இன்று மதியம் உச்சி வெயிலில் திரைப்பட இயக்குநர், தோழர், அறிஞர், பேச்சாளர்,. மிகச் சிறந்த படைப்பாளி, படிப்பாளி.. அண்ணன் ஜனநாதனின் இறுதிச் சடங்கு நடந்தேறிவிட்டது.
சினிமாவுலகத்தில் இப்படியெல்லாம் இயக்குநர்கள் இருப்பார்களா என்கிற சந்தேகத்தைத் தோற்றுவித்த விரல்விட்டு எண்ணக் கூடிய இயக்குநர்களில் அண்ணன் ஜனநாதனும் ஒருவர்.
தமிழ்ச் சினிமாவில் இப்படித்தான் நான் சினிமா எடுப்பேன் என்ற கொள்கையில் இருந்த சில இயக்குநர்களிலும் இவரும் ஒருவர்.
இவருடைய முதல் படமான ‘இயற்கை’ ஏனோ என்னை அதிகம் கவரவில்லை. ஆனால் அவரது இயக்கத்தில் இருந்த ஏதோ ஒன்று அவரை நோக்கி ஈர்த்து வைத்திருந்தது.
அவரது மூன்றாவது படமான ‘பேராண்மை’ படம் வெளியான பின்பு ஒரு நாள் மாலை நேரம் ICAF நடத்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்ள பிலிம் சேம்பர் தியேட்டருக்கு வந்திருந்தார். அப்போதுதான் முதல் அறிமுகம் கிடைத்தது.
என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நான் பேசியபோது அவர் செய்த முதல் செயல் என் தோளில் கை வைத்து “வாங்க தம்பி…” என்றதுதான். பல இயக்குநர்களிடத்தில் கை நீட்டினால் கையைக்கூட குலுக்காமல் பேண்ட் பாக்கெட்டில் சொருகிக் கொண்டு “அப்புறம்.. சொல்லுங்க…” என்று சொல்லிய அவமானத்தையும் சந்தித்திருக்கிறேன். அதனால்தான் அந்த நேரத்திலேயே அவர் மீது எனக்குள் ஒரு சிநேகம் பிறந்தது.
‘பேராண்மை’ படத்தின் கிளைமாக்ஸ் எனக்குப் பிடிக்கவில்லை. அதோடு அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த தேவையற்ற இரட்டை அர்த்த வசனங்களும் எனக்குப் பிடிக்கவில்லை. “அதை ஏன் படத்தில் வைத்தீர்கள்..?” என்று கேட்டேன். சிரித்தார். “எத்தனை வருடங்களாக படம் பார்க்குறீங்க..?” என்றார். “பல வருடங்களாக..” என்றேன்.
“இப்போதைய காலக்கட்டத்தில் யெங்கர்ஸ் எல்லாருமே இப்படித்தான் இருக்காங்க. நான் என் கதாபாத்திரங்களை முழுமையாக நல்லவர்களாகக் காட்ட விரும்பவில்லை. அவர்கள் சமயத்தில் எப்படி பேசிக் கொள்வார்களோ அப்படியேதான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான்..” என்றார். எனக்கு அப்படியும் மனம் ஆறவில்லை.
“இந்தப் படத்தில் அது இடம் பெற்றிருக்கக் கூடாது. அதுவும் உங்களது படம் என்பதால் சொல்கிறேன்…” என்று அழுத்தமாகச் சொன்னபோது என் கண்களை ஊடுறுவிப் பார்ப்பதுபோல பார்த்துவிட்டு என்னை இறுக்கமாக அணைத்துக் கொண்டார்.
பின்பு ஒரு ஓரமாக அமர்ந்து அந்தப் படத்தைத் தயாரிக்கும் முன் என்னென்ன கஷ்டங்களை பட்டார்.. தயாரிப்பின்போது என்னென்ன சிரமங்கள் வந்தன..? ஒரு யானையைக் கேட்க 4 யானைகளை ஆளாளுக்கு அழைத்து வந்து நிறுத்திய காமெடி..? ஜெயம் ரவியிடம் முன் கூட்டியே ஸ்கிரிப்ட்டை கொடுத்து நல்ல பெயர் எடுக்க நினைத்து இணை இயக்குநர்கள் செய்த வேலை.. இதனால் மறுநாள் ஸ்பாட்டில் ஜெயம் ரவியுடன் தனக்கு நேர்ந்த சங்கடங்கள்.. ஹீரோயின்கள் நால்வரையும் சமமாக நடத்துவதற்காக புரொடெக்சன்ஸ் பட்ட கஷ்டங்கள்.. என்று வரிசையாக சொல்லி முடித்தார். இதற்கு மேல் எதுவும் பேசக் கூடாது என்பதற்காகவே அந்த டாப்பிக்கை அதோடு விட்டுவிட்டேன்.
