திருட்டு டிவிடி தயாரிப்பில் ஈழத் தமிழர்களா..? – இயக்குநர் சேரனின் விளக்கம்..!

திருட்டு டிவிடி தயாரிப்பில் ஈழத் தமிழர்களா..? – இயக்குநர் சேரனின் விளக்கம்..!

நேற்று காலை கமலா தியேட்டரில் நடைபெற்ற ‘கன்னா பின்னா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் சேரனும் கலந்து கொண்டார்.

சேரன் மைக்கைப் பிடித்த துவக்கத்திலேயே “நான் வரும்போதே யோசிச்சிட்டுத்தான் வந்தேன். இங்க வந்து கன்னா பின்னான்னு நாம ஏதாவது பேசி.. நம்ம பத்திரிகைக்காரங்க அதை கன்னா பின்னான்னு எழுதி.. அப்புறம் அதுக்கு கன்னா பின்னான்னு நாலு பேரு கமெண்ட்டுகள் போட்டு.. பிரச்சினை கன்னா பின்னான்னு ஆயிருமே.. அதுனால சூதானமா, நிதானமா நாலு வார்த்தை பேசிட்டுப் போயிரலாம்னுதான் வந்திருக்கேன்..” என்று சொல்லிவிட்டுத்தான் தன் பேச்சைத் துவக்கினார்.

ஆனால் கடைசியில் தன் பேச்சை முடிக்கும்போது வெளிநாடுகளில் திருட்டு டிவிடிக்களை தயார் செய்பவர்களை பற்றி பேசும்போது ஈழத் தமிழர்கள் பற்றியும் பேசிவிட்டார் சேரன்.

சேரன் தன் பேச்சில், “தமிழ்’, ‘தமிழன்’னு நாம் சொல்றபோது அப்படியே உணர்வுகள் பொங்கி எழுது. ஆனா அந்த தமிழன்தான் இந்த மாதிரி வேலையெல்லாம் பார்த்துக்கிட்டிருக்கான்.

இந்த மாதிரி திருட்டுத்தனமா படத்தை ஆன்லைனில் வெளியிடும் வெப்சைட்டை நடத்துறவங்களே இலங்கை தமிழர்கள்தான்னு சொல்றாங்க.

இலங்கை தமிழர்களுக்காக பல நேரங்கள்ல நம்ம திரையுலகமே ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து போராடி இருக்கோம். எங்களுடைய பல விஷயங்களை இழந்துட்டுபோய் அவங்களுக்காக போராடி இருக்கோம். ஆனால் அதை சார்ந்த சிலர்தான் இதை பண்றாங்கன்னு கேள்விப்படுகிறபோது, ஏண்டா இவர்களுக்காக இதையெல்லாம் பண்ணினோம்னு அருவருப்பாக இருக்கு.

தமிழ்நாட்டில் மொத்தம் 18 ஆயிரம் திருட்டு டிவிடி கடைகள் இருக்கின்றன. பர்மா பஜாரில் இருக்கிற அத்தனை கடைகளிலும் திருட்டு டிவிடி விற்கிறார்கள்.. போலீசும் அதை தாண்டித்தான் தினமும் போய்வந்துட்டு இருக்கு. நம்மிடம் சட்டங்கள் சரியாக இல்லை. மத்திய, மாநில அரசுகளும் இதைப் பற்றி கவலைப்படவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கு..” என்று பேசி முடித்தார்.

இது வழக்கம்போல ‘மெயின் பிக்சரையும் தாண்டி விளம்பரப் படமே சூப்பரா இருக்கும்’ என்பதை போல அந்த விழாவையே மறக்கடித்து, சேரனின் பேச்சை பெரிதாக்கிவிட்டது.

சமூக வலைத்தளங்களில் உடனடியாக வறுக்கப்பட்டார் சேரன். சில பிரபலங்களும் இதனைக் கண்டித்தார்கள். “இலங்கை தமிழர்களில் ஒரு சிலர் செய்யும் தவறுக்காக நாம் செய்த ஈழ ஆதரவு போராட்டங்களையே சேரன் கொச்சைப்படுத்தலாமா? சேரன் தன் பேச்சை வாபஸ் பெற வேண்டும்..” என்று இயக்குநரும், எழுத்தாளருமான கவிதாபாரதி தன் முகநூலில் காட்டமாக விமர்சித்துள்ளார்.

இதையடுத்து இன்று இது தொடர்பாக மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் சேரன்.

அந்த அறிக்கையில், “என்னைப் பற்றி தெரிந்தவர்களுக்கு நான் எதற்காக பேசினேன்.. யாரைப் பற்றி பேசியிருப்பேன் என புரிந்திருக்கும். என்னைத் தெரியாதவர்களுக்கு நான் என்ன விளக்கம் சொல்வது..?

வெளிநாடுகளில் இருந்து திருட்டு DVD வருகிறது. ஆன்லைனில் பதிவேற்றம் செய்கிறார்கள் என்று தமிழ் திரையுலகத்தினர் கதறியபோது இந்த விமர்சகர்கள் ஏன் ஒரு வார்த்தைகூட அவர்களை, அவர்களது செயல்களை கண்டித்து வெளியிடவில்லை. அப்போ எங்களோட வாழ்க்கையைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லையா..?

உலகெங்கும் நண்பர்களை கொண்டு(அவர்களும் இலங்கைத் தமிழர்கள்தான்) C2H நிறுவனக் கிளைகள் தொடங்க முயன்றபோது, அவர்களை தடுத்தவர்கள், மிரட்டியவர்கள் இன்றும் திருட்டு டிவிடிக்களை திருட்டுத்தனமாக விற்பவர்கள்தான்.

ஒட்டு மொத்த இலங்கை தமிழர்களை நான் சொல்லியிருக்கிறேன் என்பது தவறு. நல்ல குணமும், நேர்மையும் கொண்ட ஈழத் தமிழர்களுக்கும், போராளிகளுக்கும் என்னை நன்கு தெரியும். அவர்கள் யாரும் என்னை தவறாக நினைக்கமாட்டார்கள்.” என்று கூறியிருக்கிறார்.

Our Score