ஊரைச் சுத்தம் செய்து நம்மை பாதுகாப்பதுதான் அவசியம்.!
கடந்த வருடம் வெளியான படங்களின் எண்ணிக்கையில் 10 சதவிகித படங்களே வெற்றி பெற்று முதலீடு செய்த தொகையை மீட்டிருக்கின்றன. 90 சதவிகித வீழ்ச்சி எல்லோரும் உணர்ந்ததே.. இந்த ஆபத்தான நிலையை அலசி ஆராய்ந்து பார்த்ததில் மக்களின் நேரமின்மையும் மக்களுக்கான வேலைப் பளுவில் கிடைக்கும் நேரத்தில் திரைப்படம் பார்க்கும் பழக்கமும், அதற்கான வசதிகளும் அவர்களிடத்தில் வந்துவிட்ட காரணமும் என்பதும் புரிந்தது..!
அவர்களை எல்லா திரைப்படங்களையும் பார்க்க திரையரங்கம் நோக்கி வரவைக்க முடியவில்லை என்பதுதான் நமது ஆராய்ச்சியில் கிடைத்த யதார்த்த உண்மை.
சில சமூக விரோத சக்திகள் இந்தச் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி சம்பாதிக்கும சூத்திரம் தெரிந்தவர்கள். அனுமதியின்றி திரைப்படங்களை பல இடங்களில் திருட்டு வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தவும், அதற்கு மக்களை அடிமைகளாக்கி திருட்டுத்தனமாகப் பார்ப்பது சரி எனவும் சொல்ல வைத்துவிட்டார்கள்.
ஒரு பொருள் எந்தெந்த தளங்களில் விற்பனையாகிறதோ அதை உணர்ந்து அந்தந்த தளங்களில் வியாபாரம் செய்வதுதான் சரி என்பது பலர் சொல்ல நினைத்தும், சொல்லாமல் இப்போதும் விழுங்கிய நிலையில் இருப்பதுதான் யதார்த்த உண்மை.
இந்தத் திருட்டுத்தனத்தை களைந்து முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுப்பதே எங்களின் நோக்கமாகும். சென்ற வருடம் 300-க்கும் மேலான படங்கள் வெளியீட்டிற்கு தயாராக இருந்த நிலையில் வெளியான படங்கள் 130 மட்டுமே. வாரம் 4 படங்களில் வெளிவரும் இன்றைய சூழலில் இவைகள் தோல்வியையும், நஷ்டத்தையும் சந்திக்கும் நிலையில் இதற்கு மேலும் படங்களை வெளியிடுவது திரைத்துறைக்கே ஆபத்தானதாகும்.
பெரிய படங்கள் முதலில் திரையரங்கங்களிலும் அடுத்து மாற்றுத் தளங்களிலும் திரையிடப்படலாம். சிறிய படங்களை மட்டும் திரையரங்குகளில் திரையிடும் நேரத்திலேயே உடனேயே மாற்றுத் தளங்களிலும் திரையிடப்பட்டால் திரைத்துறை நஷ்டத்தை சரி செய்யவும், தனி மனித நஷ்டத்தை ஈடுகட்டவும் செய்யும் என எங்களது ஆராய்ச்சிகள் உணர்த்தின.
சிறிய திரைப்படங்களை குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியிட்டு, அதே நாளில் மற்ற தளங்களின் மூலம் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால், வெளியாகாமல் இன்னமும் தேங்கி நிற்கும் அனைத்து திரைப்படங்களும் வெளியாகவும், வியாபாரம் ஆகவும் வாய்ப்புள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதே C2H – Cinema to Home என்ற நிறுவனம். இதில் ‘2’ என்பதே இரண்டாம் தளம் என்று குறிப்பிடுவதாகும்.
முதல் தளம் திரையரங்கம். இரண்டாவது தளம் வீடு மற்றும் திரையிட வசதியான இடங்கள். இதன் மூலம் தயாரிப்பாளர்களின் முதலீட்டை மதிக்காமல் திருட்டுத்தனமாக களவு செய்யும் கும்பலிடம் இருந்து சினிமாவை மீட்க முடியும்..
களவும், காலமும் ஒரு மனிதனை எப்படி மாற்றுகிறது என்பதற்கு சமீபத்தில் சில திரையரங்குகளே திருட்டுத்தனமாக படத்தினை டிவிடியில் காப்பி செய்து விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்பதே சாட்சியாகும்.
இந்தக் குற்றங்கள் களையப்படவே இந்த C2H நிறுவனம் ஒவ்வொரு திரைப்படங்களையும், திரையரங்கம் இல்லாமல் DVD, BLU RAY, CABLE, SETTOP BOX, DTH, ONLINE NETWORK, SATELLITE NETWORK என பல தளங்களில் வெளியிடக் காத்திருக்கிறது.
டிவிடி நெட்வொர்க் தமிழகத்தில் மூலை முடுக்குவரையிலும் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் படங்களின் டிவிடி உங்கள் வீடு தேடி வந்து விற்பனை செய்யும் அளவிற்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதிக்கும் C2H-ன் டிஸ்டிரிபியூட்டர்ஸ், டீலர்ஸ் என சுமார் 7000 பேர் உருவாக்கப்பட்டுள்ளனர். அது தவிர சந்தா முறையிலும் டிவிடி உங்கள் வீடு தேடி வரும் வாய்ப்புள்ளது. டெலிஷாப்பிங்கும் பண்ணலாம். டிவிடியை ஆன்லைன் மூலமாக வாங்கலாம்.