தியேட்டரில் அருகருகே அமர்ந்து படம் பார்த்தோம். முடிந்து வெளியேறும்போது தன் உதவி இயக்குநர் ஒருவருடன் பயணிக்க டூவீலரில் ஏறினார். “என்ன ஸார்.. கார் வாங்கலையா..?” என்றேன். வாய் விட்டுச் சிரித்தார். “அது தேவையற்ற சுமை.. இப்போதைக்கு இது போதும்” என்றார். அந்தச் சிரிப்பு இப்போதும் நினைவில் இருக்கிறது. தொடர்ந்து பல முறை பல இடங்களில் சந்திக்கும்போதெல்லாம் “இப்போ என்ன பண்றீங்க..?” என்பார். அவ்வளவுதான்.
இவரும், அமீரும் சேர்ந்து திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் பொறுப்புக்கு வந்தபோது இரண்டாவது முறையாகவும் அண்ணனுடன் மனஸ்தாபம் ஏற்பட்டது.
அதுவரையிலும் ஏறக்குறைய குருகுலமாக இருந்த அந்தச் சங்கத்தை அண்ணனும், அமீரும்தான் தொழிற் சங்கமாக மாற்றினார்கள். எந்த நேரம் ஆனாலும் அண்ணனும், அமீரும் இருக்கும் அறைக் கதவுகள் சங்கத்தில் திறந்தே இருக்கும். எப்போது போனாலும் சில உதவி இயக்குநர்கள் சூழத்தான் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள்.
“கேள்வி கேளுங்க.. இங்கே கேட்டால்தான் எதுவும் கிடைக்கும். எங்களையே கேள்வி கேளுங்க. அப்பத்தான் எங்களுக்கும் ஒரு பயம் இருக்கும்” என்றெல்லாம் தான் ஏற்றுக் கொண்ட கொள்கைப்படி அண்ணன் ஜனநாதன், உதவி இயக்குநர்களுக்குக் கற்றுக் கொடுக்க.. அன்றிலிருந்து இன்றுவரையிலும் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுக் குழு, அரசியல் கட்சிகளின் பொதுக் குழு மேடையாகிவிட்டது.
மேடையில் இருப்பவர்கள் குருவானவர்கள் என்ற எண்ணமெல்லாம் உதவி இயக்குநர்களிடத்தில் காணாமல் போய்.. அவர்களை ஒரு தொழிற் சங்கத்தின் தலைவர்களாகப் பார்க்கத் துவங்கிவிட்டார்கள். இதனால் என்ன ஆனது..? நிர்வாகப் பொறுப்புக்கு வரும் அனைத்து இயக்குநர்களும் உதவி இயக்குநர்களின் கோபத்தை எதிர்கொண்டார்கள். கேள்விகளை சந்தித்தார்கள். கோபப் பேச்சுக்களை தாங்கினார்கள். அந்தக் குரு-சிஷ்யர்கள் என்ற தொடர்பே அறுந்து போனது.
இதைத்தான் ஒரு நாள் அந்தச் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் முடிந்த அன்றைய மாலை அண்ணன் ஜனநாதனிடத்தில் கேட்டேன். அதை ஏற்கவே அவர் மறுத்துவிட்டார். “குரு-சிஷ்யர் உறவினால் இவர்களது வாழ்க்கை பொருளாதாரம் சீரழகிறது. இயக்குநர்களை குருவாக நினைப்பதால்தான் அவரிடத்தில் தன்னுடைய உரிமையைக் கேட்டு வாங்கத் தயங்குகிறார்கள். ஏன்.. சம்பளத்தையே கேட்டு வாங்க முடியாமல் திணறுகிறார்கள். நேரில் அழைத்து புகார் கொடுக்கச் சொன்னால்கூட தயங்குகிறார்கள். அது இவர்களது குடும்பத்தையே பாதிக்கும். அதனால் இது தொழிற் சங்கம்தான். அப்படியிருந்தால்தான் இந்த இயக்குநர்கள் அடுத்தக் கட்டத்திற்குப் போக முடியும்…” என்று தீர்மானமாகச் சொன்னார்.
