full screen background image

சினிமா இயக்கம் பற்றி பிரகாஷ்ராஜ் சொல்லி நான் கற்றுக் கொள்ள எதுவுமில்லை – இயக்குநர் சீனு வைட்லாவின் பதிலடி..!

சினிமா இயக்கம் பற்றி பிரகாஷ்ராஜ் சொல்லி நான் கற்றுக் கொள்ள எதுவுமில்லை – இயக்குநர் சீனு வைட்லாவின் பதிலடி..!

பிரகாஷ்ராஜின் கவிதை வரிகளை ‘ஆகடு’ படத்தில் பயன்படுத்தியதில் தவறொன்றுமில்லை என்று அதன் இயக்குநர் சீனு வைட்லா தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் நடந்த ஒரு தெலுங்கு படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சியில் ‘ஆகடு’ படத்தில் தனது கவிதை பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தனது அதிருப்தியை தெரிவித்தார். இயக்குநர் சீனு வைட்லா அகங்காரத்துடன், ஆணவத்துடன் இருப்பதாக சொன்னார் பிரகாஷ்ராஜ்.(இந்தச் செய்தி இந்தப் பதிவில் உள்ளது)

இது பற்றி நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார் இயக்குநர் சீனு வைட்லா. அப்போது “பிரகாஷ்ராஜ் உணர்ச்சிபூர்வமாக பேசுகிறார். ஆனால் உணர்ந்து பேசவில்லை…” என்றார்.

மேலும் அவர் பேசும்போது, “பிரகாஷ்ராஜ் உணர்ச்சிப்பூர்வமாக என்னை நோக்கி பாடிய அந்தக் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது. அது எனக்காகவே பாடப்பட்டது. அதுனால்தான் அதனை என் படத்தில நான் பயன்படுத்தினேன். இதில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை..

பிரகாஷ்ராஜ் சொன்னதெல்லாம் பொய்யானது. அந்த ‘ஆகடு’ படத்தின் ஷூட்டிங்கில் அவர்தான் எனது உதவி இயக்குநர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டினார். ஆபாசமாகப் பேசினார். இதற்கு அந்த யூனிட்டில் அன்றைக்கு இருந்தவர்களே சாட்சி. அதற்கு பின்பு உடனேயே பிரஸ்   மீட் வைத்து  நான் அகங்காரமாக நடந்து கொள்வதாக என்னைத் தாக்கி பேசினார். அவருடைய கேரியரை நான் அழிக்கப் பார்ப்பதாகவும், அவரை படங்களில் நடிக்கவிடாமல் தடை செய்ய திட்டம் தீட்டுவதாகவும் அபாண்டமாக என் மீது பழி சுமத்தினார். அதனால்தான் அவரை ‘ஆகடு’ படத்தில் இருந்து நீக்க வேண்டியதாகிவிட்டது..” என்றார்.

ஆகடு படம் தோல்வியடைந்துவிட்டதாக பிரகாஷ்ராஜ் கூறியது குறித்து பேசிய சீனு வைட்லா, “ஆகடு’ படம் இப்போதும் தியேட்டர்களில் நன்றாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது பிரகாஷ்ராஜின் ‘ஆகடு’ படம் பற்றிய கமெண்ட் எனக்கு வருத்தமளிக்கிறது.

என்னுடைய ஆணவத்தால், நான் படத்தை சரியாக, இயக்காத காரணத்தினால் படம் தோல்வியடைந்திருப்பதாக பிரகாஷ்ராஜ் சொல்லியிருக்கிறார். இதே போன்று பிரகாஷ்ராஜ் மீதும் பல குற்றச்சாட்டுக்கள் முன்காலத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.

நான் என்னுடைய கடின உழைப்பால் மட்டுமே இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். உண்மையாகவே நான் ஆணவம் கொண்டவனென்றால் பல நடிகர், நடிகைகள் என் இயக்கத்தில் நடிக்க முன் வருவார்களா..?

பல பிரபலங்களை மறைமுகமாக எனது படத்தில் நான் தாக்கியிருப்பதாகவும் பிரகாஷ்ராஜ் சொல்லியிருக்கிறார். இதுவும் ஒரு அபாண்டமான குற்றச்சாட்டு. பன்ச் வசனங்களை எனது ஆரம்ப கால ‘தூக்குடு’ போன்ற படங்களில்தான் வைத்திருந்தேன். பவன் கல்யாண் மற்றும் என்.டி.ஆர். மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். அவர்களை வைத்து படங்களையும் இயக்கியிருக்கிறேன். அப்படியிருக்க நான் ஏன் அவர்களை கிண்டல் செய்யும்விதமாக காட்சிகளை வைக்க வேண்டும்..?

சினிமா இயக்கம் பற்றியோ, கதை பற்றியோ பிரகாஷ்ராஜிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. அவரே ஒரு இயக்குநர்தான். அவர் கடைசியாக இயக்கிய படம்கூட, பாக்ஸ் ஆபீஸில் கடைசியில் இருந்ததை நான் பார்த்தேன்.

எனக்கும் பிரகாஷ்ராஜுக்கும் இடையில் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சினையும் இல்லை. வரும்காலத்தில் நாங்கள் இருவரும் இணைந்து வேலை செய்யும் சூழலும் வரலாம்….” என்று ‘பொடி’ வைத்து பதில் சொல்லியிருக்கிறார் சீனு வைட்லா.

சீனு வைட்லாவின் இந்த பதிலுக்கு டிவிட்டரில் தனது பதிலை இப்படி சொல்லியிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.  “சில மனிதர்கள் திருந்தவே மாட்டார்கள்.. இவர்களெல்லாம் பனை மரத்தின் கீழே நின்று கள் குடித்தாலும், குடிப்பது பால் என்றுதான் சொல்வார்கள்..” என்று கிண்டலடித்திருக்கிறார்.

கலைஞர்களுக்குள் ஏற்படும் மோதலால் பாதிக்கப்படுவது நல்ல படைப்புகள்தான்.. பிரகாஷ்ராஜ், சீனு வைட்லா இருவருமே தங்களது ஈகோவை விட்டுக் கொடுத்துவிட்டு மனம் விட்டுப் பேசுவதுதான் பிரச்சினை தீர ஒரே வழி..!

Our Score