full screen background image

“சோக நடிப்பைக் காட்ட எனக்கு 3 மணி நேரம் ஆனது”-நடிப்பு அனுபவம் பற்றி திண்டுக்கல் லியோனியின் பேச்சு

“சோக நடிப்பைக் காட்ட எனக்கு 3 மணி நேரம் ஆனது”-நடிப்பு அனுபவம் பற்றி திண்டுக்கல் லியோனியின் பேச்சு

ஹீரோ சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சி.மணிகண்டன் வழங்க கதிரவன் கதாநாயகனாக நடிக்கும் படம் மீண்டும்’.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் சரவணன் சுப்பையா. இவர் அஜீத்குமார் நடிப்பில் பரபரப்பாக பேசப்பட்ட வெற்றிப் படமான சிட்டிசன்’ மற்றும் ‘ஏபிசிடி’ ஆகிய படங்களை இயக்கியவர்.

இந்த மீண்டும்’ படத்தில் கதிரவனுக்கு ஜோடியாக அனைகா நடித்திருக்கிறார். இவர் ‘டிக்கிலோனா’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களில் நடித்தவர்.

மேலும்,  பிரணவ் ராயன், அனுராதா, துரை சுதாகர், சுபா பாண்டியன்,  அபிதா செட்டி,  யார் கண்ணன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, சுப்ரமணியம் சிவா, தர்ஷினி, இந்துமதி, மணிகண்டன், கேபிள் சங்கர், ஆதர்ஷ், மோனிஷா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதி உள்ளார். நரேன் பாலகுமாரன் இசை அமைத்திருக்கிறார். சீனிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜா முகமது படத் தொகுப்பு செய்திருக்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சி அளித்திருக்கிறார். மணிமொழியன் ராமதுரை அரங்கம் அமைத்திருக்கிறார்.  நடன இயக்கத்தை ராதிகா அமைத்துள்ளார். மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு.

இந்த ‘மீண்டும்’ படத்தின் டிரைலர் வெளியீடு  மற்றும் பாடல்கள் முன்னோட்டம் இன்று சென்னை பிரசாத் லேபில் நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி,  பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, திரைப்பட இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பேரரசு ஆகியோர் முன்னிலை வகித்து படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டனர். 

இந்த விழாவில் நாஞ்சில் சம்பத் பேசும்போது, “அனைவரையும் கலையால் வணங்குகிறேன். தமிழால் ஆராதிக்கிறேன். எனக்கு இப்படியொரு வாய்ப்பு எப்படி கிடைத்தது என்று நேற்று முதலே நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

நண்பர் சரவனன் சுப்பையா திருவள்ளூரில் நடந்த பட்டிமன்றத்தில் எனக்கு எதிர் திசையில் பேசினார். அன்றைக்கு அவர் மீது நான் கடும் கோபத்திலிருந்தேன். முரணான தகவலாக பேசுகிறாரே  என்று எண்ணினேன். ஒரு நாள் சந்திப்பில் அவர் உள்ளத்தில் நான் விழுந்திருக்கிறேன். நேற்று என்னை அழைத்த மாத்திரத்தில் இந்த விழாவில் கலந்துகொள்ள இசைவு கொடுத்தேன்.

அதேபோல் பி.டி.செல்வக்குமார் தன்னுடைய ‘கலப்பை’ அமைப்பு மூலம் பல குடும்பங்களுக்கு உதவியவர். அனைகாவின் நடிப்பையும், கதிரவனின் நடிப்பையும் கண்டு என் உடம்பு சில்லிட்டுப் போனது. என்னுடைய எலும்பையே உருக்கிவிட்டது.

இந்த ‘மீண்டும்’ படத்தின் கதை அமைப்பு சமூக பிரக்ஞ்னை, சம கால சமூகத்தில் நிகழ்கின்ற சம்பவத்தை புள்ளியாக வைத்துக்கொண்டு அதில் கோலமாக விரித்து தந்திருக்கிறார் சரவணன் சுப்பையா. ஒரு மிகப் பெரிய கலைஞனாக மீண்டும் இந்தப் படத்தின் மூலம் அவதாரம் எடுத்திருக்கிறார்.