இந்தப் பேச்சின் ஊடே அமீரும் புகுந்து, “எந்தெந்த இயக்குநர்கள் மொத்தக் காசையும் தயாரிப்பாளர்கள்கிட்ட வாங்கிட்டு உதவி இயக்குநர்களுக்குத் தராமல் பட்டை நாம் போட்டிருக்காங்க தெரியுமா..? அவங்க மேல இருக்குற மரியாதைக்காகத்தான் நான் மேடைல அதை சொல்லலை. இனிமேல் ‘குரு’ என்றெல்லாம் சொல்லி இவங்களை ஏமாத்த முடியாது…” என்றார் கோபத்துடன்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு முக்கியமான ஒரு சந்திப்பு ‘பொறம்போக்கு என்னும் பொதுவுடமை’ படத்தின்போதுதான். அந்தப் படத்தின் டைட்டில் ஒரு சிக்கலுக்குள்ளானது. நடிகர் நட்டி நட்ராஜ் தான் இயக்கப் போகும் ஒரு படத்திற்காக ‘பொறம்போக்கு’ என்பதை பதிவு செய்து வைத்திருந்தார். “இதனால் இந்தத் தலைப்பை ஜனநாதன் பயன்படுத்தக் கூடாது” என்று கூறி இயக்குநர்கள் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக அவரிடத்தில் போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, “நேர்ல வாங்க தம்பி.. பார்த்து நாளாச்சுல்ல..” என்றார். அப்போது அவர் தி.நகரில் இருக்கும் அமீரின் அலுவலகத்தில் இருந்தார். அங்கே போய் சந்தித்தேன்.
நடந்ததையெல்லாம் சொன்னார். “நட்ராஜிடம் சமாதானம் பேசிக்கிட்டிருக்கோம். முடிஞ்சிரும்” என்றார். “இதையே போடவா?” என்றேன். “இதைப் போட்டு என்ன சாதிக்கப் போறீங்க…?” என்றார். “ச்சும்மா ஒரு நியூஸ்தான்..” என்றேன். “இதுக்கெதுக்கு பத்திரிகையாளர்.. ஒரு டைப்பிஸ்ட்டே போதுமே..” என்றார் கண் சிமிட்டலுடன்.
கிண்டலைத் தாங்கிக் கொண்டேன். நல்ல பசி நேரம்.. என் முகத்தைப் பார்த்தே சாப்பிடவில்லை என்பதை உணர்ந்து கொண்டவர்.. உடன் இருந்த உதவி இயக்குநரிடம் “எனக்கும், தம்பிக்கும் சாப்பாடு எடுத்து வைப்பா. சாப்பிடுவோம்” என்றார். நான் மறுதலிக்கவில்லை. சேர்ந்தே உணவருந்தினோம்.
விடை பிரியும்போது என்னிடம் ‘புத்துயிர்ப்பு’ என்ற ரஷ்ய புத்தகத்தைக் கொடுத்து ‘படிச்சுப் பாருங்க’ என்றார். பின்பு வாசலில் வந்து நின்றபடியே ரஷ்ய இலக்கியங்கள், கம்யூனிஸம், டால்ஸ்டாய்ஸ், மார்க்ஸ், ஏங்கெல்ஸ் என்று பேசிக் கொண்டே போனார்.
அவைகளில் நான் படித்த சிலவற்றை மட்டுமே சொன்னேன். “இன்னும் நீங்க நிறைய படிக்கணும் தம்பி. படித்தால்தான் மற்றைய மனிதர்களை நாம் புரிந்து கொள்ள முடியும். சக மனிதர்களையே புரிந்து கொள்ள முடியவில்லையெனில் பிறகு நாம் ஒரு பத்திரிகையாளராகவும், படைப்பாளியாகவும் இருந்து என்ன பிரயோசனம்..?” என்றார். அண்ணன் கேட்ட நியாயமான கேள்வியைத் தாங்கிக் கொண்டு கிளம்பினேன்.
