‘கங்காரு’ படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில், “ஒரே நாளில் பல படங்களை ரிலீஸ் செய்வதை முறைப்படுத்த வேண்டும்..” என்று கோரிக்கை வைத்தார்.
இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில், “கங்காரு’ தன் குட்டியைச் வயிற்றில் சுமப்பது போல பாசமுள்ள தங்கையை சுமக்கும் அண்ணனின் கதை என்று ஒரே வரியில் சாமி கதை சொன்னார்.
இந்தப் படம் ஷூட்டிங்கின்போது பல பிரச்சினைகளை சந்தித்தது. தயாரிப்பாளர், இயக்குநர் இருவரும் விடாக்கண்டன் கொடாக்கண்டன்களாக போராடி ஒரு வழியாக படத்தை முடித்துள்ளார்கள்.
அண்மையில் 5 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் 3 படங்கள் நல்ல படங்கள் என்பதால் எந்தப் படத்தை பார்ப்பது என்று மக்கள் குழம்பிப் போய் நிற்கிறார்கள். தயாரிப்பாளர் சங்கம் இதை முறைப்படுத்த வேண்டும். தயாரிப்பாளருக்கு லாபம் வரும் வழியை அமைத்துக் கொடுக்க வேண்டும்.” என்றார்.
இதே விழாவில் பேசிய இயக்குநர் வீ.சேகரும் இதே போல “படங்களை முறைப்படுத்த வேண்டும்” என்றார். “போக்குவரத்தில் சிறிய, பெரிய வாகனங்கள் ஒரே நேரத்தில் போனால் வாகன நெரிசலில் டிராபிக் ஜாம்தான் ஏற்படும். அதை கட்டுப்படுத்த டிராபிக் சிக்னல், டிராபிக் போலீஸ் இருப்பதைப் போல ஒரே நேரத்தில் பல படங்கள் வருவதைக் கட்டுப்படுத்த தயாரிப்பளர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்..” என்றார் வீ.சேகர்.
இந்த வாரக் கடைசியில் வெளிவந்த ‘மீகாமன்’, ‘கயல்’, ‘கப்பல்’, ‘வெள்ளைக்கார துரை’ ஆகிய நான்கு படங்களுமே மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான படங்கள். இதில் மூன்று படங்கள் நன்றாக இருப்பதாக மவுத்டாக்கில் செய்தி பரவி, மக்கள் பார்க்க விரும்புகிறார்கள்.
ஆனால் வழக்கம்போல அவர்களது பர்ஸின் கனம் அதைத் தடுப்பதால் யோசித்து நிற்கிறார்கள். அவர்கள் ஒரு முடிவெடுப்பதற்குள்ளாக அடுத்த படங்கள் வந்துவிடும் என்பதால் இந்த நல்ல படங்களின் வசூலை பாதிக்கிறதே என்கிற ஆதங்கத்தில் இயக்குநர்கள் இருவரும் பேசியிருக்கிறார்கள்.