சமூக நீதியை நோக்கி சினிமா நகர்ந்து வருகிறது என்று இன்றைக்கு ‘தமிழ் இந்து’வில் செய்திக் கட்டுரை படித்தேன். நானும் இன்றைக்கு சினிமாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறேன். ‘எல்.கே.ஜி.’ படத்தில் நான்  நடித்த பிறகு சினிமாவால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை தெரிந்து கொண்டேன். இந்த ‘மீண்டும்’ படம் பெரிய வெற்றி படமாக அமையும்…” என்றார். 

இயக்குநர் ரவி மரியா பேசும்போது, “திண்டுக்கல் லியோனி, நாஞ்சில் சம்பத் ஆகியோரின் பேச்சை கேட்க வந்திருக்கிறேன். அதேபோல் ரங்கராஜ் பாண்டே ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பிறந்தவர் என்று சொன்னார். பி.டி.செல்வகுமார் இன்றைக்கு ஆபத் பாண்டவராக இருக்கிறார்.

ஜெயில்’ படம் வெளி வர முடியாத சூழல் இருந்தபோது அதை வெளிக்கொண்டு வர எல்லா உழைப்பும் தந்தவர். இந்த ‘மீண்டும்’ படத்தின் ஹீரோவை பற்றி சொல்லியே ஆக வேண்டும் கிட்டதட்ட முழு நிர்வாணமாக இந்தப் படத்தில் கதிரவன் நடித்திருக்கிறார்.  டிரைலரை பார்க்கும்போதே கண் கலங்கிவிட்டேன்.  அவருக்கு பெரிய இடம் சினிமாவில் காத்திருக்கிறது.

அதேபோல் படத்தின் ஒளிப்பதிவு திருப்பதி லட்டு மாதிரி இருக்கிறது. தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர்களெல்லாம் இந்த மீண்டும்’ படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் சரவணன் சுபையாவை  பாராட்டிவிட்டார்கள்.

இந்தப் படத்தில் இரண்டு அப்பாக்கள் ஒரு அம்மா என்ற கதை அம்சம் கொண்டது. மீண்டும் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கும்.” என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது, “இங்கு வந்திருக்கும் திண்டுக்கல் லியோனிக்கும், நாஞ்சில் சம்பத்துக்கும் எனக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது. நான் ஊர் பெயரில் படம் எடுப்பவன் அதேபோல் லியோனியும், சம்பத் அய்யாவும் ஊர் பெயரை தன் பெயருடன் வைத்திருக்கிறார்கள்.

சினிமாவுக்கு பயங்கர சக்தி இருக்கிறது. யாரெல்லாம் சினிமாவை விமர்சித்தார்களோ அவர்களையெல்லாம் சினிமா அரவணைத்துவிட்டத்து.  சாலமன் பாப்பையா,  ராஜா, திண்டுக்கல் லியோனி, பாண்டே அனைவரையும் சினிமா தனக்குள் இழுத்துவிட்டது  இவர்கள் எல்லாம் சினிமாவில் நடித்துவிட்டார்கள்.

இந்தப் படத்தின் இயக்குநரான சரவணன் சுப்பையாவைச் சுற்றி எப்போதும் மிக பெரிய நட்பு வட்டமிருக்கும். திறமையான இயக்குநர். இந்த மீண்டும்’ படம் எப்போதோ வெளிவந்திருக்க வேண்டியது. என்ன காரணமோ தாமதமாகிவிட்டது.

இப்போது சினிமா சிக்கலிலிருக்கிறது. முன்பு ரிலீஸுக்கு முன் பிர்சனை வரும் இப்போது ரிலீஸுக்கு பிறகும் பிரச்சினைகள் வருகிறது. ஒரே குழப்பமாக உள்ளது. 500, 600 படங்கள் இப்போதுவரையிலும் வெளியாகாமல் உள்ளன. இதற்கெல்லாம் தயாரிப்பாளர்கள் சங்கம்தான் தீர்வு காண வேண்டும்.

