‘இவனுக்கு தண்ணில கண்டம்.’ – இது வரவிருக்கும் ஒரு புதிய தமிழ்ப் படம்.
“மக்களிடையே பிரபலமாக புழங்கும் வார்த்தைகள் படத்தின் தலைப்பாகவும் சிக்கிவிட்டால் அந்தப் படம் மக்களிடையே எளிதில் சென்றடையும். அதிலும், படத்தின் கதைக்கும் அந்த தலைப்பே பொருத்தமாக இருந்துவிட்டால் அது மிகப் பெரிய அதிர்ஷ்டம்தான்..” என்று தலைப்பை பற்றி விளக்குகிறார் இயக்குனர் எஸ் என்.சக்திவேல்.
சின்னத்திரையில் மிக பிரபலமான ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ போன்ற பல வெற்றி தொடர்களின் இயக்குனரான சக்திவேல் இயக்கத்தில் உருவாகும் முதல் படம்தான் இந்த ‘இவனுக்கு தண்ணில கண்டம்’.
வி.வி.ஆர். சினிமாஸ்க் என்ற நிறுவனத்தின் சார்பில் V.வெங்கட்ராஜ் தயாரிக்கும் இப்படத்தில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும், சின்னத்திரை நடிகருமான தீபக் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் புது முகம் நேஹா. இவர்களுடன் பாண்டியராஜன், சுப்பு பஞ்சு, மனோபாலா, எம் எஸ்.பாஸ்கர் , குமரவேல், சென்ட்ராயன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் மற்றும் சண்டி ஆகியோர் நடித்து உள்ளனர். A7 என்ற ஒரு புது இசை குழு இசை அமைப்பாளர்களாக அறிமுகமாகியிருக்கிறார்கள். கானா பாலா, யுகபாரதி மற்றும் கண்ணன் பாடல்களை எழுதியுள்ளனர். ஆர்.வெங்கடேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி பேசிய இயக்குநர் எஸ்.என்.சக்திவேல், “இந்தப் படத்தின் தலைப்பே படத்தின் கதையை சொல்லும். படத்தின் கதையைக் கேட்டவுடனேயே தயாரிப்பாளர் படத்தைத் தயாரிக்க ஒத்துக் கொண்டார். இதுவே எனக்குக் கிடைத்த முதல் வெற்றியாக நான் நினைக்கிறேன். இளைஞர்களின் அன்றாட வாழ்வில் நடக்கும் சில சம்பவங்களின் அடிப்படையில், நகைச்சுவை கலந்து உருவாகியுள்ள படம் இது.
வாழ்வில் எல்லா கட்டத்திலும் தோல்வியையே சந்தித்து வரும் தொலைக்காட்சி தொகுப்பாளரான ஹீரோ, எதிர்பாராவிதமாக ஒரு கேளிக்கை விருந்தில் பங்கேற்க நேரிடுகிறது. அங்கே தன்னிலை மறந்த நிலையில் அவன் செய்யும் செயல்.. அவன் வாழ்கையையே புரட்டிப் போடுகிறது. அதன் தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களும், அவன் செய்த செயல் அவனுக்கு நல்லது செய்கிறதா அல்லது கெடுதல் செய்கிறதா என்பதைத்தான் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறோம். துரித வேகத்தில் படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்து, இப்போது டப்பிங் உள்ளிட்ட இறுதிக் கட்ட பணிகளில் இருக்கிறோம். ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை…” என்று தன்னம்பிக்கையுடன் சொல்கிறார் இயக்குநர் எஸ்.என்.சக்திவேல்.