இதற்குப் பிறகும் சில ஆண்டுகளாக புத்தகக் கண்காட்சியில்தான் அவரைப் பார்க்க முடிந்தது. சில பட விழாக்களிலும் சந்தித்தேன். பேசும்போதெல்லாம் வெறுமனே ச்சும்மா சம்பிரதாயத்துக்காக பேசாமல் ஒரு விஷயத்தை முன் வைத்து நம்மிடம் பேசும் அந்த சுபாவத்தை வேறு எந்த இயக்குநரிடத்திலும் நான் இதுவரையிலும் கண்டதில்லை.
கடைசியாக அவர் இயக்கிக் கொண்டிருக்கும் ‘லாபம்’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கிவிட்டதை அறிந்து, அது குறித்து மேலும் தெரிந்து கொண்டு ஒரு செய்தியைப் போடலாம் என்பதற்காக போனில் தொடர்பு கொண்டேன்.
“மதியம் பேசுகிறேன் தம்பி…” என்றார். மதியம் அவரே என்னைத் தொடர்பு கொண்டார். படம் பற்றிய சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அத்தோடு நான் போனை வைத்திருந்தால் கடைசி பேச்சு வருத்தத்துடன் முடிந்திருக்காது.
போனில் பேசிக் கொண்டிருந்த நேரம் ரிலையன்ஸ் ஜியோவில் இருந்து ஒரு செக்கிங்கிற்காக ஆள் வந்துவிட்டார்கள். அதை அவரிடம் சொன்னேன். “எதுக்கு ரிலையன்ஸ்..?” என்றார்.. ஹாத்வே கம்பெனியுடன் எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றிச் சொல்லி.. “அதனால் ஜியோவுக்கு மாற்றிட்டேண்ணே…?” என்றேன்.
அவ்வளவுதான். அண்ணன் திடீரென்று கோபமானார். “முட்டாள்தனம் பண்றீங்க தம்பி. ஜியோக்காரனால் எப்படி இத்தனை அதிக ஸ்பீடை குறைவான தொகையில் கொடுக்க முடியுது..? யோசிச்சுப் பார்த்தீங்களா..! நாட்டையே வளைச்சுப் பிடிச்சிருக்கான். ஒரு தொழில்ல நஷ்டம் வந்தாலும் இன்னொரு துறைல அதை அள்ளிருவான். ஆனால் ஹாத்வேக்காரனுக்கு இதுதான் ஒரே தொழில். அவனைத்தான் நீங்க ஆதரிக்கணும்..” என்று ஆரம்பித்து ரிலையன்ஸ்காரன் என்னென்ன மோனோபாலி செய்து இந்தியாவையே கபளிகரம் செய்து வைத்துள்ளான் என்பதை ஒரு பத்து நிமிடம் மூச்சுவிடாமல் பேசி முடித்தார்.
எனக்கு சங்கடமாகிவிட்டது. என்ன சொல்வதற்கென்றெ தெரியவில்லை. கடைசியாக முத்தாய்ப்பாக.. “ஹாத்வேயை நீங்கதான் அட்ஜஸ்ட் செய்து போகணும். நல்லவங்களை தேர்ந்தெடுக்க கால் கடுக்க நின்னு ஓட்டு போடுறீங்கள்ல.. அது மாதிரி ஹாத்வே தரும் சங்கடத்தையும் வீட்டுப் பிரச்சினையா நினைச்சு சமாளிங்க. அதுக்காக எதுக்கு ஒரு பெரும் முதலாளிகிட்ட போய் சரண்டர் ஆகுறீங்க…?” என்று கேட்டார்.
பதில் சொல்லவே முடியாத ஒரு தருணம். என் மெளனத்தைப் பார்த்து அவரே “சரி.. எனக்கும் வேலை இருக்கு. ஆள் வந்துட்டாங்க. நீங்க நான் சொன்னதை வைச்சே ஒரு நியூஸ் போட்டிருங்க..” என்று சொல்லி போனை வைத்தார்.
ரொம்பவும் வருத்தமான நிகழ்வாக அவரது இறுதிப் பேச்சு என்னுடன் அமைந்திருந்தது எனக்கு இப்போதும் துக்கமாகத்தான் இருந்தது.