அதேபோல் தமிழகம் அல்லாத பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் திரைப்படங்களை பார்க்க வழி செய்வதே டிடிஹெச். செட்டப் பாக்ஸ் என்ற தளங்களாகும். இந்த இரண்டு தளங்களின் மூலம் பிற மாநிலத் தமிழர்கள் திரைக்கு வந்த உடனேயே எல்லா படங்களையும் பார்க்க முடியும்.
பென் டிரைவல் மூலம் வைரஸ் போல இந்த திருட்டு பரவுகிறது. இதைக் கட்டுப்படுத்தி முறையான அனுமதியோடு குறைந்த பணம் கட்டி பார்க்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது C2H இணையத்தளத்தில்..!
இளைஞர்களிடம் நாங்கள் கேட்டுக் கொள்வது என்னவென்றால் உங்கள் வசதிக்காகவே இந்த ஆன்லைனில் படம் பார்க்கும் வசதி அமைக்கப்பட்டுள்ளது. படங்களை திருட்டுத்தனமாக ஆன்லைனில் பைரஸியாக வெளியிடும் கூட்டத்தை அனுமதிக்காமல் இனி முறையாக அனுமதி பெற்று தெளிவான, தரமான பிரதியில் படம் பார்த்து மகிழுங்கள்.
உண்மைக்கும், உழைப்புக்குமான மரியாதையை வழங்குவதும் நீங்கள் இழப்பதாக நினைக்கும் பணத்தின் மதிப்பைவிட பல ஆயிரம் மடங்கு பண மதிப்பை முதலீடு செய்து உருவாக்கப்படுவதே இந்த சினிமா.. இனி இதில் தயவு செய்து தவறுகளை அனுமதிக்காதீர்கள்..
எங்களது C2H நெட்வொர்க்கில் எங்களது படங்களை உலகின் எல்லா நாடுகளிலும் பார்க்கலாம்.. அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப கட்டணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த C2H நிறுவனம் ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒரு மாற்று வியாபாரத் தளமாக இயங்கும்..
என் திரைப்படம் இன்னமும் வெளியாக முடியவில்லை என்ற சொல்லோ.. திரைப்படம் எடுத்து எண்ணற்ற நஷ்டம் என்ற சொல்லோ இனி இல்லை என்று சொல்வதற்காகவே, இந்த C2H Network உருவாக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார் இதன் நிறுவனர் இயக்குநர் திரு.சேரன்.
இந்த நிறுவனம் உருவாக கடந்த 8 மாதங்களாக பல மாவட்டங்கள், ஊர்களில் பயணம் செய்து.. பொதுமக்களையும், சினிமா ரசிகர்களையும், கேபிள் டிவி ஆபரேட்டர்களையும், விசிடி கடைக்காரர்களையும் நேரில் சந்தித்து பல கலந்தாய்வு கூட்டங்களை நடத்திய பின்புதான் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார் இயக்குநர் திரு.சேரன்.
ஏதோவொரு சூழ்நிலையால் திருட்டு டிவிடி விற்பனையில் தள்ளப்பட்ட அல்லது தங்களது குடும்பச் சுமையை தாங்க முடியாமல் இந்த்த் தொழிலையைச் செய்யும் நண்பர்களே.. இனி நீங்கள் எங்களுடன் இணைந்து இந்த்த் திட்டத்தில் சேர்ந்து நேர்மையான முறையில் வியாபாரம் செய்து உங்களது குடும்பத்தைக் காத்துக் கொள்ள அழைப்பு விடுக்கிறோம்.. உங்களது குடும்பம் காப்பாற்றப்படவும்.. உங்களது தொழில் சிறந்து விளங்கவும் நாங்கள் உத்தரவாதம் வழங்குகிறோம்..
மாறுவதற்கும், மாற்றிக் கொள்வதற்கும் இதுவே ஒரு சரியான தருணம்.. இதற்கு மேலும் திருட்டுத்தனமாக வியாபாரம் செய்தால் அது நல்லதில்லை.. C2H நிறுவனம் வெளியிடும் படங்களை திருடி திருட்டு டிவிடி மூலம் விற்பனை செய்பவர்களைக் கண்டறிந்து காவல்துறையில் ஒப்படைத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாவட்டந்தோறும் குழுக்களும்.. வழக்கறிஞர்களும்.. வழக்கறிஞர் திரு.ராஜாசெந்தூர்பாண்டியன் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
எனவே பர்மா பஜார் வியாபாரிகளும் தமிழகம் முழுக்க டிவிடி விற்பனை செய்யும் அனைத்து வியாபாரிகளும் இந்த அழைப்பை ஏற்று இனி வரும் படங்களை முறையாக அனுமதி வாங்கி வியாபாரம் செய்யுங்கள் என C2H நிறுவனம் சொல்கிறது.
அசுத்தங்களும், குப்பைகளும் மண்டிக் கிடக்கும்போது அதன்மேல் பயணிப்பதும், வாழ்வதும் நமக்கு நோயாகத்தான் மாறும். மாறாக அதனை நாமே களைவதுதான் சிறந்த மாற்று வழி.. இந்த சிறப்பு மாற்று வழியிலேயே மாற்றத்தைத் தேடி எங்களது C2H நெட்வார்க் பயணம் செய்ய இருக்கிறது..
இது எல்லோருக்குமான வாழ்வே தவிர.. யாருக்கும் அழிவும் அல்ல.. எதிரியும் அல்ல..
சினிமா நிச்சயம் எங்களை வாழ வைக்கும் என்றே நம்புகிறோம்..!