full screen background image

“கிழக்கு சீமையிலே’ படம் போல ‘கங்காரு’வும் வெற்றி பெறும்..” – தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவின் வாழ்த்து..!

“கிழக்கு சீமையிலே’ படம் போல ‘கங்காரு’வும் வெற்றி பெறும்..” – தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவின் வாழ்த்து..!

“கங்காரு’ படம் ‘கிழக்கு சீமையிலே’ போல நிச்சயமாக வெற்றி பெறும்..” என்று உறுதியாகச் சொல்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்து சாமி இயக்கியுள்ள படம் ‘கங்காரு’. இப்படத்தின் ட்ரெய்லர் எனப்படும் முன்னோட்டம் வெளியீட்டு விழா ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நேற்று மாலை நடைபெற்றது.  முன்னோட்டத்தை  தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார்.

இந்தப் படத்தை கலைப்புலி தாணுதான் வாங்கி வெளியிடுகிறார்.

‘கங்காரு’ படத்தை வாழ்த்திப் பேசிய தாணு, “பாசத்துக்காக ஓடிய படங்கள் வரிசையில் ‘பாசமலர்’, ‘முள்ளும் மலரும்’ வரிசையில் நான் தயாரித்த ‘கிழக்குச் சீமையிலே’ படமும் அமைந்ததில் பெருமைப்படுகிறேன். அது 275 நாள் ஓடியது.

இந்த ‘கங்காரு’ படத்தையும் பார்த்துவிட்டுத்தான் வாங்கி வெளியிடுகிறேன். யாரும் எதிர்பார்க்க முடியாத ‘கங்காரு’ படத்தின் க்ளைமாக்ஸ் நிச்சயம் பேசப்படும். படமும் நிச்சயம் வெற்றி பெறும்..” என்றார்.

இயக்குநர் மனோஜ்குமார் பேசும்போது “இங்கே மூன்று பாடல்கள் போட்டுக் காட்டினார்கள். இதிலேயே மொத்தக் கதையும் தெரிகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஊருக்குச் சென்று என் அக்கா, தங்கையுடன் வாழ்ந்துவிட்டு வந்த உணர்வு ஏற்படுத்தியது. வீடு சம்பந்தப்பட்ட கதை, உறவுகள் சம்பந்தப்பட்ட கதையாகத் தெரிகிறது. நிச்சயம் இது வெற்றி பெறும். ‘மிருகம்’ சாமி, இனி  ‘கங்காரு’ சாமியாகிவிடுவார்” என்றார்.

இசையமைப்பாளர் ஸ்ரீநிவாஸ்  பேசும்போது “கதை பிடித்துதான் இசையமைத்தேன். முதலில் தாலாட்டு பாடலை உருவாக்கினோம். அப்படியே வளர்ந்தன பாடல்கள். இப்படத்தில் அர்த்தமில்லாத பரபரப்பு, ஆர்ப்பாட்டமெல்லாம் இருக்காது. உண்மையாக இருக்கும். உணர்வுபூர்வமாக இருக்கும். முன்பெல்லாம் நான் பாடிவிட்டு நம்ம வேலை முடிந்தது என்றெண்ணி சென்று விடுவேன். நான் இசையமைப்பாளரான பிறகுதான் ஒரு தயாரிப்பாளரின் சிரமங்கள் என்னென்ன என்பது எனக்குப் புரிந்தது..” என்றார்.

விழாவில் நாயகன் அர்ஜுனா, நாயகி பிரியங்கா, நடிகை கோமல் சர்மா, தம்பிராமையா, வெற்றிக் குமரன், இயக்குநர்கள்  கே.எஸ். அதியமான், ஜெகன், வேல்முருகன், கேபிள் சங்கர், எடிட்டர் மணி, தயாரிப்பாளர்கள் டி.சிவா,   பி.எல். தேனப்பன்,  கரு.நாகராஜன். ராதாகிருஷ்ணன், ஒளிப்பதிவாளர் ராஜரத்னம்  ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.  வெளியூர் சென்றிருந்த  நடிகை  நமிதா நிறைவாக வந்து வாழ்த்திவிட்டு சென்றார். 

Our Score