சினிமாவை வைத்து யார் யாரோ சம்பாதிக்கிறார்கள். ஆனால் சினிமாவுக்கு முதல் போட்டவர்கள் மட்டும் எதையும் சம்பாதிக்க முடியவில்லை. ‘மீண்டும்’ பட டிரைலர் சூப்பராக இருக்கிறது. தரமாக இருக்கிறது. இந்த படம் மிக பெரிய வெற்றி அடையும்…” என்றார். 

தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் பேசும்போது, “சிறிய படங்கள் வெளியவதற்கு நிறைய சிரமம், கஷ்டப்பட வேண்டி உள்ளது, பெரிய படங்களுக்கு பிரச்னை இல்லை.  ‘சிட்டிசன்’ படம் மூலமாக அஜீத்துக்கு திரும்பி பார்க்கிற படத்தை தந்தவர் சரவணன் சுப்பையா.  அவர் இயக்கி இருக்கும் இந்தப் படத்தின் மூலமாக எப்படி ‘சிட்டிசன்’ படம் மூலமாக பேசப்பட்டாரோ அதுபோல் பேசப்படுவார். நாயகன் கதிரவன் நிறைய படங்களைத் தயாரிக்கலாம் என்ற எண்ணத்தில் இருப்பவர். இந்த ‘மீண்டும்’ படத்துக்கு ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்…” என்றார். 

திண்டுக்கல் லியோனி பேசும்போது, “ஒரு திரைப்படத்தின் வெளியீட்டு விழா, எல்லோருக்கும் பழக்கமான மேடை. இதில் ஆட் அவுட்டாக உட்கார்ந்திருப்பது நானும் நாஞ்சில் சம்பத்தும்தான். இது எனது 2-வது மேடை. முதல் மேடை போஸ் வெங்கட் இயக்கிய ‘கன்னி மாடம்’ படம்.

சரவணன் சுப்பையா இயக்கத்தில் வரும் இந்த ‘மீண்டும்’ பட விழா எனது இரண்டாவது மேடை. சினிமாவில் நடிப்பது எவ்வளவு கஷ்டம் என்பது ‘கங்கா கவுரி’ படத்தில் நான் நடித்தபோது எனக்கு தெரிந்தது. “முகத்துல வேதனையைக் காட்டணும்” என்று இயக்குநர் சொன்னார். அந்த ஒரு காட்சியில் நான் நடிப்பதற்கு மூன்றரை மணி நேரம் ஆனது. அன்றைக்குத்தான் நான் சினிமாவை விட்டேன். அதற்கு பிறகு தற்போது ‘ஆலம்பனா’ படத்தில் நடித்திருக்கிறேன். 

சரவணன் சுப்பையா இயக்கிய சிட்டிசன்’ படத்தில் அஜீத்துக்கு அப்படியொரு கிளைமாக்ஸ் காட்சி வைத்திருப்பார். மாபெரும் உலக  நடிகராக அந்த படம் அஜீத்தை மாற்றும் அளவுக்கு சரவணன் சுப்பையா அமைத்திருப்பார். அவருக்கு இப்படம்  ‘சிட்டிசன்’ போல் மீண்டும் ஒரு வெற்றி படமாக அமையும்.

இப்படத்தின் கதாநாயகனான கதிரவன் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். குடும்ப கதையம்சம், வெளிநாட்டு தரத்துடன் இணைந்து படத்தை கொடுத்திருக்கிறார் சரவணன் சுப்பையா. இசையும் மிக அற்புதமாக தந்திருக்கிறார் இசை அமைப்பாளர். கலைப் படைப்பு நம் வாழ்க்கையில் ஒரு நிலையாவது மாற்ற வேண்டும். அதுதான் சிறந்த கலைப் படைப்பு. அது போன்ற படத்தை இயக்குனர் சரவணன் சுப்பையா மீண்டும், மீண்டும் தர வேண்டும். இப்படம் மக்கள் மீண்டும் பார்க்கும் வெற்றிப் படமாக அமையும்…” என்றார். 

