ஹீரோ சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சி.மணிகண்டன் வழங்க கதிரவன் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘மீண்டும்’.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் சரவணன் சுப்பையா. இவர் அஜீத்குமார் நடிப்பில் பரபரப்பாக பேசப்பட்ட வெற்றிப் படமான ‘சிட்டிசன்’ மற்றும் ‘ஏபிசிடி’ ஆகிய படங்களை இயக்கியவர்.
இந்த ‘மீண்டும்’ படத்தில் கதிரவனுக்கு ஜோடியாக அனகா நடித்திருக்கிறார். இவர் ‘டிக்கிலோனா’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களில் நடித்தவர்.
மேலும், பிரணவ் ராயன், அனுராதா, துரை சுதாகர், சுபா பாண்டியன், அபிதா செட்டி, யார் கண்ணன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, சுப்ரமணியம் சிவா, தர்ஷினி, இந்துமதி, மணிகண்டன், கேபிள் சங்கர், ஆதர்ஷ், மோனிஷா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதி உள்ளார். நரேன் பாலகுமாரன் இசை அமைத்திருக்கிறார். சீனிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜா முகமது படத் தொகுப்பு செய்திருக்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சி அளித்திருக்கிறார். மணிமொழியன் ராமதுரை அரங்கம் அமைத்திருக்கிறார். நடன இயக்கத்தை ராதிகா அமைத்துள்ளார். மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு.
விஜய் நடித்த ‘புலி’ படத்தை தயாரித்த பி.டி.செல்வகுமார் இந்த மீண்டும் படத்தை வர்த்தகம் செய்துள்ளார். தமிழகமெங்கும், காமதேனு பிலிம்ஸ் சார்பாக பாலாஜி விநியோகிக்கிறார்.
இரண்டு தந்தை, ஒரு பெண் ஒரு குழந்தை என்ற மாறுபட்ட கதையம்சமுள்ள இப்படத்தில் சிங்கள கடற்படையினரிடம் சிக்கி தமிழ் மீனவர்கள்படும் சித்ரவதையை தத்ரூபமாக்கி படமாக்கி உள்ளனர்.
இந்தியா மீது மறைமுக தாக்குதல் நடத்தும் இலங்கை, சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளின் விஞ்ஞான ரீதியாந தாக்குதலையும் இப்படத்தில் சொல்லியிருக்கின்றனர்.
கதாநாயகன் கதிரவன் இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார். இதற்காக ஆறு நாட்கள் நிர்வாணமாக சித்ரவதை செய்யப்படும் காட்சிகளில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது,
மீண்டும் படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பாடல்கள் முன்னோட்டம் இன்று சென்னை பிரசாத் லேபில் நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி, பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, திரைப்பட இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பேரரசு ஆகியோர் முன்னிலை வகித்து படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டனர்.
விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, “‘சிட்டிசன்’ படத்தில் தனது திறமையை நிரூபித்தவர் இயக்குநர் சரவண சுப்பையா. ‘சிட்டிசன்’ படம் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்களை பேசியது.
திறமையுள்ளவர்கள் எல்லாம் ஏன் நடுவில் கொஞ்சம் சினிமாவைவிட்டு ஒதுங்கிட்டீங்களா? அல்லது அவர்களை சினிமா ஒதுக்கிவிட்டதா என்று தெரியவில்லை.
பொழுது போக்குக்காகத்தான் சினிமாவை எடுக்கிறோம். ஆனாலும், அதில் சில நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு சிலர்தான். 70- 80-களில் இருந்த இயக்குநர்கள் வெற்றியையும் கொடுப்போம், தோல்வியையும் கொடுப்போம். ஆனால் வெற்றியை மட்டும் மனதில் வைத்துக் கொள்வோம். வாய்ப்புகள் தொடர்ந்து வரும்.
இப்போது ஒவ்வொரு படமும் சோதனையாகிறது. ஒரு படம் சறுக்கினால் அவ்வளவுதான் நம்மை மறந்துவிடுவார்கள். சரவணன் சுப்பையா மீண்டும் இந்த ‘மீண்டும்’ படம் மூலம் மீண்டு வந்திருக்கிறார். ‘சிட்டிசன்’ இயக்குநராக மீண்டும் இந்தப் படம் உங்களை கொண்டு வந்து நிறுத்தும்.
படத்தின் டிரைலர் ரொம்ப நன்றாக இருந்தது. படத்தில் ஹீரோவை கொடுமைப்படுத்தும் காட்சியும் இருக்கிறது, ஒரு குழந்தையை வைத்து சென்டிமென்ட் காட்சியும் இருக்கிறது. ஹீரோ கதிரவன் மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறார். நன்றாக உழைப்பவனை சினிமா எப்போதும் கை விடாது. சினிமாவை காதலித்தால் உண்மையான காதலிபோல் அது நம்மை கை விடாது. ஏதாவது ஒருவிதத்தில் நம்மை பிடித்து இழுத்துக்கொண்டே இருக்கும்.
இங்கு லியோனி வந்திருக்கிறார். முதன்முறையாக அவரை நான் சினிமாவுக்கு அழைத்து வந்தேன். ‘செந்தூரப் பாண்டி’ படத்தின் நூறாவது நாள் விழாவுக்கு ‘காதலா வீரமா’ என்ற தலைப்பை வைத்து பட்டிமன்றம் நடத்திக் கொடுத்தார். அதேபோல் நாஞ்சில் சம்பத் இங்கு வந்திருக்கிறார். “அவர் இருக்கும் மேடையில் நீ எப்படி தைரியமா பேசற..?” என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டி உள்ளது.
அடுத்து பாண்டே வந்திருக்கிறார். திறமையானவர். ஆனால், வழி தவறி எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறாரோ என்று நினைக்கிறேன். இவர் தமிழகத்துக்கு தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்தால் நல்லது…” என்றார்.