நேற்றைக்கு மதியம் நேரில் சென்று அண்ணனுக்கு இறுதி மரியாதையை செலுத்தினேன். ஏதோ நானும் ஒரு இயக்குநர் என்பதாக இல்லாமல் தனக்குப் பின்னால் ஒரு பள்ளிக்கூடத்தை உருவாக்க வேண்டும் என்பதுபோல் முனைப்புடன் இருந்ததுதான் அவரது பெருமை.
அவரது நிஜ வாழ்க்கையும், அவர் பேசும் கொள்கையும் வேறு, வேறல்ல.. பொருளாதாராச் சுமைகள் நிறைய இருந்தும் அத்தனையையும் சமாளித்துக் கொண்டு தான் ஒரு இடது சாரி சிந்தனையாளன் என்பதை இந்த முதலாளிகள் உலகமான திரையுலகத்தில் அழுத்தமாக பதிவு செய்து வாழ்ந்திருக்கிறார் என்றால் அது அவருக்கு மட்டுமே உரித்தானது.
எத்தனை, எத்தனை பேச்சுக்கள்.. சிந்தனைகள்.. ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சியில் முதன்முதலாக ஒருவரின் பேட்டி சூப்பர் டூப்பர் ஹிட்டானது என்றால் அது இவருடையதுதான். அதில் “தஞ்சை பெரிய கோவில் பற்றியும், சோழர்களின் அரசாட்சியைப் பற்றியும் ஒரு மிகப் பெரிய பிராஜெக்ட்டை செய்ய வேண்டும். அதற்கான முனைப்பில் இருக்கிறேன்…” என்றார். கேட்கவே சந்தோஷமாக இருந்தது.
ஆனால் அந்தக் கனவு இப்போது நிராசையாகிவிட்டது என்பதுதான் வேதனைக்குரியது.
ஒரு பொதுவுடமைவாதி எப்படி வாழ வேண்டும் என்பதற்கான இலக்கணமாகவும் வாழ்ந்திருக்கிறார் அண்ணன் ஜனநாதன். எப்போதும் உதவி இயக்குநர்கள் படை சூழ.. அவர்களது உதவியோடுதான் வாழ்ந்திருக்கிறார். இந்த இரண்டு நாட்களில் அவரது உற்றார், உறவுகளைவிடவும் அதிகமாகக் கண்ணீர் சிந்தியது அண்ணனின் உதவி இயக்குநர்கள்தான்.
அவர்களை அவர் வெறுமனே உதவியாளர்களாக வைத்திருக்கவில்லை. ஒரு சிந்தனைவாதிகளாக.. கொள்கைவாதிகளாக.. லட்சியவாதிகளாக.. பொதுவுடமைவாதிகளாக வளர்த்தெடுத்திருக்கிறார்.
இந்த 30 வருட திரையுலக வாழ்க்கையில் அவர் எடுத்ததோ சில படங்கள்தான். ஆனால் அவை அனைத்தும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. வித்தியாசமானவை. தமிழ்த் திரையுலகத்தின் பெயர் சொல்லக் கூடியவை. தன்னுடைய கொள்கைகளின்படிதான் இந்தப் படங்களின் கதைக் கருவை அவர் கையாண்டிருக்கிறார்.
கேமிராவுக்கு முன்பாக ஒரு ஜனநாதன்.. பின்பாக வேறொரு ஜனநாதன் என்று அவர் இருந்ததில்லை. இந்த முகமூடியில்லாத ஒரு பழக்கம்தான் அவரை இளம் இயக்குநர்களிடத்தில் அவரை ஒரு முன்னோடியாக கவர்ந்திழுத்திருந்தது.
அவர் அதிகம் நேசித்த கம்யூனிஸம் என்ற மாபெரும் தத்துவ இயக்கத்தைத் தோற்றுவித்த மார்க்ஸின் இறந்த நாளிலேயே இவரும் உயிர் துறந்தது சாலப் பொருத்தம். இந்தப் பாக்கியமும், கொடுப்பினையும் வேறு யாருக்குக் கிடைக்கும்..!?
தோழர் ஜனநாதனுக்கு என்னுடைய செவ்வணக்கம்..!!!