நாயகன் கதிரவன் பேசும்போது, “இந்த மீண்டும்’ படத்துக்காகவும் எனது கம்பெனிக்காகவும் நேரம் ஒதுக்கி இங்கு வந்த அனைவருக்கும் எனது நன்றி. 

திண்டுக்கல் லியோனி, நாஞ்சில் சம்பத்,  ரங்கராஜ் பாண்டே, இயக்குனர் எஸ்.ஏ.சி. சார் இவர்கள் எல்லாம் இங்கு வந்தது எனக்கு பெருமையாக இருக்கிது. இவர்கள் எல்லோருக்கும் நான் ரசிகன். ஒரு ரசிகன் விழாவுக்கு நீங்கள் எல்லோரும் வாழ்த்த வந்திருக்கிறீர்கள். அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது…” என்றார்.

இயக்குநர் சரவணன் சுப்பையா பேசும்போது, “இந்த இடத்துக்கு என்னை அழைத்து வந்த தயாரிப்பாளர் மணிகண்டனுக்கு நன்றி. அவர் இல்லாவிட்டால் இப்படியொரு வாழ்க்கை எனக்குக் கிடைத்திருக்காது. மிகப் பெரிய அர்ப்பணிப்பை நடிப்பில் அவர் கொடுத்திருக்கிறார். எனது இரண்டு கண்களாக ஒளிப்பதிவாளர்  மற்றும் இசையமைப்பாளர் இருந்தனர். அவ்வளவு உழைப்பினை இந்தப் படத்திற்குக் கொடுத்திருக்கிறார்கள். 

பின்னணி இசை ஆங்கில பட பாணியில் இருந்தாலும் முழுக்க, முழுக்க இந்திய இசையில்தான் அமைத்திருக்கிறார். இந்த படத்தினை வெளியிட பல இடங்களில் பேசி பார்த்தோம். யாரும் கை கொடுக்கவில்லை. இக்கட்டான இந்த சூழலில்தான் பி.டி.செல்வக்குமார் கை கொடுத்தார். அவர் இல்லாவிட்டால் இந்த படம் வெளி வருமா என்பது தெரியாது. 

நான், நாஞ்சில் சம்பத்துடன் பட்டிமன்றத்தில் மோதியது உண்மை. அப்போது உண்மைக்குப் புறம்பான எந்தக் கருத்தையும் நான் சொல்லவில்லை. அவர் நம்பரை வாங்கி வைத்திருந்தேன். அவரை அழைத்தேன். அவரும் உடனே வருவதாக சொன்னார். திண்டுக்கல் லியோனி எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பவர். “நீ சிறந்த சிந்தனையாளன். இன்னொரு ‘சிட்டிசன்’ கொடு” என்றார். “சரி” என்றேன்.

இந்தப் படத்தில் அற்புதமான பாடல் வரிகளை வைரமுத்து எழுதி என்னை ஊக்குவித்தார். முக்கியமாக ஒத்துழைப்பு கொடுத்த டைமண்ட் பாபு, இடையில் ஒரு நிகழ்ச்சிக்கு எற்படு செய்து கொடுத்த விஜய முரளி கெஸ்ட் அப்பியரன்ஸில் வந்து போனார். அவருக்கும் எனது நன்றி. ஆனால், டைமண்ட் பாபுவின் உதவி அளப்பரியது. அவருடன் பி.டி.செல்வகுமாரும் அசோசியேட் செய்து சிறப்பான விழாவாக இதை மாற்றிவிட்டார்கள். இந்தப் படத்தை பார்த்து என்னை கை தூக்கி விடுங்கள். இந்தப் படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து நல்ல படங்களை தருவேன்…” என்றார்.

Our Score